புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 202

கைவண் பாரி மகளிர்!


கைவண் பாரி மகளிர்!

பாடியவர் :

  கபிலர்.

பாடப்பட்டோன் :

  இருங்கோவேள்.

திணை :

  பாடாண்.

துறை :

  பரிசில்.


பாடல் பின்னணி:

பாரி இறந்த பின்னர், கபிலர் பாரியின் பெண்களை தன்னுடைய பெண்களாக ஏற்று, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி குறுநில மன்னனான இருங்கோவேளை அணுகுகின்றார்.

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல் ஏறு
கடறு மணி கிளரச் சிதறு பொன் மிளிரக்
கடிய கதழும் நெடு வரைப் படப்பை,
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி, . . . . [05]

இரு பால் பெயரிய உருகெழு மூதூர்க்
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள் இனி,
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல், . . . . [10]

நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே, இயல் தேர் அண்ணல்,
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று இவர்
கைவண் பாரி மகளிர் என்ற என் . . . . [15]

தேற்றாப் புன் சொல் நோற்றிசின் பெரும,
விடுத்தனென், வெலீஇயர் நின் வேலே, அடுக்கத்து
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள் வீ தாய துறுகல்
இரும்புலி வரிப் புறம் கடுக்கும் . . . . [20]

பெருங்கல் வைப்பின் நாடு கிழவோயே.

பொருளுரை:

வெட்சி செடிகளையுடைய காட்டில் வேடுவர்கள் விரட்ட, புகலிடம் காணாத காட்டு மாவினது நல்ல ஏறு, மலைச் சரிவில், மணி மேலே கிளம்பவும் சிதறிய பொன் விளங்கவும் விரைந்தோடும் உயர்ந்த மலையின் பக்கத்தில், வெற்றி நிலைபெற்ற சிறந்த புகழ் பொருந்திய சிற்றரையம் பேரரையம் என்று இரண்டு பகுதிகளைக் கொண்ட அச்சம் பொருந்திய பழைய ஊர் பல கோடியாக அடுக்கப்பட்டிருந்த பொன்னை நுமக்கு கொடுத்து உதவியது. அந்த பெரிய அரையத்தினது கேட்டை கேட்பாயாக இனி, உன் தந்தையின் அரசு உரிமையை நிறைய பெற்ற தழைத்த மலர்க் கண்ணியை அணிந்த புலிகடிமாலே! உன்னைப் போல் அறிவில் ஒத்த, உன் குடியின் ஒருவன், புகழ்ந்த செய்யுளையுடைய கழாத்தலையார் என்ற புலவரை அவமதித்ததன் பயனே அது.

இயற்றப்பட்ட தேரையுடைய தலைவனே! இவர்கள் எவ்வியின் தொன்மையான குடியில் பொருந்துவார்களாக, பின்னை இவர்கள் கொடைத் தன்மையுடைய பாரியின் பெண்கள் என்று சொல்லிய என் பொருந்தாத புல்லிய சொற்களைப் பொறுத்துக்கொள்வாயாக பெருமானே! நான் விடை பெறுகிறேன். உன் வேல் வெல்லட்டும், மலையில் அரும்பு இல்லாமல் மலர்ந்த கரிய அடியை உடைய வேங்கை மரத்தின் கரிய புற இதழையுடைய மலர்கள் பரவியதால் பாறைகள் வரியுடைய பெரிய புலிகள் போன்று தோன்றும் பெரிய மலையை உடைய நாட்டின் தலைவனே!

குறிப்பு:

சின் - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை - ச. பாலசுந்தரம் உரை). விழு (விழுமம்) - விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

சொற்பொருள்:

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட - வெட்சி செடிகளையுடைய காட்டில் வேடுவர்கள் விரட்ட, கட்சி காணாக் கடமா நல் ஏறு - புகலிடம் காணாத காட்டு மாவினது நல்ல ஏறு, கடறு மணி கிளரச் சிதறு பொன் மிளிர - மலைச் சரிவில் மணி மேலே கிளம்பவும் சிதறிய பொன் விளங்கவும், கடிய கதழும் - விரைந்தோடும், நெடு வரைப் படப்பை - உயர்ந்த மலையின் பக்கம், வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி - வெற்றி நிலைபெற்ற சிறந்த புகழ் பொருந்தி (நிலைஇய - அளபெடை), இரு பால் பெயரிய உருகெழு மூதூர் - சிற்றரையம் பேரரையம் என்று இரண்டு பகுதிகளைக் கொண்ட அச்சம் பொருந்திய பழைய ஊர், கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய - பல கோடியாக உள்ள பொன்னை நுமக்கு உதவிய, நீடு நிலை அரையத்துக் கேடும் கேள் இனி - அரையத்தினது கேட்டையும் கேட்பாயாக இனி, நுந்தை தாயம் நிறைவுற எய்திய - உன் தந்தையின் உரிமையை நிறைய பெற்ற, ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல் - தழைத்த மலர்க் கண்ணியை அணிந்த புலிகடிமால் (புலிகடிமாஅல் - அளபெடை), நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் - உன்னைப் போல் அறிவில் ஒத்த உன் குடியின் ஒருவன், புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை இகழ்ந்ததன் பயனே - புகழ்ந்த செய்யுளையுடைய கழாத்தலையார் என்ற புலவரை அவமதித்ததன் பயனே (பயனே - ஏகாரம் அசைநிலை), இயல் தேர் அண்ணல் - இயற்றப்பட்ட தேரையுடைய தலைவனே, எவ்வி தொல் குடிப் படீஇயர் - இவர்கள் எவ்வியின் தொன்மையான குடியில் பொருந்துவார்களாக (படீஇயர் - அளபெடை), மற்று இவர் கைவண் பாரி மகளிர் என்ற - பின்னை இவர்கள் கொடைத் தன்மையுடைய பாரியின் பெண்கள் என்று சொல்லிய, என் தேற்றாப் புன் சொல் நோற்றிசின் பெரும - என் பொருந்தாத புல்லிய சொற்களைப் பொறுத்துக்கொள்வாயாக பெருமானே, விடுத்தனென் - நான் விடை பெற்றேன், வெலீஇயர் நின் வேலே - உன் வேல் வெல்லட்டும் (வெலீஇயர் - அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி, வேலே - ஏகாரம் அசைநிலை), அடுக்கத்து - மலையில், அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள் வீ தாய - அரும்பு இல்லாமல் மலர்ந்த கரிய அடியை உடைய வேங்கை மரத்தின் பெரிய/கரிய புற இதழையுடைய மலர்கள் பரவி, துறுகல் இரும்புலி வரிப் புறம் கடுக்கும் - பாறைகள் வரியுடைய பெரிய புலிகள் போன்று தோன்றும் (கடுக்கும் - உவம உருபு), பெருங்கல் வைப்பின் நாடு கிழவோயே - பெரிய மலையை உடைய நாட்டின் தலைவனே (கிழவோயே - ஏகாரம் அசைநிலை)