புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 201

இவர் என் மகளிர்!


இவர் என் மகளிர்!

பாடியவர் :

  கபிலர்.

பாடப்பட்டோன் :

  இருங்கோவேள்.

திணை :

  பாடாண்.

துறை :

  பரிசில்.


பாடல் பின்னணி:

பாரி இறந்த பின்னர், கபிலர் பாரியின் பெண்களை தன்னுடைய பெண்களாக ஏற்று, அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணி குறுநில மன்னனான இருங்கோவேளை அணுகுகின்றார்.

இவர் யார் என்குவை ஆயின், இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை
படுமணி யானைப் பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர், யானே . . . . [05]

தந்தை தோழன், இவர் என் மகளிர்,
அந்தணன், புலவன் கொண்டு வந்தனனே,
நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு . . . . [10]

நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேள விறல் போர் அண்ணல்,
தார் அணி யானைச் சேட்டு இருங்கோவே,
ஆண் கடன் உடைமையின் பாண் கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல், . . . . [15]

யான் தர இவரைக் கொண்மதி, வான் கவித்து
இருங்கடல் உடுத்த இவ் வையகத்து அருந்திறல்
பொன்படு மால் வரைக் கிழவ, வென் வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே . . . . [20]

பொருளுரை:

இவர்கள் யார் என்று என்னிடம் நீ கேட்பாய் ஆயின், இவர்களே தன்னுடைய ஊர்கள் எல்லாவற்றையும் இரவலர்க்கு கொடுத்து, தன்னுடைய தேரை முல்லைக் கொடிக்குக் கொடுத்த, தொலையாத நல்ல புகழையுடைய ஒலிக்கும் மணிகளையுடைய யானைகளையுடைய பறம்பு மலையின் மன்னனான மிகப் பெரிய பாரியின் மகளிர். நான் இவர்களுடைய தந்தையின் நண்பன், இவர்கள் என்னுடைய மகளிர், நான் ஓர் அந்தணன், புலவனான நான் இவர்களைக் கொண்டு வந்துள்ளேன்.

நீ வடபக்கத்து முனிவனுடைய ஓமகுண்டத்தில் தோன்றி செம்பால் செய்யப்பட்ட மிக உயர்ந்த மதிலையுடைய துவரையை ஆண்டு, விடாத ஈகை உடையவராய் 49 தலைமுறையாக வந்த வேளிர் பரம்பரையில் வந்த போரில் வெற்றிகரமான தலைவனே! மாலைகள் அணிந்த யானைகளையுடைய பெரிய இருங்கோவே! ஆண் தன்மையைக் கடமையாகக் கொண்டமையால், பாணர்க்குச் செய்ய வேண்டிய கடமையை ஆற்றிய, தழைத்த மலர்க் கண்ணியை அணிந்த புலிகடிமால்!

நான் உனக்குத் தர நீ இவர்களை ஏற்றுக் கொள்வாயாக! வானால் கவிக்கப்பட்டப் பெரிய கடல் சூழ்ந்த இந்த உலகத்தில், அணுகுதற்கரிய வலிமை உடைய பொன்னையுடைய உயர்ந்த மலையின் தலைவனே! வெற்றி வேலையுடைய பகைவர் அஞ்சும் கேடு இல்லாத நாட்டின் தலைவனே!

குறிப்பு:

