குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 030

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரை பொருளின் (திருமணப் பரிசப் பொருள்) பொருட்டுப் பிரிந்த காலத்தில் தலைவியது ஆற்றாமைக்கான காரணத்தைத் தோழி வினவ, தலைவி கூறியது.

கேட்டிசின் வாழி - தோழி! - அல்கல்,
பெய்வலாளன் மெய் உற மரீஇய
வாய்த் தகைப் பொய்க் கனா மருட்ட, ஏற்று எழுந்து,
அமளி தைவந்தனனே; குவளை
வண்டு படு மலரின் சாஅய்த் . . . . [05]

தமியேன்; மன்ற அளியேன் யானே!
- கச்சிப்பேட்டு நன்னாகையார்.

பொருளுரை:

இதைக் கேளடி தோழி! இரவில் பொய் சொல்லுவதில் வல்லவனான என் காதலன் என் உடலை அணைத்ததைப் போல், உண்மையாகவே தோன்றிய பொய்க் கனவு ஒன்றை நான் கண்டேன். தூக்க மயக்கத்தில் அவன் என்று நினைத்து மெத்தையைத் தடவினேன். வண்டுகள் விழுந்து உழக்கிய குவளை மலரைப் போல நான் மெலிந்து, தனிமையில் தவிக்கின்றேன். நான் இரங்கத்தக்கவள்!

குறிப்பு:

மன்ற - மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). சின் - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை - ச. பாலசுந்தரம் உரை). கேட்டிசின் - சின் முன்னிலை அசை, மரீஇய - சொல்லிசை அளபெடை, கனா - கனவு, வு என்ற விகுதி கெட்டு அதற்கு முந்தைய குறில் எழுத்து நீண்டு நெடிலாக மாறியது, தைவந்தனனே - ஏகாரம் அசை நிலை, மலரின் - இன் உருபு ஒப்புப் பொருளது. சாஅய் - இசை நிறை அளபெடை, யானே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

கேட்டிசின் - கேட்பாயாக, வாழி - அசை நிலை, தோழி - தோழி, அல்கல் - இரவில், பொய்வலாளன் - பொய் சொல்லுவதில் வல்லவன், மெய்யுறல் மரீஇய - என் உடலை அணைத்ததுப் போல், வாய்த்தகைப் பொய்க் கனா - மெய்போலும் தன்மையுடைய பொய்க் கனவு, மருட்ட - மயக்கத்தை உண்டாக்கிய, ஏற்றெழுந்து - தூக்கத்திலிருந்து எழுந்து, அமளி தைவந்தனனே - மெத்தையை நான் தடவினேன், குவளை வண்டு படு மலரின் - வண்டுகள் விழுந்து உழக்கிய குவளை மலரைப் போல, சாஅய் - மெலிந்து, தமியேன் - தனிமையில் தவிக்கின்றேன், மன்ற - உறுதியாக, அளியேன் யானே - நான் இரங்கத்தக்கவள்