குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 024

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி உரைத்தது.

கருங்கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவது கொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழையக் கொடியோர் நாவே . . . . [05]

காதலர் அகலக் கல்லென்றவ்வே.
- பரணர்.

பொருளுரை:

கரிய அடிப்பகுதியையுடைய வேப்ப மரத்தின் ஒளியுடைய மிகுந்த புதிய மலர்கள் என் தலைவன் இல்லாமல் வாடிச் சென்று விடுமோ? ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த வெள்ளை கிளைகளையுடைய அத்தி மரத்தின், ஏழு நண்டுகள் மிதித்த ஒரு பழம் போல, நான் வருந்துமாறு கொடியவர்களின் சொற்கள் கல்லென முழங்கின, என்னுடைய காதலர் அகன்றதால்.

குறிப்பு:

அகநானூறு 380 - நாவல் உண் துறை உதிர்த்த கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு தன் தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம் அலவன். குறுந்தொகை 24 - வேம்பின் ஒண் பூ யாணர் என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ, ஐங்குறுநூறு 350 - வேம்பின் ஒண் பூ உறைப்பத் தேம்படு கிளவி அவர்த் தெளிக்கும் பொழுதே. வேம்பின் ஒண் பூ (1) - இரா. இராகவையங்கார் உரை - பாண்டியரும் அவர் படையும் சூடிய சிறப்பால் ஒண்பூ என்றாள். கொடியோர் (5) - உ. வே. சாமிநாதையர் உரை - கொடிய மகளிருடைய நாக்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை - புறங் கூறுவோரின் நா, தமிழண்ணல் உரை - கொடிய ஊர்ப்பெண்டிரின் நாக்கள். யாணர் - புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83). என்னை, என் ஐ - அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 50). கொல் - ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், இரக்கக்குறிப்புமாம், கொல்லோ - ஓகாரம் அசைநிலை, கல்லென்றவ்வே - விரிக்கும் வழி விரித்தல், ஏ - அசை நிலை, அதவத்து - அத்து சாரியை.

சொற்பொருள்:

கருங்கால் வேம்பின் - கரிய தாளையுடைய (அடிப்பகுதியையுடைய) வேப்ப மரத்தின், ஒண் பூ யாணர் என் ஐ இன்றியும் கழிவது கொல்லோ - ஒளியுடைய மிகுந்த புதிய மலர்கள் என் தலைவன் இல்லாமல் சென்று விடுமோ, ஆற்று அயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து - ஆற்றங்கரையில் முளைத்து வளர்ந்த வெள்ளை கிளைகளையுடைய அத்தி மரத்தின், எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல - ஏழு நண்டுகள் மிதித்த ஒரு பழம் போல, குழைய - நான் வருந்த, கொடியோர் நாவே - கொடியவர்கள் சொற்கள், காதலர் அகல - என்னுடைய காதலர் அகன்றதால், கல்லென்றவ்வே - கல்லென முழங்கின