குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 397

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரியப்புக்க தலைவனைநோக்கி, “தலைவி நின் தண்ணளியால் வாழும் நிலையினள்; ஆதலின் விரைவில் மீண்டு வருவாயாக” என்பதுபடத் தோழி சொல்லியது.

நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ
நெய்தல் மா மலர்ப் பெய்த போல
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப!
தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு,
'அன்னாய்!' என்னும் குழவி போல, . . . . [05]

இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்,
நின் வரைப்பினள் என்தோழி;
தன் உறு விழுமம் களைஞரோ இலளே.
- அம்மூவனார்.

பொருளுரை:

முதிர்ந்த மொட்டுக்கள் முட்டைகள் போல் திரட்சியாக ஞாழல் மரத்தில் மலரும். வீசும் வாடைக்குளிர் காற்றினால் அவை கீழே உள்ள கருமையான குவளை மலர்கள் மீது மழையைப் போல் விழும். வலிய கடற்கரையின் தலைவனே, தாய்க் கோபமாக இருக்கும் பொழுதும் ‘அம்மா’ என்று அழும் குழந்தையைப் போல் என் தோழி இருக்கின்றாள். நீ அவளிடம் இனிமையாக இருந்தாலும், அவளுக்குத் துன்பம் கொடுத்தாலும், உன்னுடைய எல்லைக்கு உட்பட்டவள் அவள். உன்னையன்றி அவளுடைய துன்பத்தை நீக்குபவர், வேறு யாரும் இல்லை.

முடிபு:

சேர்ப்ப, இன்னாசெயினும் இனிது தலையளிப்பினும் என் தோழி நின்வரைப்பினள்; விழுமம் களைஞர் இலள்.

கருத்து:

நீ தலைவியினது துன்பங்கருதி விரைவில் வருவாயாக.

குறிப்பு:

களைஞரோ - ஓகாரம் அசைநிலை, இலளே - ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:

நனை - மொட்டுக்கள், முதிர் - முதிர்ந்த, ஞாழல் - ஞாழல் மரத்தின், சினை - முட்டைகள், மருள் - போல், திரள் - திரண்ட, வீ - மலர்கள், நெய்தல் மாமலர் - கருமையான குவளை மலர்கள், பெய்தல் போல - பெய்ததுப் போல், ஊதை - குளிர் காற்று, தூற்றும் - தூவும், உரவு நீர் சேர்ப்ப - வலிய கடற்கரையின் தலைவனே, தாய் உடன்று அலைக்கும் காலையும் - தாய் கோபமாக இருக்கும் பொழுதும், வாய் விட்டு - வாய் விட்டு, அன்னா என்னுங் குழவி போல - ‘அம்மா’ என்று அழும் குழந்தையைப் போல், இன்னா செயினும் - நீ அவளுக்கு துன்பம் கொடுத்தாலும், இனிது தலையளிப்பினும் - இனிமையாக அருள் செய்தாலும், நின் - உன்னுடைய, வரைப்பினள் - எல்லைக்கு உட்பட்டவள், என் தோழி - என் தோழி, தன் உறு விழுமம் - துன்பத்துடன் இருக்கின்றாள், களைஞரோ இலளே - அதை நீக்குவார் யாரும் இல்லை