குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 029

குறிஞ்சி - தலைன் கூற்று


குறிஞ்சி - தலைன் கூற்று

பாடல் பின்னணி:

இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன், தலைவியுடன் கூடுவதற்கு அவாவுற்ற தன் நெஞ்சிடம் இவ்வாறு கூறுகின்றான்.

நல் உரை இகந்து, புல் உரை தாஅய்ப்
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல,
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிது அவா உற்றனை நெஞ்சே, நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு . . . . [05]

மகவுடை மந்தி போல,
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
- ஔவையார்.

பொருளுரை:

நல்ல உரைகள் நீங்கி பயனற்ற உரைகள் பரவப்பட்டு, பெய்யும் மழை நீரை ஏற்றுக் கொண்ட சுடப்படாத மண் கலத்தைப் போல, உள்ளத்தினால் பொறுக்க முடியாத ஆசை வெள்ளத்தில் நீந்தி, கிடைப்பதற்கு அரியதாய் உள்ளதன் மீது நீ விருப்பம் கொண்டாய் என் நெஞ்சே! உயர்ந்த மரக்கிளையில் தன் குட்டியால் தழுவப்பெற்ற பெண் குரங்கைப் போல மனம் பொருந்த உன்னுடைய கருத்தைக் தழுவி உன் குறையை நிறைவேற்றுபவர்களை நீ பெறுவாயின், உன்னுடைய போராட்டம் மிகவும் நன்றாகும்.

குறிப்பு:

மகவுடை மந்தி போல அகன் உறத் தழீஇ (6-7) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - குட்டியை உடைய மந்தி அதனை அகனுறத் தழுவிக் கொள்ளுமாறு போல, உ. வே. சாமிநாதையர் உரை - குட்டியை உடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல, இரா. இராகவையங்கார் உரை - தன்னைத் தழுவிய மகவைத் தான் தழுவி அணைத்து ஏறும் மந்தி போல. இரா. இராகவையங்கார் உரை - விரைவில் வரைந்து கொண்டு கூடுவதே நல்லுரைக்குரிய செயல் என்றும் வரைந்து கொள்ள நினையாது பின்னுங் களவிற் கூடுதல் புல்லுரைக்குரியது என்றும் கருதியவாறாம். நற்றிணை 308 - ஈர் மண் செய்கை நீர் படு பசுங்கலம் பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு எம் பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே. பொ. வே. சோமசுந்தரனார் உரை - நல்லுரை - தன் விருப்பத்திற்கு இணங்கி இரவுக்குறியில் வர உடன்படுதல், புல்லுரை - இரவுக்குறி மறுத்தல். பெரிதால் - பெரிது + ஆல், ஆல் = அசைச்சொல், பெறினே - ஏகாரம் அசை நிலை. பசுங்கலம்: ஈர் மண் செய்கை நீர்படு பசுங்கலம் பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு - நற்றிணை 308. நீர்க்கு (2) - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - ‘நீர்க்கு’ என்ற நான்காவது, ‘நீரை’ என இரண்டாவதன் பொருட் கண் வந்தது. வேற்றுமை மயக்கம். என்னை? யாதன் உருபின் கூறிற்று ஆயினும் பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும் (தொல்காப்பியம், வேற்றுமை மயங்கியல் 23).

சொற்பொருள்:

நல் உரை இகந்து - நல்ல உரைகள் நீங்கி, புல் உரை - பயனற்ற உரைகள், தாஅய் - பரவி, பெயல் நீர்க்கு ஏற்ற - பெய்யும் மழை நீரை ஏற்றுக் கொண்ட , பசுங்கலம் போல - சுடப்படாத மண் கலத்தைப் போல, உள்ளம் தாங்கா - உள்ளத்தினால் பொறுக்க முடியாத, வெள்ளம் நீந்தி - ஆசை வெள்ளத்தில் நீந்தி, அரிது - கிடைப்பதற்கு அரிது, அவா உற்றனை நெஞ்சே - விருப்பம் கொண்டாய் என் நெஞ்சே, நன்றும் பெரிதால் - மிகவும் பெருமையுடையது, அம்ம - ஓர் அசைச் சொல், நின் பூசல் - உன்னுடைய போராட்டம், உயர் கோட்டு மகவுடை மந்தி போல - உயர்ந்த மரக்கிளையில் குட்டியையுடைய பெண் குரங்கைப் போல, அகன் உறத் தழீஇ - மனதில் உள்ளதைத் தழுவி (தழீஇ - சொல்லிசை அளபெடை), கேட்குநர்ப் பெறினே - கேட்பவர்களைப் பெறுவாயின்