புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 235

அருநிறத்து இயங்கிய வேல்!


அருநிறத்து இயங்கிய வேல்!

பாடியவர் :

  அவ்வையார்.

பாடப்பட்டோன் :

  அதியமான் நெடுமான் அஞ்சி.

திணை :

  பொதுவியல்.

துறை :

  கையறுநிலை.


பாடல் பின்னணி:

அதியமான் இறந்த பிறகு, தன் வருத்தத்தை இப்பாடலில் கூறுகின்றார் ஔவையார்.

சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே,
பெரிய கள் பெறினே
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே,
சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே,
பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே, . . . . [05]

என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும் மன்னே,
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும் மன்னே,
நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என் தலை தைவரும் மன்னே,
அருந்தலை இரும் பாணர் அகன் மண்டைத் துளை உரீஇ . . . . [10]

இரப்போர் கையுளும் போகி
புரப்போர் புன் கண் பாவை சோர
அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அரு நிறத்து இயங்கிய வேலே, . . . . [15]

ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ,
இனிப் பாடுநரும் இல்லை, பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை,
பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மா மலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே . . . . [20]

பொருளுரை:

சிறிதளவு கள்ளைப் பெற்றால் எங்களுக்குத் தருவான். நிறையக் கள்ளைப் பெற்றால் எங்களுக்கு அளித்து நாங்கள் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான். சிறிதளவு சோறு இருந்தாலும் அதைப் பலருடன் பகிர்ந்து உண்ணுவான். பெருமளவு சோறு கிடைத்தாலும் அதைப் பலரோடு பகிர்ந்து உண்ணுவான். எலும்புடன் கூடிய தசைக் கிடைத்தால் அதை எங்களுக்கு அளிப்பான். அம்புடன் வேல் உடைய போர்க்களமானால் தானே அங்குச் சென்று நிற்பான். நரந்த நறுமணமிக்கத் தன் கையால் புலவு நாற்றமுடைய என் தலையை அன்புடன் தடவுவான்.

அவனுடைய மார்பைத் துளைத்த வேல், அரிய தலைமையையுடைய பெரிய கூட்டமாக உள்ள பாணர்களின் அகன்ற பாத்திரங்களைத் துளைத்து, இரப்போர்க் கைகளையும் துளைத்து, அவனால் பாதுகாக்கப்படுபவர்களின் கண்களில் ஒளி மழுங்கச் செய்து, அழகிய சொற்களும் ஆராய்ந்த அறிவையுமுடைய புலவர்கள் நாவில் சென்று விழுந்தது.

எங்களுக்குப் பற்றுக்கோடாக இருந்தவன் எங்கு உளனோ? இனி பாடுபவர்கள் இல்லை. பாடுபவர்களுக்குக் கொடுப்போரும் இல்லை. குளிர்ந்த நீர்த்துறையில், தேனையுடைய பெரிய பகன்றை மலர்கள் சூடுவார் இல்லாது வாடுவது போல், பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் வாழ்ந்து இறப்பவர்கள் மிகப் பலர்.

சொற்பொருள்:

சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் - சிறிதளவு கள்ளைப் பெற்றால் எங்களுக்குத் தருவான், மன் - கழிவுக் குறிப்பு, ஏ - அசைநிலை, பெரிய கள் பெறினே யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் - நிறையக் கள்ளைப் பெற்றால் எங்களுக்கு அளித்து நாங்கள் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான், மன் - கழிவுக் குறிப்பு, ஏ - அசைநிலை, சிறு சோற்றானும் நனி பல கலத்தன் - சிறிதளவு சோறு இருந்தாலும் அதைப் பலருடன் பகிர்ந்து உண்ணுவான், மன் - கழிவுக் குறிப்பு, ஏ - அசைநிலை, பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன் - பெருமளவு சோறு கிடைத்தாலும் அதைப் பலரோடு பகிர்ந்து உண்ணுவான், மன் - கழிவுக் குறிப்பு, ஏ - அசைநிலை, என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும் - எலும்புடன் கூடிய தசைக் கிடைத்தால் அதை எங்களுக்கு அளிப்பான், மன் - கழிவுக் குறிப்பு, ஏ - அசைநிலை, அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும் - அம்புடன் வேல் உடைய போர்க்களமானால் தானே அங்குச் சென்று நிற்பான், மன் - கழிவுக் குறிப்பு, ஏ - அசைநிலை, நரந்தம் நாறும் தன் கையால் புலவு நாறும் என் தலை தைவரும் - நரந்த நறுமணமிக்கத் தன் கையால் புலவு நாற்றமுடைய என் தலையை அன்புடன் தடவுவான், மன் - கழிவுக் குறிப்பு, ஏ - அசைநிலை, அருந்தலை - அறிய தலைமை, இரும் பாணர் அகன் மண்டைத் துளை உரீஇ - பெரிய கூட்டமாக உள்ள பாணர்களின் அகன்ற பாத்திரங்களைத் துளைத்து (உரீஇ - அளபெடை), இரப்போர் கையுளும் போகி - இரப்போர்க் கைகளையும், புரப்போர் - பாதுகாக்கப்படுபவர்கள், புன்கண், துன்பம், பாவை சோர - கருவிழி மழுங்க, அம் சொல் - அழகிய சொற்கள், நுண் தேர்ச்சி - நுண்மையான ஆராய்ச்சி, புலவர் நாவில் சென்று வீழ்ந்தன்று - புலவர்களின் நாவில் சென்று வீழ்ந்தது, அவன் அரு நிறத்து இயங்கிய வேலே - அவனுடைய மார்பைத் துளைத்த வேல், ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ - எங்களுக்குப் பற்றுக்கோடாக இருந்த எங்கள் தலைவன் எங்கு இருக்கிறானோ (கொல்லோ - கொல் ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை), இனி பாடுநரும் இல்லை - இனிமேல் பாடுபவர்களும் இல்லை, பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை - பாடுபவர்களுக்குக் கொடுப்பவர்களும் இல்லை, பனித் துறைப் பகன்றை - குளிர்ந்த நீர்த் துறையில் உள்ள பகன்றை மலர்கள், நறைக் கொள் மா மலர் - தேனையுடைய பெரிய மலர்கள், சூடாது வைகியாங்கு - சூடப்படாது கழிந்தாற்போல், பிறர்க்கு ஒன்று ஈயாது - பிறர்க்கு ஒன்றும் கொடுக்காது, வீயும் உயிர்தவப் பலவே - மாய்ந்துப் போகும் உயிர்கள் மிகப் பல (பலவே - ஏகாரம் அசைநிலை)