செம்புச் சுவர்: புறநானூறு 201 - செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, அகநானூறு 375, புறநானூறு 37 - செம்பு உறழ் புரிசை, மதுரைக்காஞ்சி 485 - செம்பு இயன்றன்ன செஞ்சுவர், நெடுநல்வாடை 112 - செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ் சுவர். மதி - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26). வடபால் முனிவன் (8) - ஒளவை துரைசாமி உரை - மைசூர் நாட்டுத் துவரை. இப்புறப்பாட்டில் முனிவன் என்றும், துவரை என்றும் புலிகடிமால் என்றும் வருவனவற்றைக் கொண்டு, இது ஹொய்சளக் கதை என நினைக்கப்படுகிறது. வடபால் முனிவன் சம்பு முனிவனாக இருக்கலாமென உ. வேசா ஐயரவர்கள் ஊகிக்கின்றார்கள். துவரை என்றது, வடநாட்டில் ‘நிலங்கடந்த நெடுமுடியண்ணல்’ இருந்து ஆட்சிபுரிந்த துவரையென்னும் அவன் பாலிருந்து மலயமாதவனான குறுமுனிவன் கொணர்ந்த வேளிர்கள் என்றும் பதினெண்குடியினர் என்றும் நச்சினார்க்கினியர் குறிக்கின்றார், ஐராவதம் மகாதேவன் - அகத்தியர். தடவினுள் (8) - ஒளவை துரைசாமி உரை - ஓமகுண்டத்தின்கண், உ. வே. சாமிநாதையர் உரை - ஓமகுண்டத்தின்கண்.

சொற்பொருள்:

இவர் யார் என்குவை ஆயின் - இவர்கள் யார் என்று கேட்பாய் ஆயின், இவரே - இவர்களே, ஊருடன் இரவலர்க்கு அருளி - ஊர் எல்லாவற்றையும் இரவலர்க்கு கொடுத்து, தேருடன் முல்லைக்கு ஈத்த - தேரை முல்லைக் கொடிக்குக் கொடுத்த, செல்லா நல்லிசை - அழியாத நல்ல புகழ், படுமணி யானை - ஒலிக்கும் மணிகளையுடைய யானைகளையுடைய, பறம்பின் கோமான் நெடுமாப் பாரி மகளிர் - பறம்பு மலையின் மன்னனான மிக்க பெரிய பாரியின் மகளிர், யானே தந்தை தோழன் - நான் இவர்களுடைய தந்தையின் நண்பன், இவர் என் மகளிர் - இவர்கள் என்னுடைய மகளிர், அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே - புலவனான நான் அவர்களைக் கொண்டு வந்துள்ளேன், நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி - நீயே வடபக்கத்து முனிவனுடைய ஓமகுண்டத்தில் தோன்றி, செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை - செம்பால் செய்யப்பட்ட மிக உயர்ந்த மதில், உவரா ஈகை - விடாத ஈகை, துவரை யாண்டு - துவரையை ஆண்டு, நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் - 49 தலைமுறையாக வந்த வேளிருள், வேள விறல் போர் அண்ணல் - வேளிர் பரம்பரையின் போரில் வெற்றிகரமான தலைவனே, தார் அணி யானைச் சேட்டு இருங்கோவே - மாலைகள் அணிந்த யானைகளையுடைய பெரிய இருங்கோவே, ஆண் கடன் உடைமையின் - ஆண் தன்மையைக் கடமையாக கொண்டமையால், பாண் கடன் ஆற்றிய - பாணர்க்கு செய்ய வேண்டிய கடமையை ஆற்றிய, ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல் - தழைத்த மலர்க் கண்ணியை அணிந்த புலிகடிமால், யான் தர இவரைக் கொண்மதி - நான் தர நீ இவர்களை ஏற்றுக் கொள்வாயாக, வான் கவித்து - வானால் கவிக்கப்பட்டு, இருங்கடல் உடுத்த இவ் வையகத்து - பெரிய கடல் சூழ்ந்த இந்த உலகத்தில், அருந்திறல் - அணுகுதற்கரிய வலிமை, பொன்படு மால் வரைக் கிழவ - பொன்னையுடைய உயர்ந்த மலையின் தலைவனே, வென் வேல் உடலுநர் உட்கும் தானை - வெற்றி வேலையுடைய பகைவர் அஞ்சும் தானை, கெடல் அருங்குரைய நாடு கிழவோயே - கேடு இல்லாத நாட்டின் தலைவனே (குரைய - ஓர் அசைநிலை, கிழவோயே - ஏகாரம் அசைநிலை)