குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 002

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தலைவனும் தலைவியும் இயற்கைப் புணர்ச்சியில் இணைந்த பின்னர், தலைவியின் கூந்தலில் இயற்கை மணம் உடையது என்பதைத் தலைவன் வண்டை வினவுவதின் மூலம் புலப்படுத்தி, அவளுடைய அழகைப் புகழ்கின்றான்.

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ,
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?
- இறையனார்.

பொருளுரை:

பூக்களிலே இருக்கின்ற பூந்தாதினை ஆராய்ந்து உண்ணும் வாழ்க்கையைப் பெற்ற அழகிய சிறகினையுடைய வண்டே! நான் விரும்பியதைக் கூறாமல், நீ உண்மையாகவே அறிந்து கண்டதைக் கூறுவாயாக. என்னோடு தொடர்ந்து நெருங்கிய நட்பினைக் கொண்ட, மயில் போன்ற மென்மையும் நெருக்கமான பற்களையும் கொண்ட என் தலைவியின் கூந்தலைப் போல நறுமணம் உடைய மலர்கள் உண்டோ, நீ அறியும் மலர்களுள்?

குறிப்பு:

‘கொங்கு தேர் வாழ்க்கையென்னும் பாட்டு இயற்கைப் புணர்ச்சிக்கண் நிகழ்ந்த செய்யுள்’ - தொல்காப்பியம், செய்யுள் இயல் 187. நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்துக் களவியல் 10ஆம் சூத்திரத்துக்கு இச் செய்யுளை எடுத்துக்காட்டி, “இதனுள் தும்பி என்றது முன்னிலையாக்கல், கண்டது மொழிமோ என்றது சொல்வழிப்படுத்தல், கூந்தலின் நறியவும் உளவோ என்றது நன்னயமுரைத்தல், காமம் செப்பாது என்றது எந்நிலத்து வண்டாகலின் எனக்காகக் கூறாது மெய் கூறெனத் தன் இடம் அதுவாகக் கூறலின் இடமணித்தென்றது. பயிலியது கெழீஇய நட்பென்றது தம் நிலையுரைத்தல்”, என்று எழுதியுள்ளார். பொ. வே. சோமசுந்தரனார் உரை - தும்பி விடை தாராதாகவும் விடை கூறுவது போன்று வினவியது, பாடல் சான்ற புலனெறி வழக்கம். இதனை ‘சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇ செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும்’ (தொல்காப்பியம் பொருளியல் 2) என வரும் தொல்காப்பிய விதியாலும் உணர்க. திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - கூந்தலின் என்றதன் ஐந்தனுருபு எல்லைப்பொருளேயன்றி உவமைப் பொருளுமாம். மோ - முன்னிலையசை, பூவே - ஏகாரம் ஈற்றசை. அஞ்சிறை (1) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - அழகிய சிறகு, இரா. இராகவையங்கார் உரை - அகச்சிறை, உ. வே. சாமிநாதையர் உரை - உள்ளிடத்து சிறை.

சொற்பொருள்:

கொங்கு - பூந்தாது, தேன், தேர் வாழ்க்கை - ஆராய்ந்து உண்ணும் வாழ்க்கை, அம் சிறைத் தும்பி - அழகிய சிறகினை உடைய வண்டே, அகச் சிறகு உடைய வண்டே (தும்பி - விளி), காமம் செப்பாது - நான் விரும்பியதைக் கூறாமல், கண்டது மொழிமோ - நீ கண்டதைக் கூறுவாயாக, பயி்லியது கெழீஇய நட்பின் - தொடர்ந்து பொருந்திய நட்பினை உடைய (கெழீஇய- சொல்லிசை அளபெடை, நட்பின் - இன் சாரியை), பழகிய நட்பினை உடைய, மயில் இயல் - மயிலின் தன்மை, செறி எயிற்று - நெருக்கமான பற்களைக் கொண்ட, அரிவை - இளம் பெண், கூந்தலின் நறியவும் உளவோ- கூந்தலைப் போல நறுமணமும் உள்ளனவா (கூந்தலின் - இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), நீ அறியும் பூவே - நீ அறிந்த மலர்களுள் (பூ - பூக்களுள், ஏழனுருபு இறுதிக்கண் தொக்கது, பூவே - ஏகாரம் அசைநிலை)