புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 163

தமிழ் உள்ளம்!


தமிழ் உள்ளம்!

பாடியவர் :

  பெருஞ்சித்திரனார்.

பாடப்பட்டோன் :

  புலவரின் மனைவி.

திணை :

  பாடாண்.

துறை :

  பரிசில்.

நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
பன் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்,
கடும்பின் கடும் பசி தீர யாழ நின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும்,
இன்னோர்க்கு என்னாது, என்னோடும் சூழாது, . . . . [05]

வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி, மனை கிழவோயே,
பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்து வேல் குமணன், நல்கிய வளனே.

பொருளுரை:

என் மனைவியே! உன்னை விரும்பி வாழ்பவர்களுக்கும், நீ விரும்பி வாழ்பவர்களுக்கும், பல சிறந்த கற்புடைய உன்னுடைய சுற்றத்தாருள் மூதோர்க்கும், உறவினர்களின் கொடிய பசி தீர உனக்குக் கடன் தந்தவர்களுக்கும், யாரென்று நினையாது, என்னோடும் கலந்து ஆலோசிக்காமல், நாம் சிறப்பாக வாழலாம் என்றும் எண்ணாது, நீயும் எல்லோருக்கும் கொடுப்பாயாக, பழங்கள் தொங்கும் முதிர மலைக்குத் தலைவனான, திருந்திய வேலையுடைய குமணன் கொடுத்த செல்வத்தை.

குறிப்பு:

மதி - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26).

சொற்பொருள்:

நின் நயந்து உறைநர்க்கும் - உன்னை விரும்பி வாழ்பவர்களுக்கும், நீ நயந்து உறைநர்க்கும் - நீ விரும்பி வாழ்பவர்களுக்கும், பன் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும் - பல சிறந்த கற்புடைய உன்னுடைய சுற்றத்தாருள் மூதோர்க்கும், கடும்பின் கடும் பசி - உறவினர்களின் கொடிய பசி தீர, யாழ - ஓர் அசைச் சொல், நின் நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும் - உனக்கு கடன் தந்தவர்களுக்கும், இன்னோர்க்கு என்னாது - யாரென்று நினையாது, என்னோடும் சூழாது - என்னோடும் கலந்து ஆலோசிக்காமல், வல்லாங்கு வாழ்தும் என்னாது - நாம் சிறப்பாக வாழலாம் என்று எண்ணாது, நீயும் எல்லோர்க்கும் கொடுமதி - நீயும் எல்லோருக்கும் கொடுப்பாயாக, மனை கிழவோயே - என் மனைக்கு உரியோயே, பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் - பழங்கள் தொங்கும் முதிர மலைக்குத் தலைவன், திருந்து வேல் குமணன் - திருந்திய வேலையுடைய குமணன், நல்கிய வளனே - கொடுத்த செல்வத்தை (வளனே - வளன் வளம் என்பதன் போலி, ஏகாரம் அசைநிலை)