குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 034

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனே மகட் பேசி வரைந்து கொள்ள வந்துள்ளான் என்று தோழி தலைவிக்கு அறிவுரைத்தது.

ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர்,
தமியர் உறங்கும் கௌவையின்றாய்,
இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே,
முனாஅது யானையங்குருகின் கானலம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம் . . . . [05]

குட்டுவன் மரந்தை அன்ன, எம்
குழை விளங்கு ஆய் நுதல் கிழவனும் அவனே.
- கொல்லிக் கண்ணனார்.

பொருளுரை:

முன்னிடத்தில் உள்ள கடற்கரையில் உள்ள யானையங்குருகின் பெரிய தொகுதியானது, பகைவரைக் கொன்ற மறவர்களின் வென்று முழங்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சுகின்ற இடமான சேரனின் மரந்தை நகரத்தைப் போன்ற பொலிவுடைய, அடர்ந்து விளங்கும் கூந்தலையும் அழகிய நெற்றியையுமுடைய உன்னை, மணம் புரிய வருகின்றான் நம் தலைவன். முன்பு, உன்னை விட்டு நீங்காத நம் தாயர் உன்னைக் கண்டித்தனர். உன் களவு ஒழுக்க நிலை அறியாது அவனுடன் மணம் தகாது என்று மறுத்துக் கூறினார்கள் உன் தந்தையும் ஐமாரும். தங்கள் தலைவருடன் கூடாது, தனியாக உறங்கும் வருத்தம் தங்களுக்கு இல்லாதவர்களாய், இவ்வூரார், அவன் உன்னை வரைந்துக் கொள்வான் என்ற இனிய செய்தியைக் கேட்டு, மகிழ்ச்சி அடையட்டும்.

குறிப்பு:

இப்பாடலில் உள்ள பல சொற்களுக்கு அறிஞர்களின் உரைகளில் மிகுந்த வேறுபாடு உள்ளன. ஓவலர் (1) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - தலைவியைவிட்டு நீங்காத செவிலி, நற்றாய் முதலியோர். மறுப்ப (1) - உ. வே. சாமிநாதையர் உரை - தோழியர் பல காரணங்கள் கூறி இங்ஙனம் வருந்துதல் தகாதென்று மறுத்துக் கூறவும், பொ. வே. சோமசுந்தரனார் உரை - களவில் கூடியது தேறாத தந்தை முதலியோர் தலைவர்க்கு மணம் மறுக்கவும். முன்னர் மறுத்துப் பின்னர்த் தலைவனுடைய தகுதி கண்டு உடன்பட்டனர் என்க. தமியர், இவ்வூரார் (2, 4) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - தமியர் என்றும் இவ்வூரார் என்றும் படர்க்கைப் பலர்பாலிற் கூறினாளேனும், ஈண்டு அது தலைவியைச் சுற்றியே பேசப்பட்டது என்க. மரந்தை (6) - மாந்தை என்று சில உரைகளில் காணப்படுகின்றது. குழை விளங்கு ஆய் நுதல் ஆய் நுதல் (7) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - கூந்தல் புரண்டு விளங்காநின்ற பலரும் ஆராய்ந்து நன்றென்றற்குக் காரணமான நெற்றியுடையாள், உ. வே. சாமிநாதையர் உரை - பனிச்சை விளங்குகின்ற அழகிய நெற்றி, தமிழண்ணல் உரை - கூந்தல் அடர்ந்து விளங்கும் அழகிய நெற்றி, இரா. இராகவையங்கார் உரை - குழலை அடுத்து விளங்கும் நுணுகிய நுதலையுடையவள். வரலாறு: குட்டுவன், மரந்தை. இவ்வூரே - ஏகாரம் அசை நிலை, அம் - சாரியை, வெரூஉம் - இன்னிசை அளபெடை, முனாஅது - இசைநிறை அளபெடை, ஆய் நுதல் - அன்மொழித்தொகை.

சொற்பொருள்:

ஒறுப்ப ஓவலர் - நீங்காத தாயர் கண்டிக்க, மறுப்ப தேறலர் - களவு ஒழுக்கத்தை அறியாதவர்களாக தந்தையும் ஐமாரும் திருமணத்தை மறுக்க, தமியர் உறங்கும் கௌவை இன்றாய் - தங்கள் தலைவர்களுடன் இல்லாது தனியாக உறங்குபவர்கள் துன்பம் இல்லாமல், இனியது கேட்டு இன்புறுக இவ்வூரே - இனிய திருமணச் செய்தியைக் கேட்டு இவ்வூரார் இன்புறுக, முனாஅது - முன்னால் உள்ளது, யானையங்குருகின் கானல் அம் பெருந்தோடு - கடற்கரையில் உள்ள யானையங்குருகின் பெரிய தொகுதியானது, அட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம் - பகைவரைக் கொன்ற மறவர்களின் வென்று முழங்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சும், குட்டுவன் மரந்தை அன்ன - சேரனின் மரந்தை நகரத்தைப் போன்று, எம் குழை விளங்கு ஆய் நுதல் கிழவனும் அவனே - எம்முடைய கூந்தல் அடர்ந்து விளங்கும் அழகிய நெற்றி உடைய உனக்கு உரிமையுடையவனும் அவனே