குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 027

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைவி உரைத்தது. “நான் ஆற்றியிருப்பவும் என் மாமையழகு வீணாகும்படி அதனைப் பசலை உண்டது” எனக் கூறியது.

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம்பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என் ஐக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே . . . . [05]
- வெள்ளிவீதியார்.

பொருளுரை:

நல்ல ஆவின் (பசுவின்) இனிய பால், அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், கறக்கும் கலத்திலும் விழாது, மண்ணில் வீணே சிந்தினாற்போல், தேமல் படர்ந்த என் அல்குலின் கருமை அழகை பசலை உண்டதால், அது எனக்கும் பயன்படாது, என் தலைவனுக்கும் இன்பம் செய்யாது.

குறிப்பு:

பொ. வே. சோமசுந்தரனார் உரை - இச்செய்யுள் வெள்ளிவீதியார் என்னும் நல்லிசைப் புலமையாட்டியார் தம் கணவனைப் பிரிந்த காலத்தே கூறியது என்றும் தம் பெயரையாதல் கணவன் பெயரையாதல் கூறின் புறமென்று அஞ்சி வாளா கூறப்பட்டு அகமாயிற்று என்றும் கூறுப. இரா. இராகவையங்கார் உரை - இது வெள்ளிவீதியார் என்னும் நல்லிசைப் புலமை மெல்லியர் தம் தலைவன் பிரிவிடை ஆற்றாது சொல்லியது என்பது (தொல்காப்பியம், அகத்திணையியல் 54) நச்சினார்க்கினியரின் உரையால் அறியப்படுகின்றது. இப்பாடலைக் கூறிய பின்னர்ப் பிரிவு பொறாது தம் காதலர் உள்ள ஊருக்குச் செல்லத் தலைப்பட்டனர் என்பது ஒளவையாரின் பாட்டால் (அகநானூறு 147 வரிகள் 8-10 “நெறிபடு கவலை நிரம்பா நீளிடை வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே”) அறியப்படுகின்றது. எனக்கும் என் ஐக்கும் (3) - உ. வே. சாமிநாதையர் உரை - உவமையிரண்டனுள் முன்னது எதிரது; பின்னது இறந்தது தழீஇயது. திதலை அல்குல் (5) - தமிழண்ணல் உரை - தேமல் படர்ந்த அடிவயிற்றின் அடிப்பகுதி. என்னை, என் ஐ - அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 50). உணீஇயர் - செய்யியர் என்னும் வாய்பாட்டு வினையெச்சம், சொல்லிசை அளபெடை. கவினே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

கன்றும் உண்ணாது - அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், கலத்தினும் படாது - கறக்கும் கலத்திலும் விழாது, நல் ஆன் தீம்பால் - நல்ல ஆவின் (பசுவின்) இனிய பால், நிலத்து உக்காஅங்கு - மண்ணில் வீணே சிந்தினாற்போல், எனக்கும் ஆகாது - எனக்கும் பயன்படாது, என் ஐக்கும் உதவாது - என் தலைவனுக்கும் இன்பம் செய்யாது, பசலை உணீஇயர் வேண்டும் - பசலை தான் உண்ணுதலை விரும்பும், திதலை அல்குல் என் மாமைக் கவினே - அல்குலில் தேமல் படர்ந்த என்னுடைய கருமை அழகு