குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 003

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவியை வரையாது (திருமணம் புரியாது) இருக்கும் தலைவன் சிறைப்புறமாக (வேலிக்கு புறத்தில்) நிற்பதை அறிந்த தோழி, அவன் வரைந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் அவனை பழித்துக் கூறிய போது, தலைவி அந்நட்பு சிறப்புடையது என்று தோழிக்கு உணர்த்தியது.

நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று,
நீரினும் ஆரளவின்றே, சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
- தேவகுலத்தார்.

பொருளுரை:

மலைச் சரிவில் உள்ள கரிய நிறமான கொம்புகளை உடைய குறிஞ்சிச் செடியின் மலர்களைக் கொண்டு வண்டுகள் சிறப்பான தேனைச் செய்யும் நாட்டையுடைய என் தலைவனொடு நான் செய்த நட்பானது, நிலத்தை விடப் பெரியது, வானத்தை விட உயர்ந்தது, கடலை விட அளத்தற்கரிய ஆழமுடையது.

குறிப்பு:

‘பெருந்தேன்’ என்பது ஆழ்ந்த நட்பைக் குறிக்கின்றது. ‘கருங்கோல் குறிஞ்சி’ என்பதற்கு வலிமையான கொம்புகளைக் கொண்ட குறிஞ்சிச் செடி என்ற பொருளுமுண்டு. அவர்களுடைய காதல் வலிமையானது எனக் கொள்ளலாம். நீரினும் ஆரளவின்றே (2) - உ. வே. சாமிநாதையர் உரை - கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது. கருங்கோல் குறிஞ்சி: அகநானூறு 308 - கருங்கோல் குறிஞ்சி நும் உறைவின் ஊர்க்கே, குறுந்தொகை 3 - கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு, புறநானூறு 374 - கருங்கோல் குறிஞ்சி அடுக்கம். இரா. இராகவையங்கார் உரை - நிலமும் வானும் நீரும் பருவத்தில் இயைந்து பயன்படுதல் போல நட்பும் வரைதற்குரிய நன்னாள் இயைந்து பயன்படுதல் குறித்தது எனினும் அமையும். நாடனொடு நட்பே (4) - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - நாடனொடு நட்பு என்பதற்கு நாடன் நட்பு என்று உரை கூறி ‘ஒடு’ இசை நிறை எனலுமாம். பெரிதே - ஏ அசை நிலை, அளவின்றே - ஏ - அசை நிலை, நட்பே என்பது பெருமை வியப்பு.

சொற்பொருள்:

நிலத்தினும் பெரிதே - நிலத்தை விட பெரியது, வானினும் உயர்ந்தன்று - வானத்தை விட உயர்ந்தது, நீரினும் ஆர் அளவின்றே - கடலை விட அளத்தற்கரிய ஆழமுடையது (நீர் - கடலுக்கு ஆகுபெயர்), சாரல் - மலைச் சரிவு, கருங்கோல் குறிஞ்சி - கரிய நிறமான கொம்புகளைக் கொண்ட உடைய குறிஞ்சிச் செடி (கருமை - கரிய, வன்மையுமாம்), வலிமையான கொம்புகளைக் கொண்ட குறிஞ்சிச் செடி, பூக் கொண்டு - மலர்களைக் கொண்டு, பெரும் தேன் - நிறையத் தேன், நிறைய தேனடைகள், இழைக்கும் - செய்யும், நாடனொடு நட்பே - நாடனுடைய நட்பு, குறிஞ்சி நிலத் தலைவனுடைய நட்பு