குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 019

மருதம் - தலைவன் கூற்று


மருதம் - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தலைவி ஊடிய போது அவ்வூடலைத் தான் தெளியச் செய்யவும் தெளியாளாகி அவள் பின்னும் ஊடிய காலத்தில் தவிர்ந்த நெஞ்சை நோக்கித் தலைவன் கூறியது.

எவ்வி இழந்த வறுமை யாழ்ப் பாணர்
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி, வாழிய நெஞ்சே, மனை மரத்து
எல் உறு மௌவல் நாறும்
பல் இரும் கூந்தல், யாரளோ நமக்கே . . . . [05]
- பரணர்.

பொருளுரை:

நெஞ்சே! வீட்டு மரத்தில் படர்ந்த கொடியின் ஒளியை உடைய முல்லை மலர்களின் நறுமணத்தையுடைய அடர்ந்த கருமையான கூந்தலை உடைய இவள் இனி நமக்கு யாரோ! எவ்வி என்ற வள்ளல் இறந்ததால் வறுமையுற்ற யாழ் வாசிக்கும் பாணர்களின் பொற்பூ இல்லாத வெறும் தலையானது பொலிவு இழந்ததைப் போலப் பொலிவு இழந்து நீ வருந்துவாயாக.

குறிப்பு:

இனைமதி - மதி முன்னிலையசை, வாழிய, ஏகாரம் அசை நிலை. எவ்வி - மிழலை நாட்டின் மன்னன் - தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் கொல்லப்பட்டான் - புறநானூறு 24, வாய்வாள் எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய வள் உயிர் வணர் மருப்பு அன்ன - அகநானூறு 115. இரா. இராகவையங்கார் உரை - மனைமரத்து இரவிலுற்ற முல்லை மலர்கள் ஒருவருஞ் சூடாமலே மணம் நாறுதல் போல இவள் கூந்தலும் நாம் அணையாமலே நாறும் என்பது குறிப்பு. இனை (3) - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - இன்னை என்பதன் இடைக்குறை, வருந்தினை என்பது பொருள், உ. வே. சாமிநாதையர் உரை - வருந்துவாயாக, பொ. வே. சோமசுந்தரனார் உரை - வருந்துக. வாழிய (3) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - நீ வாழ்வாயாக, உ. வே. சாமிநாதையர் உரை - அசை நிலை. வரலாறு: எவ்வி. மதி - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26). எல் - எல்லே இலக்கம் - (தொல்காப்பியம், இடையியல் 21). பாணர் - பாண் மரபினர், பாண் என்பது பண் அடியாகப் பிறந்த பெயர், இசை பாடுபவர்.

சொற்பொருள்:

எவ்வி இழந்த வறுமை யாழ்ப் பாணர் - எவ்வி என்ற வள்ளல் இறந்ததால் வறுமை அடைந்த பாணர்கள், பூ இல் வறுந்தலை போல - பொற்பூ இல்லாத வெறும் தலையைப் போல, புல்லென்று - பொலிவின்றி, இனைமதி - நீ வருந்துவாயாக, வாழிய நெஞ்சே - நெஞ்சே, மனை மரத்து எல் உறு மௌவல் - வீட்டு மரத்தில் உள்ள ஒளியுடைய காட்டு முல்லை மலர்கள், நாறும் - நறுமணமுடைய, பல் இரும் கூந்தல் - அடர்ந்த கருமையான கூந்தலை உடையவள் (இருங்கூந்தல் - அன்மொழித்தொகை), யாரளோ நமக்கே - அவள் நமக்கு யார் இனி