புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 222

என் இடம் யாது?


என் இடம் யாது?

பாடியவர் :

  பொத்தியார்.

பாடப்பட்டோன் :

  கோப்பெருஞ் சோழன்.

திணை :

  பொதுவியல்.

துறை :

  கையறுநிலை.


பாடல் பின்னணி:

கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது, புலவர் பொத்தியார் அவனுடன் வடக்கிருக்க விரும்பினார். ஆனால் கோப்பெருஞ்சோழன், “உன் மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகு நீ என்னோடு வடக்கிருக்கலாம்” என்று கூறி அவரை அனுப்பினார். தன்னுடைய மனைவிக்குக் குழந்தை பிறந்த பின் பொத்தியார் வடக்கிருக்க வந்தார். ஆனால் கோப்பெருஞ்சோழன் இறந்து விட்டான். அவனுக்கு நடுகல் ஒன்று நாட்டப்பட்டது. அதைக் கண்ட பொத்தியார், இவ்வாறு பாடுகின்றார்.

“அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா” என
என் இவண் ஒழித்த அன்பிலாள!
எண்ணாது இருக்குவை அல்லை, . . . . [05]

என் இடம் யாது, மற்று இசை வெய்யோயே?

பொருளுரை:

தீயைப் போல விளங்கும் பொன் அணிகலன்களை அணிந்த மேனியுடைய, உன் நிழலை விட்டு நீங்காத, உன்னை விரும்பும் மனைவி உன்னுடைய புகழ் நிறைந்த புதல்வனைப் பெற்றபின் வா எனக் கூறி, என்னை இங்கிருந்து போகச் சொன்ன அன்பில்லாதவனே! நீ நம்முடைய நட்பை எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்க மாட்டாய். எனக்குரிய இடம் எது, புகழை விரும்புபவனே?

சொற்பொருள்:

அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி - தீயைப் போல விளங்கும் பொன் அணிகலன்களை அணிந்த மேனி, நிழலினும் போகா நின் வெய்யோள் - உன் நிழலை விட்டு நீங்காத உன்னை விரும்பும் மனைவி, பயந்த புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா - உன்னுடைய புகழ் நிறைந்த புதல்வனைப் பெற்றபின் வா, என - எனக் கூறி, என் இவண் ஒழித்த அன்பிலாள - இங்கிருந்து போகச் சொன்ன அன்பில்லாதவனே, எண்ணாது இருக்குவை அல்லை - நம்முடைய நட்பை எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்க மாட்டாய், என் இடம் யாது - எனக்குரிய இடம் எது, மற்று - ஓர் அசைச் சொல், இசை வெய்யோயே - புகழை விரும்புபவனே (வெய்யோயே - ஏகாரம் அசைநிலை)