குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 047

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் இரவில் வந்து பழகும் காலத்தில் அவனை விரைந்து மணம் செய்யும்படி தூண்ட எண்ணிய தோழி, நிலாவிற்கு உரைப்பாளாய் ‘நீ இவ்வாறு இரவில் வருவது களவிற்கு நல்லதில்லை’ எனக் கூறி இரவுக்குறி மறுத்தது. முன்னிலைப் புறமொழியாக கூறியது. நிலாவிற்கு உரைப்பாளாய்த் தோழி உரைத்தது (முன்னிலைப் புறமொழி - கூறப்படும் செய்தியைக் கேட்டு அறிதற்குரியவர் முன்னே இருப்பவும் அவரை விளித்துக் கூறாமல் வேறு ஒருவரையேனும் பிறிதொரு பொருளையேனும் விளித்துக் கூறுவது - தொல்காப்பியம், கற்பியல் 26, நச்சினார்க்கினியர் உரை).

கருங்கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை, நெடு வெண்ணிலவே!
- நெடுவெண்ணிலவினார்.

பொருளுரை:

நீண்ட கதிர்களையுடைய வெண்ணிலாவே! கரிய அடியை உடைய வேங்கை மரத்தின் (மஞ்சள் நிற) மலர்கள் பாறை மீது விழுவதால் பாறை பெரிய புலிக் குட்டியைப் போல் தோன்றும். அவ்வாறு காணப்படும் காட்டு வழியே இரவில் களவு ஒழுக்கத்திற்கு வரும் தலைவனுக்கு நீ நன்மை செய்யவில்லை.

குறிப்பு:

வேங்கை மலரும் புலியும் - அகநானூறு 12 - வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலி செத்து வெரீஇய புகர் முக வேழம், அகநானூறு 141 - புலிக்கேழ் உற்ற பூ இடைப் பெருஞ்சினை நரந்த நறும்பூ நாள் மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை, அகநானூறு 227 - புலிக் கேழ் வேங்கை, அகநானூறு 228 - வேங்கை ஒள் வீப் புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், நற்றிணை 389 - வேங்கையும் புலி ஈன்றன, குறுந்தொகை 47 - வேங்கை வீ உகு துறுகல் இரும்புலிக் குருளையின் தோன்றும், ஐங்குறுநூறு 396 - புலிப் பொறி வேங்கைப் பொன் இணர். இரும்புலிக் குருளையின் (2) - உ. வே. சா. உரை - பெரிய புலிக்குட்டியைப் போன்று, இரா. இராகவையங்கார் உரை - பெரிய புலியின் குட்டியினைப் போன்று. இறைச்சி - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - வேங்கை மலர் வீழ்ந்த கற்கள் புலியின் குருளைப் போல அச்சந்தரும் என்றதனானே, வரைவு உடன்படுவாராகிய எமது தமர் வரைவுடன் படார் போல உனக்கு அச்சம் செய்கின்றனர் என்பதாம். குருளையின் - இன் உருபு ஒப்புப் பொருளது,

சொற்பொருள்:

கருங்கால் வேங்கை - கரிய அடியை உடைய வேங்கை மலர்கள், வீ உகு - மலர்கள் உதிர்ந்த, துறுகல் - பாறை, இரும் புலிக் குருளையின் தோன்றும் - பெரிய புலிக் குட்டியைப் போல் தோன்றும், காட்டிடை - காட்டில், எல்லி வருநர் - இரவில் வருபவர், களவிற்கு நல்லை அல்லை - களவு ஒழுக்கத்திற்கு நீ நல்லது செய்யவில்லை, நெடு வெண்ணிலவே - நீண்ட கதிர்களையுடைய வெண்ணிலாவே