குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 055

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

‘நீ வரைவொடு வராவிடின் இவள் இறந்துவிடுவாள்’ எனத் தோழி கூறியது.

மாக் கழி மணிப் பூக் கூம்பத் தூத்திரைப்
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும்,
சின்னாட்டு அம்ம, இச் சிறு நல்லூரே . . . . [05]
- நெய்தல் கார்க்கியர்.

பொருளுரை:

இந்த சின்ன நல்ல ஊர் கரிய உப்பங்கழியில் உள்ள நீலமணி போன்ற மலர்கள் குவியும்படி தூய அலைகளில் பொங்கிய பிசிராகிய நீர்த் துளிகளுடன், முகில்களை அணிந்துகொண்டு, காதலர்களைப் பிரிந்தவர்கள் செயலற்று வருந்தும்படி வந்த தடவுதலையுடைய வாடைக்காற்றோடு துன்பத்தைத் தரும் தங்கும் இடமாக ஆகும் சில நாட்களை மட்டுமே உடையது. நீ வராவிடின் இவள் சில நாட்களே வாழ்வாள்.

குறிப்பு:

மணிப்பூ (1) - உ. வே. சாமிநாதையர் உரை - மணிப்பூ என்றமையால் நீலமணி போன்ற முள்ளி நெய்தல் முதலியவற்றைக் கொள்க. மங்குல் தைஇ (2) - உ. வே. சாமிநாதையர் உரை - மேகத்தைப் பொருந்தி, பொ. வே. சோமசுந்தரனார் உரை - முகில்களையும் அணிந்துகொண்டு, இரா. இராகவையங்கார் உரை - மேகத்தையும் வீசி. ‘சேம்பின் இலை பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇ’ (குறுந்தொகை 76) என்புழிச் சேம்பின் இலை யானைச் செவிபோல அசைய வீசி எனப் பொருள் ஆதலால் உணர்க. உ. வே. சாமிநாதையர் உரை - ‘இன்னா உறையுட்டு ஆகும் சின்னாட்டு அம்ம இச் சிறு நல்லூரே’ என்று ஊரின் மேல் வைத்துச் சொன்னாலும், தோழி நினைந்தது, ‘தலைவி இன்னும் சின்னாளே இவ்வூரில் உயிர் வாழ்வாள். அச் சின்னாளும் இன்னாமை தரும் இயல்புடையன’ என்பதாகக் கொள்க; இதனால் தலைவனுக்கு விரைந்து வரைந்துகொள்வதன் இன்றியமையாமையைக் குறிப்பித்தாள். பிதிர்த் துவலை - இருபெயரொட்டு, அம்ம - அசை நிலை, நல்லூரே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

மாக் கழி மணிப் பூக் கூம்ப - கரிய உப்பங்கழியில் உள்ள நீலமணி போன்ற மலர்கள் குவியும்படி, தூத்திரைப் பொங்கு பிதிர்த் துவலையொடு - தூய அலைகளில் பொங்கிய பிசிராகிய துளிருடன், மங்குல் தைஇக் கையற வந்த தைவரல் ஊதையொடு - முகில்களை அணிந்துகொண்டு பிரிந்தவர்கள் செயலற்று வருந்தும்படி வந்த தடவுதலையுடைய வாடைக்காற்றோடு, இன்னா உறையுட்டு ஆகும் - துன்பத்தைத் தரும் தங்கும் இடமாக ஆகும், சின்னாட்டு - சில நாட்களையுடையது, அம்ம - அசை நிலை, இச் சிறு நல்லூரே - இந்த சின்ன நல்ல ஊர்