குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 051

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

வரைவு மலி (மணம் செய்து கொள்ளுதற்குரிய முயற்சி). வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி திருமண முயற்சிகளின் மிகுதி கூறியது

கூன் முண் முண்டகக் கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறித்
துறைதொறும் பரக்கும் தூ மணல் சேர்ப்பனை
யானும் காதலென், யாயும் நனி வெய்யள்,
எந்தையும் கொடீஇயர் வேண்டும், . . . . [05]

அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.
- குன்றியனார்.

பொருளுரை:

வளைந்த முள்ளையுடைய கழிமுள்ளியினது மிக்க குளிர்ச்சியுடைய கரிய மலர், நூல் அறுந்து விழுந்த முத்துக்களைப் போல் காற்றினால் சிதறி கடற்கரைத் துறையின்தோறும் பரவும் தூய மணலையுடைய கடற்கரையின் தலைவனை, நானும் விரும்புகின்றேன். நம் தாயும் மிகவும் விரும்புகின்றாள். நம் தந்தையும் அவனுக்கே உன்னை மணஞ் செய்துக் கொடுக்க விரும்புகின்றான். பழிச்சொற்களைக் கூறும் ஊர்மக்களும் அவனுடன் உன்னைச் சேர்த்துச் சொல்லுவார்கள்.

குறிப்பு:

உ. வே. சாமிநாதையர் உரை - முட்செடியாகிய முள்ளினிடத்திலுள்ள மலர் கைவருந்திப் பறித்துக் கொள்ளும்படி அமையாமல் காற்றினால் கவரப்பட்டு எளிதில் கொள்ளும்படி மணலில் பரந்து கிடப்பது போல, அரிதின் முயன்று உடன்பாடு பெற்று நிறைவுறுத்தும் வரைவு தலைவனுடைய முயற்சியால் மலிந்து எல்லாருடைய உடம்பாட்டையும் பெற்றது என்பது குறிப்பு. பொ. வே. சோமசுந்தரனார் உரை - முள்ளுடைய செடியின் மலர்ந்த மலரைக் காற்றுச் சிதறச் செய்து மணல் துறையை அழகுபடுத்தும் என்றது, காவல் மிக்க பெருங்குடிப் பிறந்த தலைவியை தெய்வம் தலைவனோடே கூட்டி அணி செய்யா நிற்கும் என்பது. இறைச்சி - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - முள் மிக்க தாழையின் குளிர்ந்த மலர், காற்றாற் சிதறுண்டு துறைதோறும் பரிக்கும் கடற்கரையினன் என்றதனானே இடையூற்றை மிகுதியாக உடைய களவகத்து இன்பமும் ஊராரால் தூற்றப்பட்டு மன்றத்திடத்துப் பரவுமாறு செய்திட்டான் என்பதாம். நூல் அறுந்த முத்து வடம் - அகநானூறு 225 - துளை முத்தின் செந்நிலத்து உதிர, அகநானூறு 289 - நெகிழ் நூல் முத்தின், குறுந்தொகை 51 - நூல் அறு முத்தின், குறுந்தொகை 104 - நூல் அறு முத்தின், கலித்தொகை 82 - கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன. முத்தின் - இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, காலொடு - காலினால், காற்றால், ‘ஒடு’ ‘ஆல்’ உருபின் பொருளில் வந்தது, கொடீஇயர் - சொல்லிசை அளபெடை, மொழிமே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

கூன் முண் முண்டக - வளைந்த முள்ளையுடைய கழிமுள்ளியினது, கூர்ம் பனி மா மலர் - மிக்க குளிர்ச்சியுடைய கரிய மலர், நூல் அறு முத்தின் - நூல் அறுந்து விழுந்த முத்துக்களைப் போல், காலொடு பாறித் துறைதொறும் பரக்கும் - காற்றினால் சிதறி கடற்கரைத் துறையின்தோறும் பரவும், தூ மணல் சேர்ப்பனை - தூய மணலையுடைய கடற்கரையின் தலைவனை, யானும் காதலென் - நானும் விரும்புகின்றேன், யாயும் நனி வெய்யள் - நம் தாயும் மிகவும் விரும்புகின்றாள், எந்தையும் கொடீஇயர் வேண்டும் - நம் தந்தையும் அவனுக்கே உன்னை மணஞ் செய்துக் கொடுக்க விரும்புகின்றான், அம்பல் ஊரும் அவனொடு மொழிமே - பழிச்சொற்களைக் கூறும் ஊர்மக்களும் அவனுடன் உன்னைச் சேர்த்துச் சொல்லுவார்கள்