புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 192

பெரியோர் சிறியோர்!


பெரியோர் சிறியோர்!

பாடியவர் :

  கணியன் பூங்குன்றன்.

திணை :

  பொதுவியல்.

துறை :

  பொருண்மொழிக் காஞ்சி.


பாடல் பின்னணி:

கணியன் பூங்குன்றனார் வேந்தரையும், வள்ளலையும் புகழ்ந்து பாடாமல், உலக இயல்பைப் பற்றிப் பாடுகின்றார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர் தர வாரா,
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின் . . . . [05]

இன்னாது என்றலும் இலமே, மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல, ஆருயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர் . . . . [10]

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

பொருளுரை:

யாவும் நமது ஊர். அனைவரும் நமது உறவினர்கள். தீமையும் நன்மையும் பிறர் தந்து நமக்கு வருவதில்லை. துன்புறுவதும் துன்பத்தைத் தவிர்த்தலும் அதைப் போன்றவை தான். சாதல் என்பது புதிது இல்லை. வாழ்தல் இனிமையானது என்று நாம் மகிழ்வதும் இல்லை. வெறுப்பால் வாழ்க்கை இனியது இல்லை என்று கூறுவதும் இல்லை. மின்னலுடன் வானம் குளிர்ந்த மழை பெய்வதால் முடிவில்லாது கல்லுடன் மோதி ஒலிக்கும் வலிமை மிக்க பெரிய ஆற்றின் நீர் ஓட்டத்தின் வழியே செல்லும் தெப்பத்தைப் போன்று, நம் வாழ்க்கை முறைப்படி அமையும் என்பதை அறிஞர்களின் அறிவுரைகள் மூலம் அறிந்தோம். ஆதலால், சிறப்பு மிக்க பெரியோர் என்று யாரையும் கண்டு நாம் வியப்பதும் இல்லை. சிறியோர் என்று யாரையும் நாம் இகழ்வதும் இல்லை.

சொற்பொருள்:

யாதும் - அனைத்தும், ஊரே - நமது ஊர் (ஊரே - ஏகாரம் அசைநிலை), யாவரும் - அனைவரும், கேளிர் - உறவினர், தீதும் - தீயவையும், நன்றும் - நல்லவையும், பிறர் தர - பிறர் தருவதால், வாரா - வருவதல்ல, நோதலும் - வருந்துவதும், தணிதலும் - அது தீர்வதும், அவற்றோர் - அவற்றை, அன்ன - போல, சாதலும் - சாவது, புதுவது - புதிது, அன்றே - இல்லை (அன்றே - ஏகாரம் அசைநிலை), வாழ்தல் - வாழ்தல், இனிது என - இனியது என, மகிழ்ந்தன்றும் - மகிழ்வதும், இலமே - இல்லை (இலமே - ஏகாரம் அசைநிலை), முனிவின் - வெறுத்து, இன்னாது - துன்பம் மிக்கது, என்றலும் - என்று சொல்வதும், இலமே - இல்லை (இலமே - ஏகாரம் அசைநிலை), மின்னொடு - மின்னலுடன், வானம் - வானம், தண் துளி - குளிர்ந்த மழைத் துளி, தலைஇ - பெய்வதால், ஆனாது - இடை விடாது, கல் பொருது - கல்லுடன் மோதி, இரங்கும் - ஒலிக்கும், மல்லல் - வலிமை மிக்க, பேர்யாற்று - பெரிய ஆற்றில், நீர் வழிப்படூஉம் - நீரின் ஓட்டத்தின் வழியே செல்லும் (வழிப்படூஉம் - அளபெடை), பயணப்படும், புணை போல - மிதவை போல, தெப்பம் போல, ஆர் உயிர் - அரிய உயிர், முறை வழிப்படூஉம் - முறைப்படி செல்லும் (வழிப்படூஉம் - அளபெடை), என்பது - என்பது, திறவோர் - திறம் கொண்டு அறிந்தோர், காட்சியின் - தந்த அறிவின் மூலம், தெளிந்தனம் - தெளிவு பெற்றோம், ஆகலின் - ஆனதால், மாட்சியின் - பெருமை மிக்க, பெரியோரை - பெரியவர் என்று, வியத்தலும் - வியந்து அடிபணிவதும், இலமே - இல்லை (இலமே - ஏகாரம் அசைநிலை), சிறியோரை - சிறியோர் என்று, இகழ்தல் - பழித்தல், அதனினும் - அதனை விட, இலமே - இல்லை (இலமே - ஏகாரம் அசைநிலை)