குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 215

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாமை எய்திய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.

படரும் பைபயப் பெயரும் சுடரும்
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர்
வருவர் கொல், வாழி தோழி! நீர் இல்
வறுங்கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை
குறும்பொறை மருங்கின் அமர் துணை தழீஇக் . . . . [05]

கொடுவரி இரும்புலி காக்கும்,
நெடுவரை மருங்கின் சுரன் இறந்தோரே.
- மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்.

பொருளுரை:

நீடு வாழ்வாயாக, தோழி! உன் துன்பமும் உன்னை விட்டு மெல்ல மெல்ல நீங்கும். ஒளிர்கின்ற ஞாயிறும் பெரிய மலையின் பின் சென்று மறையும். நீர் இல்லாத வறிய குளத்தைத் துழவிய விளங்குகின்ற மருப்புகளை (தந்தங்களை) உடைய யானை, சிறிய மலையின் அருகில், தான் விரும்பும் பெண் யானையைத் தழுவி கொண்டு வளைந்த கோடுகளையுடைய பெரிய புலி தாக்காது பாதுகாக்கும் உயர்ந்த மலையின் அருகில் உள்ள பாலை நிலத்தைக் கடந்து சென்ற நம் தலைவர், இன்று வருவார்.

குறிப்பு:

பொ. வே. சோமசுந்தரனார் உரை - நீரில் வறுங் கயத்தைத் துழவிய களிற்று யானை குறும்பொறை மருங்கில் பிடியைப் புலி தாக்காமல் காக்கும் என்றது பொருள் நிமித்தம் வறிய பாலை நிலத்தே சென்ற நம் தலைவர் விரைவில் மீண்டு வந்து நின்னைப் பிரிவுத் துன்பம் வருத்தாமல் அருளுவர் என்னும் குறிப்பிற்று. இரா. இராகவையங்கார் உரை - முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்த நிலன் ஆதலால் குறும்பொறை மருங்கும் நெடுவரை மருங்கும் கூறினாள். தமிழண்ணல் உரை - விலங்குகள் மக்களின் உரிப் பொருளைச் சிறப்பிக்க வருவதே இறைச்சி. யானை தன் பிடியைக் காப்பதைப் பார்க்கும் தலைவர் அன்பு தூண்டப் பெற்று நிச்சயம் திரும்புவர் என்பது குறிப்பு. இதுவே இறைச்சிப் பொருள். ‘அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும் வன்புறை ஆகும் வருந்திய பொழுதே’ (தொல்காப்பியம், பொருளியல் 35) என்பதற்கு இது தக்க சான்றாகும். பைபய - பையப்பைய பைபய என மருவியது. துழைஇய - சொல்லிசை அளபெடை. தழீஇ - சொல்லிசை அளபெடை. சுரன் - சுரம் என்பதன் போலி. இறந்தோரே - ஏ அசை நிலை.

சொற்பொருள்:

படரும் பைபயப் பெயரும் - துன்பமும் மெல்ல மெல்ல நீங்கும், சுடரும் என்றூழ் மா மலை மறையும் - ஒளிர்கின்ற ஞாயிறும் பெரிய மலையின் பின் சென்று மறையும், இன்று அவர் வருவர் கொல் - இன்று அவர் வருவார், வாழி தோழி - நீடு வாழ்வாயாக தோழி, நீர் இல் வறுங்கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை - நீர் இல்லாது உலர்ந்த குளத்தை துழவிய விளங்குகின்ற மருப்புகளை உடைய யானை, குறும்பொறை மருங்கின் - சிறிய மலையின் அருகில், சிறிய பாறையின் அருகில், அமர் துணை தழீஇ - தான் விரும்பும் பெண் யானையைத் தழுவிக் கொண்டு, கொடுவரி இரும்புலி காக்கும் - வளைந்த கோடுகளையுடைய பெரிய புலி தாக்காது பாதுகாக்கும், நெடுவரை மருங்கின் சுரன் இறந்தோரே - உயர்ந்த மலையின் அருகில் உள்ள பாலை நிலத்தைக் கடந்து சென்ற நம் தலைவர்