குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 232

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வினைவயின் (வேலையின் பொருட்டு) பிரிந்த காலத்தில் ஆற்றாளாய தலைவிக்கு ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என்பதுபடத் தோழி கூறியது.

உள்ளார் கொல்லோ தோழி, உள்ளியும்
வாய்ப்பு உணர்வு இன்மையின் வாரார் கொல்லோ,
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல் துஞ்சும் . . . . [05]

மா இருஞ்சோலை மலை இறந்தோரே?
- ஊண் பித்தையார்.

பொருளுரை:

மரலாகிய உணவை உண்ட பெரிய கழுத்தையுடைய ஆண் மான், உரலைப்போன்ற காலையுடைய யானை ஒடித்து உண்ட யா மரத்தின் வரிவரியான நிழலில், உறங்கும் பெரிய கரிய சோலைகளையுடைய மலைகளைக் கடந்து சென்ற நம் தலைவர், நம்மை நினைக்க மாட்டாரா தோழி? நினைத்தும், தான் மேற்கொண்ட வினை முற்றுதல் பெறாமையினால் திரும்பி வர மாட்டாரோ? விரைவில் வந்து விடுவார்.

குறிப்பு:

கொல் - ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை, யாஅ - இசை நிறை அளபெடை. இறந்தோரே - ஏகாரம் அசைநிலை. குறுந்தொகை 37 - பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும், குறுந்தொகை 232 - உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், குறுந்தொகை 255 - யாஅத்துப் பொரி அரை முழு முதல் உருவக் குத்தி மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறுகண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை, அகநானூறு 335 - யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்து, மலைபடுகடாம் 429 - உம்பல் அகைத்த ஒண் முறி யாவும். உ. வே. சாமிநாதையர் உரை - தனக்கு வேண்டிய உணவைப் போதிய அளவு உண்ட இரலை யாமரத்தின் அடியின்கண் வந்து துஞ்சுதலைப் பார்ப்பாராதலின் தமக்கு வேண்டிய வினையை நன்கு முடித்து ஈண்டு வந்து நின்னொடு இன்புறுவர் என்பது குறிப்பு. உள்ளார் கொல்லோ (1) பொ. வே. சோமசுந்தரனார் உரை - உள்ளார் கொல் என்ற வினா உள்ளுவர் என்னும் பொருள்பட நின்றது. வாய்ப்பு உணர்வு (2) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - வினைமுற்றும் இடமறிதல், வினை முற்றாது மீள்வது அவர்க்குத் தகவு அன்று என்பாள் ‘உள்ளியும் வாரார்’ என்றாள்.

சொற்பொருள்:

உள்ளார் கொல்லோ தோழி - நம்மை நினைக்க மாட்டாரா தோழி, உள்ளியும் வாய்ப்பு உணர்வு இன்மையின் வாரார் கொல்லோ - தான் மேற்கொண்ட வினை முற்றுதல் பெறாமையினால் திரும்பி வர மாட்டாரோ, மரல் புகா அருந்திய - மரலாகிய உணவை உண்ட, மா எருத்து இரலை - பெரிய கழுத்தையுடைய ஆண் மான், உரல் கால் யானை - உரலைப்போன்று காலையுடைய யானை, ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல் துஞ்சும் - ஒடித்து உண்ட யா மரத்தின் வரிவரியான நிழலில் உறங்கும், மா இருஞ்சோலை மலை இறந்தோரே - பெரிய கரிய சோலைகளையுடைய மலைகளைக் கடந்து சென்ற நம் தலைவர்