குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 035

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனின் பிரிவால் மெலிவுற்று தோழி அழுதாளாக, “நீ அழுதது ஏன்” என வினவிய தோழியிடம், தன் ஆற்றாமைக்குக் காரணம் கூறியது.

நாண் இல மன்ற எம் கண்ணே, நாள் நேர்பு
சினைப்பசும் பாம்பின் சூன் முதிர்ப்பு அன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ
நுண் உறை அழி துளி தலைஇய
தண்வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே . . . . [05]
- கழார்க்கீரன் எயிற்றியார்.

பொருளுரை:

தலைவர் பிரியுங்கால் உடன்பட்டு, கர்ப்பத்தையுடைய பச்சைப் பாம்பினது கருவின் முதிர்வு போன்ற திரண்ட கரும்பின் குவிந்த அரும்பு மலரும்படி, நுண்ணிதாகத் தூவுகின்ற துளி பொருந்திய குளிர்ச்சியுடன் வரும் வாடைக்காற்றை உடைய கூதிர்க்காலத்திலும், பிரிந்து உறையும் தலைவர் பொருட்டு அழுதலாலே, எம்முடைய கண்கள் உறுதியாக நாணம் இல்லாதன.

குறிப்பு:

நாள் நேர்பு (1) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - நாள் நேர்தலாவது, போர் முதலியன குறித்துப் பிரியும் தலைவன் யான் இன்ன காலத்தே மீண்டும் வருவன். அது காலும் ஆற்றியிரு என்று தேற்றுங்கால் அதற்கு உடன்பட்டிருத்தல். அழி துளி (4) - உ. வே. சாமிநாதையர் உரை - அழிந்த துளி, பொ. வே. சோமசுந்தரனார் உரை - அழிந்து விழும் துளி, இரா. இராகவையங்கார் உரை - பெருந்துளி. மன்ற - மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). சின் - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை - ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27). இல - இல்லை என்பதன் விகாரம், மன்ற - தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், பிரிந்திசினோர் - இசின் படர்க்கையின்கண் வந்ததோர் இடைச்சொல், தலைஇய - சொல்லிசை அளபெடை, அழலே - ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:

நாண் இல - நாணம் இல்லை, மன்ற - உறுதியாக, எம் கண்ணே - என் கண்கள், நாள் நேர்பு - தலைவர் பிரியுங்கால் உடன்பட்டு, சினைப்பசும் பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன - கர்ப்பத்தையுடைய பச்சைப் பாம்பினது கருவின் முதிர்வு போன்ற, கனைத்த கரும்பின் - திரண்ட கரும்பின், கூம்பு பொதி அவிழ - குவிந்த அரும்பு மலரும்படி, நுண் உறை அழி துளி தலைஇய தண்வரல் வாடையும் - நுண்ணிதாகத் தூவுகின்ற துளி பொருந்திய குளிர்ச்சியுடன் வரும் வாடைக்காற்றை உடைய கூதிர்க்காலத்திலும், பிரிந்திசினோர்க்கு அழலே - பிரிந்து உறையும் தலைவர் பொருட்டு அழுதலாலே