குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 056

பாலை - தலைவன் கூற்று


பாலை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தானே போகின்ற வேளையில், பாலை நிலத்தில் உள்ள தீமைகளைக் கண்டு, தலைவன் கூறியது. இரா. இராகவையங்கார் உரை - இது களவில் தலைவன் தலைவியை உடன்கொண்டு போகத் துணிந்தது என இளம்பூரணரும் (தொல்காப்பியம், அகத்திணையியல் 44), கற்பில் தலைவன் தோழி கேட்பக் கூறியது என நச்சினார்க்கினியரும் (தொல்காப்பியம், கற்பியல் 5) கொள்வர். அங்ஙனமாயின் சுரத்தின் பொல்லாங்கு தெரியத் தலைவன் போதற்கு முன்னே கூறியதாகக் கொள்ளப்படும்.

வேட்டச் செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகல் சில் நீர்
வளை உடைக் கையள் எம்மொடு உணீஇயர்
வருகதில் அம்ம தானே
அளியளோ அளியல், என் நெஞ்சு அமர்ந்தோளே . . . . [05]
- சிறைக்குடி ஆந்தையார்.

பொருளுரை:

பாலை நிலத்தில் உள்ள வேட்டையாடும் நாய்களால் தோண்டி உண்ணப்பட்டு எஞ்சிய, காட்டு மல்லிகையின் இலைகள் உதிர்ந்து மூடிய அழுகல் நாற்றத்தையுடைய சிறிதாக உள்ள நீரை, என்னுடன் சேர்ந்து உண்ணுவதற்கு என் நெஞ்சில் இருக்கும் வளையல் அணிந்த என் தலைவி வந்தால், அவள் மிகவும் இரங்கத் தக்கவள் ஆவாள்.

குறிப்பு:

வருகதில் (4) - தமிழண்ணல் உரை - வருகதில் என்பதில் ‘தில்’ விருப்பத்தை உணர்த்தும் இடைச் சொல், பொ. வே. சோமசுந்தரனார் உரை - வருகதில் என்பதில் ‘தில்’ விழைவுப் பொருளும் ஒழியிசைப் பொருளும் ஒரு சேரக் குறித்து நின்றது, வருகதில் என்பதற்கு வருவாளாக, உ. வே. சாமிநாதையர் உரை - வருக; வந்தால், இரா. இராகவையங்கார் உரை - வந்தால் இதன் பொல்லாங்கு அவளும் காண்பள் என்றவாறு. குளவி (2) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - காட்டு மல்லிகை, ஈண்டு அதன் சருகிற்கு ஆகுபெயர். அம்ம (4) - தமிழண்ணல் உரை - இரக்கக் குறிப்பு, பொ. வே. சோமசுந்தரனார் உரை - கேள் என்னும் பொருட்டு, உ. வே. சாமிநாதையர் உரை - அசை நிலை. உணீஇயர் - சொல்லிசை அளபெடை, தானே - ஏகாரம் அசை நிலை, அமர்ந்தோளே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

வேட்டச் செந்நாய் - வேட்டையாடும் செந்நாய்கள், கிளைத்து ஊண் மிச்சில் - தோண்டி உண்ணப்பட்டு எஞ்சிய, குளவி மொய்த்த - காட்டு மல்லிகையின் இலைகள் உதிர்ந்து மூடிய, அழுகல் சில் நீர் - அழுகல் நாற்றத்தையுடைய சிறிதாக உள்ள நீரை, வளை உடைக் கையள் எம்மொடு உணீஇயர் - என்னுடன் சேர்ந்து உண்ணுவதற்கு வளையல் அணிந்த தலைவி, வருகதில் - வந்தால், வருவாளாக, அம்ம - அசைநிலை, கேட்பாயாக, தானே அளியளோ அளியல் - அவள் மிகவும் இரங்கத் தக்கவள் ஆவாள், என் நெஞ்சு அமர்ந்தோளே - என் நெஞ்சில் இருப்பவள்