புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 216

அவனுக்கும் இடம் செய்க!


அவனுக்கும் இடம் செய்க!

பாடியவர் :

  கோப்பெருஞ் சோழன்.

திணை :

  பாடாண்.

துறை :

  இயன் மொழி.


பாடல் பின்னணி:

புலவர் பிசிராந்தையார் தன்னைக் காண வருவாரோ என்று ஐயம் கொள்ளும் சான்றோர்களுக்கு இதை உரைக்கின்றான் கோப்பெருஞ்சோழன்.

“கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் இல்லாது, யாண்டு பல கழிய
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும்
அரிதே, தோன்றல், அதற்பட ஒழுகல்” என்று
ஐயம் கொள்ளன்மின் ஆர் அறிவாளீர்! . . . . [05]

இகழ்விலன், இனியன், யாத்த நண்பினன்,
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே,
தன் பெயர் கிளக்கும் காலை, “என் பெயர்
பேதைச் சோழன்” என்னும் சிறந்த
காதற் கிழமையும் உடையவன், அதன்தலை, . . . . [10]

இன்னது ஓர் காலை நில்லலன்,
இன்னே வருகுவன், ஒழிக்க அவற்கு இடமே.

பொருளுரை:

“உன்னைப் பற்றி அவன் கேட்டிருக்கின்றானே தவிரச் சிறிதும் கண்டதில்லை. பல ஆண்டுகள் செல்ல, தவறு இல்லாது நெருங்கிப் பழகியவர் என்றாலும், குற்றமில்லாத முறையில் ஒழுகுதல் அரிதே, தோன்றல்” என்று ஐயம் கொள்ளாதீர்கள், அறிவுடையவர்களே!

என்னை இகழ்பவன் இல்லை அவன். அவன் இனியவன். மிக நெருங்கிய நட்பினையுடையவன். புகழை அழிக்கும் பொய்யைக் வேண்ட மாட்டான். தன்னுடைய பெயரைப் பிறர்க்குச் சொல்லும் பொழுது, “என்னுடைய பெயர் பேதமையுடைய சோழன்” என்று என் பெயரைக் கூறுவான். மிகுந்த அன்பு உரிமைக் கொண்டவன். அதற்குமேல், இந்த நிலையில் வராதிருக்க மாட்டான். இப்பொழுதே வருவான். அவனுக்கு ஓரிடம் ஒதுக்குங்கள்.

சொற்பொருள்:

கேட்டல் மாத்திரை அல்லது யாவதும் காண்டல் இல்லாது - உன்னைப் பற்றி அவன் கேட்டிருக்கின்றானே தவிர சிறிதும் கண்டதில்லை, யாண்டு பல கழிய - பல ஆண்டுகள் செல்ல, வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும் - தவறு இல்லாது நெருங்கிப் பழகியவர் என்றாலும், அரிதே தோன்றல் - அரிது தலைவனே (அரிதே - ஏகாரம் அசைநிலை), அதற்பட ஒழுகல் என்று - குற்றமில்லாத முறையில் ஒழுகுதல், ஐயம் கொள்ளன்மின் - ஐயம் கொள்ளாதீர்கள், ஆர் அறிவாளீர் - நிறைந்த அறிவுடையவர்கள், இகழ்விலன் - என்னை இகழ்பவன் இல்லை அவன், இனியன் - அவன் இனியவன், யாத்த நண்பினன் - மிக நெருங்கிய நட்பினையுடையவன், புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே - புகழை அழிக்கும் பொய்யைக் வேண்ட மாட்டான் (வரூஉம் - அளபெடை, வேண்டலனே - ஏகாரம் அசைநிலை), தன் பெயர் கிளக்கும் காலை - தன்னுடைய பெயரைப் பிறர்க்குச் சொல்லும் பொழுது, என் பெயர்பேதைச் சோழன் என்னும் - என்னுடைய பெயர் பேதமையுடைய சோழன் என்று என் பெயரைக் கூறுவான், சிறந்த காதற் கிழமையும் உடையவன் - மிகுந்த அன்பு உரிமைக் கொண்டவன், அதன்தலை - அதற்குமேல், இன்னது ஓர் காலை நில்லலன் - இந்த நிலையில் வராதிருக்க மாட்டான், இன்னே வருகுவன் - இப்பொழுதே வருவான், ஒழிக்க அவற்கு இடமே - அவனுக்கு ஓரிடம் ஒதுக்குங்கள் (இடமே - ஏகாரம் அசைநிலை)