குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 301

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில், “நீ ஆற்றும்வன்மை யுடையாயோ?” என வினாவிய தோழிக்கு, “தலைவன் வாராவிடினும், அவன் வருவானென்னும் நினைவினால் நான்துயின்றிலேன்” என்று தலைவி கூறியது.

முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக்
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல்,
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர் . . . . [05]

வாராதுஆயினும், வருவது போலச்
செவிமுதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால் - தோழி! - என் கண்ணே.
- குன்றியனார்.

பொருளுரை:

தோழி! முழவைப் போன்ற அடி மரத்தையுடைய வளைந்த பனை மரத்தினது வளமையான ஓலையில் சிறு குச்சிகளால் செய்த கூட்டிலுள்ள கரிய காலையுடைய அன்றிலினது விருப்பத்தையுடைய முதல் சூலினால் உண்டான நோயையுடைய பெண் பறவை தன் ஆண் பறவையை அழைக்கின்ற நடு இரவில், தனது சக்கரத்தால் ஊர் மன்றத்தைப் பிளந்து கொண்டு வரும், நிறைய மணிகளையுடைய என் தலைவனது உயர்ந்த தேர் வராவிட்டாலும் வருவதுப் போல் என் காதில் ஒலிக்கும் ஒலியினால் என்னுடைய கண்கள் தூக்கத்தை நீத்தன!

முடிபு:

தோழி, கங்குலில் தேர் வாராதாயினும் வருவது போல இசைக்கும் அரவமொடு என் கண் துயில் துறந்தன.

கருத்து:

தலைவன் வரவை எதிர்பார்த்துத் துயின்றிலேன்.

குறிப்பு:

துறந்தனவால் - ஆல் அசை நிலை, கண்ணே - ஏகாரம் அசை நிலை. பெடை - பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் மூடும் நாகும் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும் அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே (தொல்காப்பியம், மரபியல் 3).

சொற்பொருள்:

முழவு முதல் அரைய - முழவைப் போன்ற அடி மரத்தையுடைய, தடவு நிலை பெண்ணை - வளைந்த நிலையையுடைய பனை, கொழு மடல் - வளமையான ஓலை, இழைத்த - இயற்றிய, சிறு கோல் - சிறு சுள்ளிகள், குச்சிகள் குடம்பை - கூடு, கருங்கால் அன்றில் - கரிய கால்களையுடைய அன்றில் பறவை, காமர் - விருப்பத்தையுடைய, கடுஞ்சூல் - முதல் கர்ப்பம், வயவுப் பெடை - நோயையுடைய பெண், அகவும் - அழைக்கும், பானாள் கங்குல் - பாதி இரவு, மன்றம் போழும் - சக்கரத்தால் மன்றத்தை பிளக்கும், இனமணி - நிறைய மணிகள், நெடுந்தேர் - உயர்ந்த தேர், வாராதாயினும் - வராவிட்டாலும், வருவது போல - வருவது போல், செவி முதல் இசைக்கும் - காதினில் ஒலிக்கும், அரவமொடு - ஒலியுடன், துயில் துறந்தனவால் - உறக்கத்தை நீத்தன, தோழி - தோழி, என் கண்ணே - என் கண்கள்