புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு : 256

அகலிதாக வனைமோ!


அகலிதாக வனைமோ!

பாடியவர் :

  பெயர் தெரியவில்லை.

திணை :

  பொதுவியல்.

துறை :

  முதுபாலை.


பாடல் பின்னணி :

கணவன் இறந்துவிட்டதால் அவனை அடக்கம் செய்ய தாழி ஒன்றைச் செய்யுமாறு குயவனிடம் கேட்கின்றாள் ஒரு பெண். தாழி என்பது பெரிய மண் பாண்டம்.

கலம் செய்கோவே, கலம் செய்கோவே,
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண் பல்லி போலத், தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி,
வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி . . . . [05]

அகலிது ஆக வனைமோ,
நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே.

பொருளுரை :

தாழி செய்யும் குயவனே! தாழி செய்யும் குயவனே! அச்சு உடைய வண்டியின் சக்கர ஆரத்தைப் பற்றிக்கொண்டு வந்த சிறிய வெண் நிறப் பல்லியைப் போல், என் தலைவனோடு பாலை நிலங்கள் பலவற்றை கடந்து வந்த எனக்கு அருள் செய்க. நானும் அவனோடு கூடியிருக்கும்படி பெரிய தாழியைச் செய்வாயாக, இந்தப் பழமையான பெரிய ஊரில் தாழி செய்யும் குயவனே!

குறிப்பு :

கோவே (1) - ஒளவை துரைசாமி உரை - கலஞ் செய்யும் எனச் சிறப்பிக்கவே கோ வேட்கோ என்பதாயிற்று. வேட்கோ - குயவன், வேள்+கோ. வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி (5) - ஒளவை துரைசாமி உரை - யானும் அவனோடு கூடியிருக்கும்படி பெரிய பரப்பினையுடைய அகலிய பூமியிடத்துக் காட்டின்கண் முதுமக்கள் தாழியை. வேட்கோ = குயவன். நனந்தலை - அகன்ற இடம், நனம் - நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80). கலம் செய்கோவே! கலம் செய்கோவே (1) - உ. வே. சாமிநாதையர் உரை - அடுக்கு விரைவின்கண் வந்தது.

சொற்பொருள் :

கலம் - தாழி, செய்கோவே - செய்பவரே (வேட்கோ - குயவன்), கலம் செய்கோவே - தாழி செய்பவரே, அச்சுடை - அச்சு உடைய, சாகாட்டு - வண்டியின், ஆரம் - சக்கரத்தின் ஆரம் (ஆரக்கால்), பொருந்திய - பொருந்திய, சேர்ந்த, சிறுவெண் - சிறிய வெண் நிற, பல்லி - பல்லி, போல - போல, தன்னொடு - தலைவன் தன்னோடு, சுரம் - பாலைநிலம், பல - பலவற்றை, வந்த - கடந்து வந்த, எமக்கும் - எனக்கும், அருளி - அருள் செய்க, வியன் மலர் - பெரிய பரப்புடைய, அகன் பொழில் - பெரிய இடம், ஈமத்தாழி - இறந்தவரை இட்டுப் புதைக்கும் தாழி, அகலிது ஆக - அகன்றதாக, வனைமோ - செய்வாயாக (மோ - முன்னிலையசை), நனந்தலை - பெரிய இடம், மூதூர் - பழமையான ஊர், கலம் செய் கோவே - தாழி செய்பவரே (கோவே - ஏகாரம் அசைநிலை)