புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 189

உண்பதும் உடுப்பதும்!


உண்பதும் உடுப்பதும்!

பாடியவர் :

  மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

திணை :

  பொதுவியல்.

துறை :

  பொருண்மொழிக் காஞ்சி.


பாடல் பின்னணி:

வேந்தனாக இருந்தாலும் வேடுவனாக இருந்தாலும் உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் ஒன்று தான். அளவுக்கு மீறிய செல்வம் இருந்தால் அதை அனுபவிக்க முடியாது. செல்வத்தின் பயன் ஈதல் என்று இப்பாடலில் நக்கீரனார் கூறுகின்றார்.

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே, . . . . [05]

பிறவும் எல்லாம் ஓரொக்குமே,
செல்வத்துப் பயனே ஈதல்,
துய்ப்பேம் எனினே தப்புந பலவே.

பொருளுரை:

தெளிந்த கடலால் சூழப்பட்ட இந்த உலகைப் பிற வேந்தர்களுக்குப் பொதுவானது என எண்ணாமல் தானே ஆட்சி செய்யும் மன்னனுக்கும், இரவிலும் பகல் பொழுதிலும் தூங்காது விரைந்து செல்லும் விலங்குகளை வீழ்த்தப் பார்க்கும் கல்வி கற்காத ஒருவனுக்கும், தேவை நாழி அளவு உணவு தான். அவர்கள் உடுப்பது இரண்டு ஆடைகள் தான். மற்ற தேவைகளிலும் இருவரும் ஒப்பானவர்களே. செல்வத்தின் பயன் என்பது பிறர்க்குக் கொடுத்தல். செல்வத்தைப் பிறருக்கு அளிக்காமல் தானே அனுபவிக்கலாம் என்று ஒருவன் நினைத்தால், அவன் பல பயன்களை இழப்பான்.

குறிப்பு:

பல (9) - உ. வே. சாமிநாதையர் உரை - பல என்பது அறம், பொருள் இன்பங்களை.

சொற்பொருள்:

தெண் கடல் - தெளிந்த கடல், வளாகம் - சூழப்பட்ட இடம், பொதுமை - பிற வேந்தர்களுக்கு பொதுவானது என, இன்றி - இல்லாமல், வெண்குடை - ஆட்சிக் குடை, நிழற்றிய - நிழலின் கீழ், ஒருமையோர்க்கும் - ஒரு தன்மை உடையோர்க்கும், நடு நாள் யாமத்தும் - நடு இரவிலும், பகலும் - பகல் பொழுதும், துஞ்சான் - தூங்காதவன், கடு மா - விரைந்து செல்லும் விலங்குகள், பார்க்கும் - வீழ்த்தப் பார்க்கும், கல்லா ஒருவற்கும் - கல்வி கற்காத ஒருவற்கும், உண்பது - உண்பது, நாழி - ஒரு அளவு, உடுப்பவை - உடையாக உடுப்பது, இரண்டே - இரண்டு தான், பிறவும் எல்லாம் - மற்றவை எல்லாம், ஓரொக்குமே - ஒத்திருப்பவை (ஓரொக்குமே - ஏகாரம் அசைநிலை), செல்வத்துப் பயனே - செல்வத்தின் பயனே (பயனே - ஏகாரம் அசைநிலை), ஈதல் - பிறர்க்கு கொடுத்தல், துய்ப்பேம் - நானே நுகர்வேன் (தன்மைப் பன்மை), எனினே - என்றால் (ஏகாரம் அசைநிலை), தப்புந - தவறுவன, பலவே - பல (பலவே - ஏகாரம் அசைநிலை).