குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 108

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பருவங்கண்டு வருந்திய தலைவி, தோழியிடம் கூறியது.

மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்று வயின் படரப் புறவில்,
பாசிலை முல்லை ஆசில் வான் பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று,
உய்யேன் போல்வல் தோழி, யானே . . . . [05]
- வாயிலான் தேவனார்.

பொருளுரை:

தோழி! முகில்கள் விளையாடும்இடமாகிய மலையைச் சேர்ந்த சிற்றூரில் மேய்வதற்காகச் சென்ற பசுக்கள் தம்முடைய கன்றுகளை நினைத்துத் திரும்புகின்றன. முல்லை நிலத்தில் பசுமையான இலைகளையுடைய முல்லைக் கொடிகளின் குற்றமில்லாத வெள்ளை மலர்கள் சிவந்த வானத்தைப் போன்று அழகு கொண்டுள்ளன. இப்பொழுது தலைவர் வராவிட்டால் நான் உயிர் வாழ மாட்டேன்.

குறிப்பு:

யானே - ஏகாரம் அசை நிலை. உய்யேன் போல்வல் (5) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - உயிர் வாழ்ந்திரேன் போலும், தமிழண்ணல் உரை - உயிர் வாழேன் போலத் தோன்றுகின்றது, உ. வே. சாமிநாதையர் உரை - உய்யேன் என்பது உயிர் வாழேன், போல்வல் என்பது அசை நிலை. இறைச்சிகள் - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - (1) கன்றை மறவாது மாலைக் காலத்து கறவை அக்கன்றிடத்துப் படரும் புறவு என்றதனானே நம்மை மறவாது குறித்த காலத்து நம்மிடம் வரவேண்டியவர் வந்திலர்; அவர் அன்பிருந்தவாறு என்னை? என்பதாம். (2) மலருங் காலத்தைப் பெற்று முல்லை செவ்வி கொண்டது என்றதனானே, அழகு மிகுதற்கேற்ற குறித்த காலத்தில் செவ்வி அழிவோமாயினோம்; எவ்வாறு உய்குவோம்! என்பதாம்.

சொற்பொருள்:

மழை விளையாடும் - முகில்கள் விளையாடும், குன்று சேர் சிறுகுடி - மலையைச் சேர்ந்த சிற்றூர், கறவை - பசுக்கள், கன்று வயின் படர - தம் கன்றுகளை நோக்கிச் செல்ல, புறவில் - முல்லை நிலத்தில், பாசிலை முல்லை - பசுமையான இலைகளையுடைய முல்லை, ஆசில் வான் பூ - குற்றமில்லாத வெள்ளை மலர்கள், குற்றமில்லாத சிறந்த மலர்கள், செவ்வான் சிவந்த வானம், செவ்வி கொண்டன்று - அழகைக் கொண்டது, உய்யேன் போல்வல் - உயிர் வாழ மாட்டேன் போல, தோழி - தோழி, யானே - நான்