குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 362

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவியின் நோய் முருகனால் வந்ததெனக்கருதித் தாய் வெறியாட்டெடுத்தவிடத்துத் தோழி வெறியாடும் வேலனை நோக்கி, “தலைவியின் நோயைப் பரிகரிக்க எண்ணி இடும் இப்பலியை அந்நோய்க்குக் காரணமாகிய தலைவனது மார்பும் உண்ணுமோ?” என்று கூறும் வாயிலாக அறத்தொடு நின்றது.

முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல!
சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்;
பல்வேறு உருவின் சில் அவிழ் மடையொடு,
சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி,
வணங்கினை கொடுத்திஆயின், அணங்கிய . . . . [05]

விண் தோய் மா மலைச் சிலம்பன்
ஒண் தார் அகலமும் உண்ணுமோ, பலியே?
- வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்.

பொருளுரை:

முருகனை வழிபட்டு வந்த அறிவு வாய்ந்த வேலனே! என் மீது சினம் கொள்வதைக் காப்பாயாக! உன்னைக் கேட்பது ஒன்று உடையேன். பல்வேறு நிறத்தையுடைய சில சோற்றையுடைய பலியுடன், சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று, தலைவியுடைய நறுமணமுடைய நெற்றியைத் தடவி, முருகனை வணங்கி, பலியாகக் கொடுப்பாயின், இவளைத் துன்புறுத்திய வானத்தைத் தோய்க்கும் பெரிய மலையின் தலைவனின் ஒளியுடைய மாலையை அணிந்த மார்பு நீ கொடுக்கும் பலியை உண்ணுமோ?

முடிபு:

வேல, சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்: மறிகொன்று, நுதல் நீவிக் கொடுத்தியாயின் சிலம்பன் அகலமும் பலி உண்ணுமோ?

கருத்து:

இவளுக்குற்ற நோய் ஒரு தலைவனால் வந்தது.

குறிப்பு:

பலியே - ஏகாரம் அசைநிலை. எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், கூறுதல், உசாதல், ஏதீடு தலைப்பாடு, உண்மை செப்புங் கிளவியொடு, தொகைஇ எழு வகைய என்மனார் புலவர் (தொல்காப்பியம் பொருளியல் 12). இங்கு உசாவுதல் (கேட்டல்) பொருந்தும். பொ. வே. சோமசுந்தரனார் உரை - தலைவி நோய்க்குக் காரணம் தலைவனேயாம். தெய்வமன்று என்பதைச் செவிலிக்குக் குறிப்பால் உணர்த்தப்பட்டமை உணர்க. உ. வே. சாமிநாதையர் உரை - சிறு மறி என்றது இரங்கத்தக்க இளமையுடையது என்னும் நினைவிற்று. இரா. இராகவையங்கார் உரை - இதனைப் பேராசிரியர் தலைவி கூற்றாகவே கொண்டார் தனது தொல்காப்பிய உரையில் (தொல்காப்பியம், செய்யுளியல் 197). மறி - மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1). மதி - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26).

சொற்பொருள்:

முருகு அயர்ந்து வந்த - முருகனை வழிபட்டு வந்த, முதுவாய் வேல - அறிவு வாய்ந்த வேலனே, சினவல் ஓம்புமதி - சினம் கொள்வதைக் காப்பாயாக, வினவுவது உடையேன் - உன்னைக் கேட்பது ஒன்று உடையேன், பல் வேறு உருவின் - பல்வேறு நிறத்தையுடைய, சில் அவிழ் மடையொடு - சில சோற்றையுடைய பலியுடன், சிறு மறி கொன்று - சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று, இவள் நறு நுதல் நீவி - தலைவியுடைய நறுமணமுடைய நெற்றியைத் தடவி, வணங்கினை கொடுத்தியாயின் - முருகனை வணங்கிப் பலியாகக் கொடுப்பாயின், அணங்கிய - இவளைத் துன்புறுத்திய, விண் தோய் - வானத்தைத் தோய்க்கும், மா மலைச் சிலம்பன் - பெரிய மலையின் தலைவன், ஒண் தார் அகலமும் - ஒளியுடைய மாலையை அணிந்த மார்பும், உண்ணுமோ பலியே - நீ கொடுக்கும் பலியை உண்ணுமோ