குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 173

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

பாங்கியிற் கூட்டத்தின்கண் தலைவன் தோழியிடம் குறையிரப்ப அவள் மறுத்தாளாக, “இனி மடலேறும் பரிகார மொன்று இருத்தலால், அது செய்ய நினைந்து நான் செல்கின்றேன்” என்று அவன் கூறியது.

பொன் நேர் ஆவிரைப் புது மலர் மிடைந்த
பன் நூல் மாலைப் பனைபடு கலி மாப்
பூண் மணி கறங்க ஏறி, நாண் அட்டு,
அழிபடர் உள் நோய் வழி வழி சிறப்ப,
“இன்னள் செய்தது இது” என, முன் நின்று . . . . [05]

அவள் பழி நுவலும் இவ்வூர்,
ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளெனே.
- மதுரைக் காஞ்சிப்புலவன்.

பொருளுரை:

பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய மலர்களை நெருக்கமாகப் பல நூல்களால் கட்டிய மாலையை அணிந்து, பனை மடலால் செய்த செருக்கான மடல் குதிரையின் கழுத்தில் கட்டிய மணி ஒலிக்கும்படி அதன் மீது ஏறி, நாணத்தைத் தொலைத்து, மிகுந்த துன்பத்தைத் தரும் காதல் நோய் உள்ளத்தில் மேலும் மேலும் மிகுதியாக, இவள் இவ்வாறு செய்தாள் என்று நான் கூறினால், எல்லோருக்கும் முன்னால் நின்று அவளைப் பழிக்கும் இந்த ஊர். அதை நான் உணர்ந்ததால், இங்கிருந்து நான் போவதற்குத் தயாராக உள்ளேன்.

குறிப்பு:

உளெனே - ஏகாரம் அசை நிலை. அழிபடர் (4) - உ. வே. சாமிநாதையர் உரை - மிக்க துன்பம், பொ. வே. சோமசுந்தரனார் உரை - மிக்க நினைவு.

சொற்பொருள்:

பொன் நேர் ஆவிரைப் புது மலர் மிடைந்த - பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய மலர்களை நெருக்கமாகக் கட்டிய, பன் நூல் மாலை - பல நூல்களால் கட்டிய மாலை, பனைபடு கலி மாப் பூண் மணி கறங்க ஏறி - பனை மடலால் செய்த செருக்கான குதிரைக்குக் கழுத்தில் கட்டிய மணி ஒலிக்கும்படி ஏறி, நாண் அட்டு - நாணத்தைத் தொலைத்து, அழிபடர் - மிகுந்த துன்பம், உள் நோய் - உள்ளத்தில் உள்ள காதல் நோய், வழி வழி சிறப்ப - மேலும் மேலும் மிகுதியாக, இன்னள் செய்தது இது என - இவள் இவ்வாறு செய்தாள் என்று, முன் நின்று அவள் பழி நுவலும் இவ்வூர் - எல்லோருக்கும் முன்னால் நின்று பழிக்கும் இந்த ஊர், ஆங்கு உணர்ந்தமையின் - அதை நான் உணர்ந்ததால், ஈங்கு ஏகுமார் உளெனே - இங்கிருந்து நான் போவதற்குத் தயாராக உள்ளேன்