குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 010

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனுக்குத் தோழி வாயில் நேர்ந்தது.

யாய் ஆகியளே விழவு முதலாட்டி,
பயறு போல் இணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ் பூமென் சினைக்
காஞ்சி ஊரன் கொடுமை
கரந்தனள், ஆகலின் நாணிய வருமே . . . . [05]
- ஓரம்போகியார்.

பொருளுரை:

தலைவி ஆனவள் தலைவன் செல்வம் பெறுவதற்குக் காரணமாக இருப்பவள். பயற்றின் கொத்துப் போன்ற பூங்கொத்துக்களில் உள்ள பூந்தாது தங்கள் மேல் படும்படி உழவர்கள் வளைத்த நறுமணம் கமழ்கின்ற பூக்களையுடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட காஞ்சி மரத்தையுடைய ஊரனின் கொடுமையை அவள் மறைத்தாள் ஆதலால், இப்பொழுது அவன் நாணும்படி அவனை ஏற்றுக்கொள்ள வருகின்றாள்.

குறிப்பு:

முதலாட்டி (1) - உ. வே. சாமிநாதையர் உரை - தலைவன் செல்வம் பெற்று மகிழ்ந்து குலாவுவதற்குக் காரணமாக உள்ளாள், பொ. வே. சோமசுந்தரனார் உரை - தலையின் விழவிற்கு முதன்மையை ஆளும் தன்மையுடையவள் ஆயினள், விழவு - ஈண்டு இன்பம் என்னும் பொருட்டாய் நின்றது. இரா. இராகவையங்கார் உரை - உழவர் தம் மேனியிலும் தம் உழு பகட்டினும் தாது படிந்து தாம் உழு நிலத்துக் காஞ்சி மரங்களை வளைத்த செயல் தோன்ற வந்தாற்போலத் தலைவனும் அவன் தன் பாணனும் பரத்தையரை வளைத்துச் சேரியினிகழ்த்தியன மனையிற் தலைவி காண வந்து நின்றது கருதிற்று. உழவன் தலைவனாகவும் உழு பகடு பாணனாகவும் உழு நிலம் சேரியாகவும் காஞ்சி மரங்கள் பரத்தையராகவும் கொள்க. இறைச்சி - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - பூங்கொத்து உண்டாதனாலே உழவர் வளைத்த காஞ்சி மரத்தையுடைய ஊரன் என்றதனானே, தம்மிடத்து வேட்கை கொண்டமை உணர்ந்ததனானே பரத்தையரால் வளைக்கப்படும் இயல்பினன் என்பதாம். படீஇயர் - சொல்லிசை அளபெடை, வருமே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

யாய் ஆகியளே - தலைவி ஆனவள், விழவு முதலாட்டி - தலைவன் செல்வம் பெறுவதற்குக் காரணமாக இருப்பவள், பயறு போல் இணர பைந்தாது - பயற்றின் கொத்துப் போன்ற பூங்கொத்துக்களில் உள்ள பூந்தாது, படீஇயர் - தங்கள் மேல் படும்படி, உழவர் வாங்கிய - உழவர்கள் வளைத்த, கமழ் பூமென் சினைக் காஞ்சி ஊரன் - கமழ்கின்ற பூக்களையுடைய மெல்லிய கிளைகளைக் கொண்ட காஞ்சி மரத்தையுடைய ஊரன், கொடுமை கரந்தனள் - கொடுமையை அவள் மறைத்தாள், ஆகலின் - ஆதலால், நாணிய வருமே - அவன் நாணும்படி ஏற்றுக்கொள்ள வருகின்றாள்.