புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 173

யான் வாழுநாள் வாழிய!


யான் வாழுநாள் வாழிய!

பாடியவர் :

  சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.

பாடப்பட்டோன் :

  சிறுகுடி கிழான் பண்ணன்.

திணை :

  பாடாண்.

துறை :

  இயன்மொழி.


பாடல் பின்னணி:

பாடலின் புலவர் ஒரு சோழ மன்னர். சிறுகுடி என்ற சோழ நாட்டின் ஊரில் உள்ள தலைவனான பண்ணனை பாராட்டுகிறார். தன் கூற்றாகப் பாடாமல் பாணன் ஒருவனின் கூற்றாகப் பாடலைப் பாடியுள்ளார்.

யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய,
பாணர் காண்க, இவன் கடும்பினது இடும்பை,
யாணர்ப் பழுமரம் புள் இமிழ்ந்தன்ன,
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்,
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி, . . . . [05]

முட்டை கொண்டு வன்புலம் சேரும்,
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்பச்,
சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப், . . . . [10]

பசிப் பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே?

பொருளுரை:

நான் உயிர் வாழும் நாட்களையும் சேர்த்துப் பெற்று பண்ணன் வாழ்வானாக! பாணர்களே காண்பீர்களாக, இந்தப் பாணனின் சுற்றத்தாரின் வறுமையை! பழங்கள் நிறைந்திருக்கும் மரத்தின்கண் பறவைகள் ஒலித்தாற்போல், உணவினால் உண்டான ஆரவாரத்தைக் கேட்கின்றோம். காலம் தப்பாது மழை பெய்யும் முகிலை நோக்கித் தம்முடைய முட்டைகளை மேட்டு நிலத்திற்குக் கொண்டு சென்று சேரும் மிகச் சிறிய எறும்பினது வரிசையைப் போல, சோறுடைய கையினராக வேறு வேறு செல்லும் பெரிய சுற்றத்தாருடன் கூடிய பிள்ளைகளைக் காண்கின்றோம். அதைக் கண்ட பிறகு மீண்டும் மீண்டும் கேட்கின்றோம், தெளிவாக, “பசி நோயை நீக்கும் மருத்துவனின் இல்லம் அருகில் உள்ளதா? தொலைவில் உள்ளதா? கூறுவீர் எமக்கு”.

குறிப்பு:

பெய்விடம் (5) - ஒளவை துரைசாமி உரை - பெய்விடம் என்றவிடத்து இடம் காலம் குறித்து நின்றது. பழ மரமும் புள்ளும்: புறநானூறு 173 - பழுமரம் புள் இமிழ்ந்தன்ன, புறநானூறு 370 - பழுமரம் உள்ளிய பறவை போல, பெரும்பாணாற்றுப்படை 20 - பழுமரம் தேரும் பறவை போல, பொருநராற்றுப்படை 64 - பழுமரம் உள்ளிய பறவையின், மதுரைக்காஞ்சி 576 - பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல. யாணர் - புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83).

சொற்பொருள்:

யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய - நான் உயிர் வாழும் நாட்களையும் பெற்று பண்ணன் வாழ்வானாக, பாணர் காண்க - பாணர்களே காண்பீர்களாக, இவன் கடும்பினது இடும்பை - இவனுடைய சுற்றத்தாரின் வறுமையை, யாணர்ப் பழுமரம் புள் இமிழ்ந்தன்ன - பழங்கள் நிறைந்திருக்கும் மரத்தின்கண் பறவைகள் ஒலித்தாற்போல், ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும் - உணவினால் உண்டான ஆரவாரத்தைக் கேட்கின்றோம் (தானும் - தான், உம் அசைநிலைகள்), பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி - தப்பாது மழை பெய்யும் முகிலை நோக்கி, முட்டை கொண்டு வன்புலம் சேரும் - தம்முடைய முட்டைகளை மேட்டு நிலத்திற்குக் கொண்டு சென்று சேரும், சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப - மிகச் சிறிய எறும்பினது ஒழுக்கத்தைப் போல (ஏய்ப்ப - உவம உருபு), சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும் - சோறுடைய கையினராக வேறு வேறு செல்லும், இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் - பெரிய சுற்றத்தாருடன் கூடிய பிள்ளைகளைக் காண்போம் (சிறாஅர் - அளபெடை), கண்டும் மற்றும் மற்றும் வினவுதும் - அதைக் கண்ட பிறகு மீண்டும் மீண்டும் கேட்கின்றோம், தெற்றென - தெளிவாக, பசிப் பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ - பசி நோயை நீக்கும் மருத்துவனின் இல்லம் அருகில் உள்ளதா தொலைவில் உள்ளதா, கூறுமின் எமக்கே - கூறுவீர் எனக்கு (கூறுமின் - மின் முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, எமக்கே - ஏகாரம் அசைநிலை)