குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 343

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தோழி தலைவியிடம், “நீ தலைவனுடன் செல்வதை விரும்பி மேற்கொள்வாயாக” என்றது.

நினையாய் வாழி - தோழி! - நனை கவுள்
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை
வெண்கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக்
கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை . . . . [05]

வாடு பூஞ் சினையின், கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயருமாறே.
- ஈழத்துப் பூதன்றேவனார்.

பொருளுரை:

நீ நீடு வாழ்வாயாக தோழி! மதத்தால் கன்னத்தில் நீர் வடிந்த, தலைமையுடைய யானையின் அழகிய முகத்தில் பாய்ந்ததால், மிகுந்த வலிமையையுடைய பிளந்த வாயையுடைய ஆண் புலி ஒன்று, அந்த யானையின் வெள்ளைத் தந்தத்தை தன் குருதியால் சிவப்பாகச் செய்து, மலை பிளவில் உள்ள கோடைக் காற்று வீழ்த்திய கரிய அடியை உடைய வேங்கை மரத்தின் வாடிய மலர்களையுடைய கிளையைப் போல் இறந்து கிடக்கும், உயர்ந்த மலையுடைய நாட்டையுடைய தலைவனுடன் உடன்போக்கில் செல்லுவதற்கு நீ எண்ணுவாயாக!

முடிபு:

தோழி, நாடனொடு பெயருமாறு நினையாய்; வாழி!

கருத்து:

நீ தலைவனுடன் செல்லுதலே நன்று.

குறிப்பு:

கலித்தொகை 38 - உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக் கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை, கலித்தொகை 46 - வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும், குறுந்தொகை 343 - கருங்கால் வேங்கை வாடு பூஞ்சினையின் கிடக்கும். வேங்கை வாடு பூஞ்சினையின் கிடக்கும் (5-6) - உ. வே. சாமிநாதையர் உரை - கன் முழையிலுள்ள, மேல் காற்று வீழ்த்திய, கரிய அடியையுடைய வேங்கை மரத்தினது வாடிய பூவையுடைய கிளையைப் போல இறந்து கிடக்கும், இரா. இராகவையங்கார் உரை - புலி ஏற்றை யானை முகம் பாய்ந்ததால் செம்மறுக் கொளீஇச் சினையின் விடர் முகைக் கிடக்கும் என்றியைக்க. உ. வே. சாமிநாதையர் உரை - ‘அவனது நாட்டில் உள்ள யானை தன்னை எதிர்த்த மிகுவலியுடைய புலியைத் தான் எதிர்க்காமலே கொம்பினால் வீழச் செய்தது’ என்பதால், அந்நாட்டுக்குரியனாகிய தலைவனும் இடையூறுகளை எளிதில் வெல்லும் ஆற்றல் உடையவன் என்பதை உய்த்துணர வைத்தாள். பெயருமாறே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

நினையாய் - எண்ணுவாயாக, நினைப்பாயாக, வாழி - நீ வாழ்வாயாக, தோழி - தோழி, நனை கவுள் அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென - மதத்தால் கன்னத்தில் நீர் வடிந்த தலைமையுடைய யானையின் அழகிய முகத்தில் பாய்ந்ததால், மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை - மிகுந்த வலிமையையுடைய பிளந்த வாயையுடைய ஆண் புலி, வெண்கோடு செம் மறுக் கொளீஇய - வெள்ளைத் தந்தத்தை குருதியால் சிவப்பாகச் செய்து, விடர் முகைக் கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை - மலை பிளவில் உள்ள கோடைக் காற்று வீழ்த்திய கரிய அடியை உடைய வேங்கை மரம், வாடு பூஞ்சினையின் கிடக்கும் - வாடிய மலர்களையுடைய கிளையைப் போல் இறந்து கிடக்கும், உயர் வரை நாடனொடு பெயருமாறே - உயர்ந்த மலையுடைய நாட்டையுடைய தலைவனுடன் செல்லுவதற்கு