புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 240

பிறர் நாடுபடு செலவினர்!


பிறர் நாடுபடு செலவினர்!

பாடியவர் :

  குட்டுவன் கீரனார்.

பாடப்பட்டோன் :

  ஆய்.

திணை :

  பொதுவியல்.

துறை :

  கையறுநிலை.

ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும்,
வாடா யாணர் நாடும், ஊரும்,
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்,
கோடு ஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு,
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, . . . . [05]

மேலோர் உலகம் எய்தினன், எனாஅப்,
பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
‘சுட்டுக் குவி’ எனச் செத்தோர்ப் பயிரும்,
கள்ளியம் பறந்தலை ஒரு சிறை அல்கி,
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது, . . . . [10]

புல்லென் கண்ணர், புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு, கையழிந்து, புலவர்
வாடிய பசியர் ஆகிப், பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர், இனியே.

பொருளுரை:

தாளத்திற்கேற்ப நடக்கும் குதிரைகளையும், களிற்று யானைகளையும், தேர்களையும், அழியாத வளமையையுடைய நாடுகளையும் ஊர்களையும் பாடுவர்களுக்குக் குறையாது வழங்கும் ஆய் அண்டிரன், பக்கங்கள் உயர்ந்த இடையையுடைய சிறிய வளையல்களை அணிந்த பெண்களுடன், காலன் என்னும் அருள் இல்லாதவன் கொண்டு போக, மேல் உலகத்தை அடைந்தான். பொந்தில் வாழும் பிளந்த வாயையுடைய ஆந்தை, ‘சுட்டுக் குவி’ என்று செத்தோரை அழைப்பது போன்று கூவும் கள்ளிச் செடியுடைய பாழிடத்தில், ஒரு பக்கத்தில் ஒளியுடைய தீயினால் அவனுடைய உடல் எரிக்கப்பட்டது. புரவலர்களைக் காணாது, பொலிவில்லாத கண்களையுடையவர்களாக, ஆரவாரத்தையுடைய சுற்றத்தாருடன், செயலற்று, பசியுடையவர்களாக ஆகி, புலவர்கள் இப்பொழுது வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.

குறிப்பு:

யாணர் - புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83). கூகை சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும் (7-8) - ஒளவை துரைசாமி உரை - பேராந்தை செத்தவர்களை விரையத் தன்பால் வருமாறு அழைப்பது போலிருத்தலின் ‘சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும்’ என்று உரைத்தார்.

சொற்பொருள்:

ஆடு நடைப் புரவியும் - தாளத்திற்கேற்ப நடக்கும் குதிரைகளும், களிறும் தேரும் - களிற்று யானைகளும், தேர்களும், வாடா யாணர் நாடும் ஊரும் - அழியாத வளமையையுடைய நாடுகளையும் ஊர்களையும், பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் - பாடுவர்களுக்கு குறையாது வழங்கும் ஆய் அண்டிரன் (ஆஅய் - அளபெடை), கோடு ஏந்து அல்குல் - பக்கங்கள் உயர்ந்த அல்குல், குறுந்தொடி மகளிரொடு - சிறிய வளையல்களை அணிந்த பெண்களுடன், காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப மேலோர் உலகம் எய்தினன் - காலன் என்னும் அருள் இல்லாதவன் கொண்டு போக மேல் உலகத்தை அடைந்தான், எனாஅ - அவ்வாறு ஆகியதால் (எனாஅ - அளபெடை),பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை - பொந்தில் வாழும் பிளந்த வாயையுடைய ஆந்தை, சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும் - ‘சுட்டுக் குவி’ என்று செத்தோரை அழைக்கும், கள்ளியம் பறந்தலை - கள்ளிச் செடியுடைய பாழிடத்தில், ஒரு சிறை அல்கி - ஒரு பக்கத்தில் தங்கி, ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது - ஒளியுடைய தீச் சுட உடம்பு மாய்ந்து விட்டது, புல்லென் கண்ணர் - பொலிவில்லாத கண்களையுடையவர்கள், புரவலர்க் காணாது - புரவலர்களைக் காணாது, கல்லென் சுற்றமொடு - ஆரவாரத்தையுடைய சுற்றத்தாருடன் (கல்லென் - ஒலிக்குறிப்பு), கையழிந்து புலவர் வாடிய பசியர் ஆகி - செயலற்ற பசியுடையவர்களாக ஆகி, பிறர் நாடுபடு செலவினர் ஆயினர் இனியே - இப்பொழுது வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர் (இனியே - ஏகாரம் அசைநிலை)