புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 272

கிழமையும் நினதே!


கிழமையும் நினதே!

பாடியவர் :

  மோசிசாத்தனார்.

திணை :

  நொட்சி.

துறை :

  செருவிடை வீழ்தல்.


மணி துணர்ந்தன்ன மாக்குரல் நொச்சி!
போது விரி பன் மரனுள்ளும் சிறந்த
காதல் நன் மரம் நீ, மற்றிசினே,
கடி உடை வியன் நகர்க் காண்வரப் பொலிந்த
தொடி உடை மகளிர் அல்குலும் கிடத்தி, . . . . [05]

காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்,
ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை
பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே.

பொருளுரை :

மணிகள் கொத்தாக அமைந்த பெரிய கொத்துக்களையுடைய நொச்சி மரமே! பூக்கள் நிறைந்த பல மரங்களுள்ளும், சிறந்த அன்பு செய்வதற்கு உரிய மரம் நீயே! மற்றும், காவலுடைய பெரிய இல்லங்களில் கண்ணுக்கு அழகாக விளங்கும் வளையல் அணிந்த மகளிரின் இடுப்பில் தழை ஆடையாகக் கிடக்கின்றாய் நீ! காவல் மிகுந்த எயிலில் நின்று, பகைவரை அழிப்பதால், ஊர்ப்புறத்தைக் காக்கும் பெருந்தலைவனின் பெருமை பொருந்திய தலையில் சூடப்படும் உரிமையும் உன்னுடையதே!

குறிப்பு :

ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை (4) - ஒளவை துரைசாமி உரை - நகர்ப்புறத்தைக் கை விடாது காக்கும் நெடுந்தகை, ஊர்ந்து பொரும் போரின்கண் புறங்கொடாத நெடுந்தகை எனினுமாம். சின் - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27). சின் என்பது இசின் என்பதன் முதற்குறை - ச. பாலசுந்தரம் உரை.

சொற்பொருள் :

மணி துணர்ந்தன்ன மாக்குரல் நொச்சி - மணிகள் கொத்தாக அமைந்த பெரிய கொத்துக்களையுடைய நொச்சி மரமே, போது விரி பன் மரனுள்ளும் சிறந்த காதல் நன் மரம் நீ - பூக்கள் நிறைந்த பல மரங்களுள்ளும் சிறந்த அன்பு செய்வதற்கு உரிய மரம் நீ, மற்றிசினே - மற்றும், கடி உடை வியன் - காவலுடைய பெரிய இல்லம், நகர்க் காண்வரப் பொலிந்த தொடி உடை மகளிர் அல்குலும் கிடத்தி - கண்ணுக்கு அழகாக விளங்கும் வளையல்கள் அணிந்த மகளிரின் அல்குலில் தழை ஆடையாய் கிடப்பாய், காப்புடைப் புரிசை புக்கு - காவல் மிகுந்த எயிலில் நின்று, மாறு அழித்தலின் பகைவரை அழிப்பதால், ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை - ஊர்ப்புறத்தைக் காக்கும் பெருந்தலைவன் (கொடாஅ - அளபெடை), பீடு கெழு - பெருமை பொருந்திய, சென்னிக் கிழமையும் நினதே - தலையில் சூடப்படும் உரிமையும் உன்னுடையதே (நினதே - ஏகாரம் அசைநிலை)