குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 057

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைவி, தோழியிடம் கூறியது.

பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போலப்,
பிரிவு அரிதாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல, கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து, . . . . [05]

ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.
- சிறைக்குடி ஆந்தையார்.

பொருளுரை:

செய்யவேண்டிய கடமைகளை முறையே அறிந்து, தலைவனும் தலைவியுமாகிய இருவராக இருக்கும் இவ்வுலகத்தில், பிரிந்து ஒருவராக வாழும் துன்பத்திலிருந்து தப்பும் பொருட்டு, ஒரு மலர் தங்கள் இடையில் வந்தாலும் பல ஆண்டுகள் கழிந்தாற்போன்ற துன்பத்தை உண்டாக்கும் தன்மையையுடைய நீரின்கண் வாழும் மகன்றில் பறவைகளின் புணர்ச்சியைப்போல, பிரிந்து வாழ்தல் அரிதாகிய குறையாத காதலுடன், பிரிவு நேர்ந்தவுடன் எம் உயிர் போகட்டும்.

குறிப்பு:

மகன்றில் புணர்ச்சி: குறுந்தொகை 57 - நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல, பரிபாடல் 8-44 - அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி, ஐங்குறுநூறு 381 - குறுங்கால் மகன்றில் அன்ன உடன் புணர் கொள்கை, அகநானூறு 220 - நோலா இரும்புள் போல நெஞ்சு அமர்ந்து காதல் மாறாக் காமர் புணர்ச்சியின். உடன் உயிர் போகுக (4) - உ. வே. சாமிநாதையர் உரை - என் உயிர் போவன ஆகுக, பொ. வே. சோமசுந்தரனார் உரை - எம் உயிர் போவனவாகுக, தமிழண்ணல் உரை - எங்கள் உயிர் போவதாக. இருவேம் ஆகிய (5) - உ. வே. சாமிநாதையர் உரை - பிறவிதோறும் தலைவனும் தலைவியாகிய இருவேமாகப் பயின்று வந்த, பொ. வே. சோமசுந்தரனார் உரை - செய்யக்கடவ கடமைகளை அறிந்து ஓர் உயிர்க்கு ஈருடம்பினேமாய்ப் பயின்று வரும். புன்மை (6) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - சிறுமை, உ. வே. சாமிநாதையர் உரை - துன்பம், தமிழண்ணல் உரை - இழிவு. உயற்கே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

பூ இடைப் படினும் - ஒரு மலர் இடையில் வந்தாலும் (படினும் - உம்மை இழிவு சிறப்பும்மை), யாண்டு கழிந்தன்ன - பல ஆண்டுகள் கழிந்தாற்போன்ற துன்பத்தை உண்டாக்கும் தன்மையையுடைய, நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல - நீரின்கண் வாழும் மகன்றில் பறவைகளின் புணர்ச்சியைப்போல, பிரிவு அரிதாகிய தண்டாக் காமமொடு - பிரிந்து வாழ்தல் அரிதாகிய குறையாத காதலுடன், உடன் உயிர் போகுக - பிரிவு நேர்ந்தவுடன் எம் உயிர் போகட்டும், தில்ல - விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச் சொல், ஈறு திரிந்தது வந்தது, கடன் அறிந்து - செய்யும் முறையை அறிந்து, இருவேம் ஆகிய உலகத்து - தலைவனும் தலைவியாக இருக்கும் இவ்வுலகத்தில், ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே - பிரிந்து ஒருவராக வாழும் துன்பத்திலிருந்து தப்பும் பொருட்டு