குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 033

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

வாயிலாக புக்க பாணன் கேட்பத் தோழியிடம் தலைவி வாயில் நேர்வாள் கூறியது (வாயில் - தூது, வாயில் நேர்வாள் - தூதிற்கு உடன்படுவாளாகி). இவன் இங்கும் விருந்தைப் பெறுவான் என்று குறிப்பால் உணர்த்துகின்றாள்.

அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன்,
தன் ஊர் மன்றத்து என்னன் கொல்லோ?
இரந்து ஊண் நிரம்பா மேனியொடு,
விருந்தின் ஊரும் பெருஞ்செம்மலனே.
- படுமரத்து மோசிகீரனார்.

பொருளுரை:

தோழி! இப்பாணன் ஒரு இளைய மாணவன். தன்னுடைய ஊரில் உள்ள மன்றத்தில் எத்தகைய சிறப்புடையவனோ? இரந்து உண்ணும் உணவினால் முற்றும் வளராத உடலுடன் இருந்தாலும், புதிதாகப் பெறும் விருந்தின்பொருட்டுச் செல்லும் பெரும் தலைமையுடையவன்.

குறிப்பு:

புலவரின் பெயர் படுமாத்து மோசிகீரனார் என்றும் சில உரை நூல்களில் உள்ளது. இரா. இராகவையங்கார் உரை - படுமாத்தூர் என்பது சேது நாட்டுச் சிவகங்கையைச் சார்ந்துள்ள ஊர். அன்னாய் (1) - உ. வே. சாமிநாதையர் உரை - தோழியைத் தலைவி அன்னாய் என்றல் மரபு. அன்னை என்னை என்றலும் உளவே தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபின என்மனார் புலவர் (தொல்காப்பியம், பொருளியல் 52). தன் ஊர் மன்றத்து என்னன் கொல்லோ (2) - உ. வே. சாமிநாதையர் உரை - தன் ஊரில் தான் தங்கும் மன்றத்தில் இன்னும் சிறந்த வன்மையுடையவன் போலும்! என்னும் கருத்தால் என்னன் கொல்லோ என்றாள், பொ. வே. சோமசுந்தரனார் உரை - இவன் தன் ஊர் மன்றத்தே எத்தகைய சிறப்புடையனோ? இரா. இராகவையங்கார் உரை - தான் பிறந்தவூரிலுள்ள அவைக்கண் ஏறிய காலத்து எத்தகையன் ஆவனோ? பெருஞ்செம்மலனே (4) - உ. வே. சாமிநாதையர் உரை - பெரிய தலைமையுடையவன், பொ. வே. சோமசுந்தரனார் உரை - பெரிய தலைமையுடையவனாக விளங்குகின்றான், இரா. இராகவையங்கார் உரை - முதுகாலத்து இவன் தலைமையுடையவன் ஆவன். விருந்தின் ஊரும் (4) - உ. வே. சாமிநாதையர் உரை விருந்தின்பொருட்டு செல்லும், பொ. வே. சோமசுந்தரனார் உரை - புதிதாகிய இவ்வூரிடத்தும், இரா. இராகவையங்கார் உரை - விருந்தோடு யானை, பரி, தேர் இவற்றில் ஊர்ந்து செல்லும். கொல்லோ - கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை, விருந்தின் - இன் சாரியை, செம்மலனே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

அன்னாய் - தோழியே, இவன் ஓர் இள மாணாக்கன் - இப்பாணன் ஒரு இளைய மாணவன், தன் ஊர் மன்றத்து என்னன் கொல்லோ - தன்னுடைய ஊரில் உள்ள மன்றத்தில் எத்தகைய சிறப்புடையவனோ, இரந்து ஊண் நிரம்பா மேனியொடு - இரந்து உண்ணும் உணவினால் முற்றும் வளராத உடலுடன், விருந்தின் ஊரும் பெருஞ்செம்மலனே - விருந்தின்பொருட்டுச் செல்லும் பெரும் தலைமையுடையவன்