குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 031

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

நொதுமலர் வரைவுழித் தலைமகள் தோழிக்கு அறத்தொடு நின்றது. அகநானூறு 336 - முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்.

மள்ளர் குழீஇய விழவினானும்,
மகளிர் தழீஇய துணங்கையானும்,
யாண்டும் காணேன், மாண் தக்கோனை;
யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த . . . . [05]

பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே.
- ஆதிமந்தியார்.

பொருளுரை:

வீரர்கள் கூடி ஆடும் விழாவிலும், பெண்கள் தழுவி ஆடும் துணங்கை ஆட்டத்திலும் என் மாட்சிமையுடைய தலைவனைக் காண முடியவில்லை சங்கினை அறுத்து இயற்றிய என் வளையல்களை நெகிழச் செய்தவன் அவன். நான் நடனம் ஆடும் பெண். பெருமை மிகுந்த என் தலைவனும் நடனம் ஆடுபவன்.

குறிப்பு:

அகநானூறு 336 - முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின். இரா. இராகவையங்கார் உரை - மகளிர் தம் ஆடவரைத் தழுவி ஆடும் இடமாதலால் மாண்டக் கோனை ஆண்டுந் தேடியது கூறினார். “மள்ளர் அன்ன மரவம் தழீஇ, மகளிர் அன்ன ஆடு கொடி நுடக்கும்” (ஐங்குறுநூறு 400) என உவமித்தலான் இவ்வுண்மையுணர்க. இவர் காதலர் கெடுத்து அறிவு பிரிதாகிப் பேதுற்றுப் பன்னாட்டினும் பல்லூரினுந் தேடினாராதலின் யாண்டுங் காணேன் என்றார். “ஆட்டனத்தியை காணீரோ என நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி போல” (அகநானூறு 236) என்பதால் அறிக. ஆதிமந்தி: அகநானூறு 45 - காதலர் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ, அகநானூறு 76 - கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன் வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ என ஆதிமந்தி பேதுற்று இனைய, அகநானூறு 135 - ஆதிமந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே காதலம் தோழி, அகநானூறு 222 - ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இருங்கதுப்பின் காவிரி வவ்வலின் மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதிமந்தி, அகநானூறு 236 - கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதிமந்தி போல, 396 - மந்தி பனி வார் கண்ணள் பல புலந்து உறைய. சோழ மன்னன் கரிகாலனின் மகள்: இரா. இராகவையங்கார் உரை - இது பாடிய ஆதிமந்தியார் மன்னன் கரிகாலன் மகளாதல் சிலப்பதிகாரத்தான் அறியப்பட்டது (சிலப் 21:11). பொ. வே. சோமசுந்தரனார் உரை - இப்பாடல் கரிகால் மன்னன் மகளாகிய ஆதிமந்தியார் என்னும் நல்லிசை புலமையாட்டியார் தங் கணவனைக் காணாது தேடியபொழுது கூறியது என்ப. யானும் ஓர் ஆடுகள மகளே (4) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - இங்ஙனம் ஆண்டுஞ் சென்று தேடுதலானே யானும் கூத்தாடும் களத்திற்குரிய மகளே ஆயினேன்.

சொற்பொருள்:

மள்ளர் - வீரர்கள், குழீஇய - கூடிய, விழவினானும் - விழாவிலும், மகளிர் - பெண்கள், தழீஇய - தழுவிய, துணங்கையானும் - துணங்கை ஆட்டத்திலும், யாண்டுங் காணேன் - எங்கும் காணவில்லை, மாண் தக்கோனை - மாட்சிமையுடைய தலைவனை, யானுமோர் ஆடுகள மகளே - நானும் ஓர் ஆடும் மகள், என்கைக் - என் கை, கோடு ஈர் இலங்கு வளை - சங்கினை அறுத்து இயற்றிய விளங்குகின்ற வளையல்களை, நெகிழ்த்த - நெகிழச்செய்த, பீடு கெழு - பெருமையுடைய, குரிசலும் - தலைவனும், ஓர் ஆடுகள மகனே - ஒரு ஆடும் மகன்