புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 385

காவிரி அணையும் படப்பை!


காவிரி அணையும் படப்பை!

பாடியவர் :

  கல்லாடனார்.

பாடப்பட்டோன் :

  அம்பர் கிழான் அருவந்தை.

திணை :

  பாடாண்.

துறை :

  வாழ்த்தியல்.

வெள்ளி தோன்றப் புள்ளுக் குரல் இயம்ப
புலரி விடியல் பகடு பல வாழ்த்தித்
தன் கடைத் தோன்றினும் இலனே பிறன் கடை
அகன் கண் தடாரிப் பாடு கேட்டு அருளி
வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை . . . . [05]

நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து
வெளியது உடீஇ என் பசி களைந்தோனே
காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை
நெல் விளை கழனி அம்பர் கிழவோன்
நல் அரு வந்தை வாழியர் புல்லிய . . . . [10]

வேங்கட விறல் வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே.

பொருளுரை:

வானத்தில் வெள்ளி தோன்றியது. பறவைகள் ஒலித்தன. பொழுது புலர்ந்தது. அவனுடைய எருதுகளை வாழ்த்தி நான் அவனுடைய வாயிலில் தோன்றவில்லை. அருகில் உள்ள மனை வாயிலில் என்னுடைய அகன்ற கண்ணையுடைய தடாரிப் பறையின் ஒலியைக் கேட்டு, அருளி, என்னுடைய வறுமையை நீக்க விரும்பி, என் இடையில் கட்டிய நிலம் தின்ற கந்தல் ஆடையை நீக்கி, வெண்ணிற ஆடையை எனக்கு உடுப்பித்து, என்னுடைய பசியை நீக்கினான், காவிரி ஆறு பாயும் தாழ்ந்த நிலத்தில் உள்ள தோட்டங்களையும் நெல் விளையும் வயல்களையுமுடைய அம்பர் என்ற ஊருக்கு உரியவனாக நல்ல அருவந்தை என்பவன். அவன் நீடு வாழ்வானாக! புல்லி என்பவனின் வேங்கட மலையில் உயர்ந்த வானத்திலிருந்து விழும் மழைத் துளிகளைவிடப் பல ஆண்டுகள் வாழ்வானாக!

குறிப்பு:

வெள்ளி தோன்ற: புறநானூறு 385 - வெள்ளி தோன்றப் புள்ளுக் குரல் இயம்ப புலரி விடியல், புறநானூறு 397 - வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும் புள்ளும் உயர் சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே பொய்கையும் போது கண் விழித்தன பையச் சுடரும் சுருங்கின்று ஒளியே பாடெழுந்து இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி, புறநானூறு 398 - மதி நிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர வகை மாண் நல் இல், பொருநராற்றுப்படை 72 - வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்.

சொற்பொருள்:

வெள்ளி தோன்ற - வானத்தில் வெள்ளி தோன்றியது, புள்ளுக் குரல் இயம்ப - பறவைகள் ஒலித்தன, புலரி விடியல் - பொழுது புலர்ந்தது, பகடு பல வாழ்த்தி - எருதுகளை வாழ்த்தி, தன் கடைத் தோன்றினும் இலனே - அவனுடைய வாயிலில் நான் தோன்றவில்லை (இலனே - ஏகாரம் அசைநிலை), பிறன் கடை - பிறர் வாயில், அகன் கண் தடாரிப் பாடு கேட்டு - என்னுடைய அகன்ற கண்ணையுடைய தடாரிப் பறையின் ஒலியைக் கேட்டு, அருளி - அருளி, வறன் யான் நீங்கல் வேண்டி - என்னுடைய வறுமையை நீக்க விரும்பி, என் அரை நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து - என் இடையில் கட்டிய நிலம் தின்ற கந்தல் ஆடையை நீக்கி (சிதாஅர் - அளபெடை), வெளியது உடீஇ - வெண்ணிற ஆடையை எனக்கு உடுப்பித்து (உடீஇ - அளபெடை), என் பசி களைந்தோனே - என்னுடைய பசியை நீக்கினான் (களைந்தோனே - ஏகாரம் அசைநிலை), காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை நெல் விளை கழனி அம்பர் கிழவோன் - காவிரி ஆறு பாயும் தாழ்ந்த நிலத்தில் உள்ள தோட்டங்களையும் நெல் விளையும் வயல்களையுமுடைய அம்பர் என்ற ஊருக்கு உரியவன், நல் அருவந்தை - நல்ல அருவந்தை என்பவன், வாழியர் - நீடு வாழ்வானாக, புல்லிய வேங்கட விறல் வரைப் பட்ட ஓங்கல் வானத்து உறையினும் பலவே - புல்லி என்பவனின் வேங்கட மலையில் உயர்ந்த வானத்திலிருந்து விழும் மழைத் துளிகளைவிடப் பல ஆண்டுகள் வாழ்வானாக (பலவே - ஏகாரம் அசைநிலை)