குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 026

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தோழி அறத்தொடு நின்றது. தலைவியின் வேறுபாட்டுக்குக் காரணம் பிறிதோர் கடவுள் (முருகன்) என்று கட்டுவிச்சியால் அறிந்த தாயர் முதலியோருக்குத் தோழி, “இவள் ஒரு தலைவனோடு நட்புப் பூண்டாள். அவனை ஓர் ஆண் குரங்கும் அறியும்” என்று உண்மையைக் கூறியது.

அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கு எழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரின் தோன்று நாடன்,
தகாஅன் போலத் தான் தீது மொழியினும்,
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே, . . . . [05]

தேன் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத் துவர் வாய்
வரையாடு வன் பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும், அக்கொடியோனையே.
- கொல்லன் அழிசியார்.

பொருளுரை:

அரும்புகள் முற்றவும் மலர்ந்த கரிய அடியையுடைய வேங்கை மரத்தின் மேலே ஓங்கி வளர்ந்த பெரிய கிளைகளில் இருந்த மயில்கள், மலர்களைப் பறிக்கும் மகளிரைப் போல் தோன்றும் நாடன், தகுதியில்லாதவன் போல, கட்டுவிச்சி, “இது கடவுளால் வந்தது” என்று தீங்கானதைக் கூறினாலும், தன் கண்களால் கண்டதை “நான் காணவில்லை” என்று பொய் சொல்லாது, இனிய மாவின் கனியை உண்ணும் முள்ளைப் போன்ற பற்களையும் சிவந்த வாயினையும் உடைய, மலையில் விளையாடும் வலிய குட்டியின் தந்தையான ஆண் குரங்கு. அந்தக் கொடியவனாகிய தலைவனை அது அறியும்.

குறிப்பு:

உள்ளுறை - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - மலர்ந்த வேங்கையின் மேலோங்கிய சினையிலிருந்த தோகை, பூக்கொய் மகளிரைப்போன்று தோன்றினாற்போல, தலைவன் தன் நெஞ்சத்திடத்துப் பிறிது நினைத்திருக்கும் வெளித்தோற்றத்து வேண்டியன செய்வான்போற் காணப்பட்டான் என்பதாம். உள்ளுறை - பொ. வே. சோமசுந்தரனார் உரை - மகளிர் இல்லாத மயில் மகளிர் போன்று தோன்றுமென்றது, நோய்க்காரணமாகாத தெய்வம் கட்டுவிச்சிக்கு நோய்க்காரணமாகத் தோன்றியது என்பது.. கருங்கால் வேங்கை (1) - உ. வே. சாமிநாதையர் உரை - கரிய அடியையுடைய வேங்கை மரம், வலிய தாளையுடைய வேங்கை மரம். தேன் கொக்கு - கொக்கு மாமரம் - ஈண்டு அதன் பழத்தை உணர்த்திற்று. மகளிரின் - ஐந்தாம் வேற்றுமை உருபு, இன் உருபு ஒப்புப் பொருளது, கடுவனும் - உம்மை இழிவு சிறப்பு, அன்றே - ஏகாரம் அசை நிலை, அக்கொடியோனையே - ஏகாரம் அசை நிலை. பறழ் - மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

சொற்பொருள்:

அரும்பு அற மலர்ந்த - அரும்புகள் முற்றவும் மலர்ந்த, கருங்கால் வேங்கை - கரிய அடியையுடைய வேங்கை மரம், வலிய அடியையுடைய வேங்கை மரம், மேக்கு எழு பெருஞ்சினை இருந்த தோகை - மேலே ஓங்கி வளர்ந்த பெரிய கிளைகளில் இருந்த மயில்கள், பூக்கொய் மகளிரின் தோன்று நாடன் - மலர்களைப் பறிக்கும் மகளிரைப் போல் தோன்றும் நாடன், தகாஅன் போல - தகுதியில்லாதவன் போல, தான் - கட்டுவிச்சி, தீது மொழியினும் - கடவுளால் வந்தது என்று தீங்கானதைக் கூறினாலும், தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே - தன் கண்களால் கண்டதை நான் காணவில்லை என்று பொய் சொல்லாது, தேன் கொக்கு அருந்தும் - இனிய மாவின் கனியை உண்ணும், முள் எயிற்றுத் துவர் வாய் - முள்ளைப் போன்ற பற்களையும் சிவந்த வாயினையும் உடைய, வரையாடு வன் பறழ்த் தந்தைக் கடுவனும் அறியும் - மலையில் விளையாடும் வலிய குட்டியின் தந்தையான ஆண் குரங்கும் அறியும், அக்கொடியோனையே - அந்தக் கொடியவனாகிய தலைவனை