குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 087

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கடவுள்காட்டிச் சூளுற்றுப் பின் பிரிந்து நீட்டித்தானாக, தலைவனை அக்கடவுள் ஒறுக்குமோ என்று அஞ்சிய தலைவி, கடவுளை வாழ்த்தியது (சூளுற்று - உறுதிமொழி உரைத்து).

மன்றம் மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
பசைஇ பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்ன்று தட மென் தோளே . . . . [05]
- கபிலர்.

பொருளுரை:

ஊரின் பொது இடத்தின் கடம்ப மரத்தில் உள்ள அச்சம் தரும் முதிர்ந்த கடவுள் கொடியவர்களை வருத்தும் என அறிந்தவர்கள் கூறுவார்கள். சிறிதும் அக்கடவுளால் வருத்தம் அடையும் நிலையில் உள்ள கொடியவர் இல்லை, குன்றுகள் பொருந்திய நாட்டையுடைய என் தலைவர். என் நெற்றி அவரை விரும்பியதால் பசலை அடைந்தது. என் மனம் அவரை எண்ணி நெகிழ்ந்ததால் பரந்த மெல்லிய என் தோள்கள் மெலிந்தன. என்பால் உண்டான வேறுபாடுகளுக்குத் தலைவர் பொறுப்பில்லை.

குறிப்பு:

உ. வே. சாமிநாதையர் உரை - தலைவன் தலைவியோடு அளவளாவியிருந்த பொழுது கடம்ப மரத்தில் உறையும் கடவுள் மேல் ஆணையிட்டு ‘நின்னைப் பிரியேன்; பிரிவின் ஆற்றேன்” என்று தெளித்தான். பின்னர் அவன் பிரிந்து நீட்டித்தானாக அப்பிரிவினால் தலைவி வேறுபாடு உற்றாள். தன்னுடைய வேறுபாடுகளுக்குக் காரணம் தலைவன் பிரிந்துறையும் கொடுமையே ஆதலின் அவனால் சூளுறப்பட்ட கடவுள் அவனை ஒதுக்குமென்று அவன் கவன்றான். ஆதலின் தலைவன் கொடுமையுடையவன் அல்லன் என்று கூறி அவன் துன்புறாமற் செய்ய வேண்டும் என்று தெய்வத்தை பரவினாள். மராஅத்த - அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது, பேஎ - இன்னிசை அளபெடை, தெறூஉம் - இன்னிசை அளபெடை, பசைஇ - சொல்லிசை அளபெடை, ஞெகிழ் - நெகிழ் என்பதன் போலி. மராஅத்த பேஎ முதிர் கடவுள் (1) - உ. வே. சாமிநாதையர் உரை - பிறர்க்கு அச்சம் செய்தல் முதிர்ந்த தெய்வம், பொ. வே. சோமசுந்தரனார் உரை - கடம்பில் உறைகின்ற பிறர்க்கு அச்சம் செய்தலில் முதிர்ந்த முருகக்கடவுள், இரா. இராகவையங்கார் உரை- அச்சம் செய்வதில் பழமைப்பட்ட தெய்வம், தமிழண்ணல் உரை - செங்கடம்பு மரத்தில் உறையும் அச்சம் மிக்க தெய்வம். தட - தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம். உரியியல் 24). அவற்றுள், தட என் கிளவி கோட்டமும் செய்யும் (தொல்காப்பியம். உரியியல் 26).

சொற்பொருள்:

மன்ற மராஅத்த பேஎ முதிர் கடவுள் - பொது இடத்தின் கடம்ப மரத்தில் உள்ள அச்சம் தரும் முதிர்ந்த கடவுள், பொது இடத்தின் கடம்ப மரத்தில் உள்ள அச்சம் தரும் முருகக்கடவுள், கொடியோர்த் தெறூஉம் என்ப - கொடியவர்களை வருந்தச் செய்யும் எனக்கூறுவார்கள், யாவதும் கொடியர் அல்லர் - சிறிதும் அக்கடவுளால் வருத்தம் அடையும் நிலையில் உள்ள கொடியவர் இல்லை, எம் குன்று கெழு நாடர் - குன்றுகள் பொருந்திய நாட்டையுடைய என் தலைவர், பசைஇப் பசந்தன்று நுதலே - என் நெற்றி அவரை விரும்பியதால் பசலை அடைந்தது, ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென் தோளே - என் மனம் அவரை எண்ணி நெகிழ்ந்ததால் பரந்த மெல்லிய என் தோள்கள் மெலிந்தன