குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 112

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாக, “நான் ஊரார் அலருக்கு அஞ்சி மறைந்து ஒழுகுகின்றேன்; என் காமம் மெலிகின்றது; அதனை முற்றும் விடும் நிலையைப் பெறும் ஆற்றலில்லேன்” என்று கூறித் தலைவி வருந்தியது.

கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள் அற விடினே உள்ளது நாணே
பெரும் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நார் உடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே . . . . [05]
- ஆலத்தூர் கிழார்.

பொருளுரை:

தோழி! இதனைக் காண்பாயாக! பிறர் கூறும் பழிக்கு அஞ்சினால், காமம் வருத்தும். பிறரின் பழிச்சொல்லுக்கு அஞ்சி அதை விட்டால், என்னிடம் இருப்பது நாணம் மட்டுமே ஆகும். பெரிய களிற்று யானை இழுத்து முறித்து நிலத்தில் வீழாத நார் மிகுந்த ஒடிந்த கிளையைப் போன்றது, தலைவர் நுகர்ந்த என்னுடைய பெண்மை நலம்.

குறிப்பு:

வரைவு நீட்டித்தவழித் தலைவி தோழிக்குச் சொல்லியது. இரா. இராகவையங்கார் உரை - நாருடை ஒசியல் என்றதனால் தேய்ந்த உயிரில் தொங்குகின்ற பெண்மையைக் குறித்தாள். பெருங்களிறு வாங்க முரிந்த ஒசியலை உவமை கூறியதால், என் மெல்லிய நாணால் அவர் வலியைத் தடுத்து என் பெண்மையைத் தாங்ககில்லேன் என்றவாறு. அகநானூறு 120 - பெருநாண் அணிந்த நறு மென் சாயல் மாண் நலம் சிதைய. சின் - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம், இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை - ச. பாலசுந்தரம் உரை). உ. வே. சாமிநாதையர் உரை - களிறு வளைத்துத் தழைகளை உண்டதனால் ஒடிந்த மரக்கிளையானது தன்னுடைய இயல்பான நிலையை ஒழிந்து மீட்டும் அந்நிலையைப் பெறாத வண்ணம் இருப்பினும், முற்ற ஒடிந்து கீழே விழுந்து வாடி உலராமல் நாரின் தொடர்பினால் மீண்டும் தழைக்கும் நிலை இருத்தலைப் போல, தலைவனால் உண்ணப்பட்ட நலன் பண்டைய நிலைமையைப் பெறாத நிலை இருப்பினும், முற்றும் அழிந்தொழியாமல் தலைவர் வரைவார் என்னும் கருத்தினால் பின் சிறக்கத்தக்க நிலையில் அமைந்துள்ளதென்று உவமையை விரித்துக் கொள்க. படாஅ - இசை நிறை அளபெடை. கண்டிசின் - இசின் முன்னிலை அசை. அற்றே - ஏ அசை நிலை, நலனே - ஏ அசை நிலை

சொற்பொருள்:

கௌவை அஞ்சின் - பிறர் கூறும் பழிக்கு அஞ்சினால், காமம் எய்க்கும் - காமம் வருத்தும், எள் அற விடினே - பிறரின் பழிச்சொல்லுக்கு அஞ்சி அதை விட்டால், உள்ளது நாணே - என்னிடம் இருப்பது நாணம் மட்டுமே ஆகும், பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ நார் உடை ஒசியல் அற்றே - பெரிய களிற்று யானை இழுத்து முறித்து நிலத்தில் வீழாத நார் மிகுந்த ஒடிந்த கிளையைப் போன்றது, கண்டிசின் - காண்பாயாக தோழி - தோழி, அவர் உண்ட என் நலனே - தலைவர் நுகர்ந்த என்னுடைய பெண்மை நலம்