புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 165

இழத்தலினும் இன்னாது!


இழத்தலினும் இன்னாது!

பாடியவர் :

  பெருந்தலைச் சாத்தனார்.

பாடப்பட்டோன் :

  குமணன்.

திணை :

  பாடாண்.

துறை :

  பரிசில் விடை.


பாடல் பின்னணி:

குமணனின் தம்பி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு குமணனை விரட்டிவிட்டான். குமணன் காட்டிலிருந்த பொழுது, புலவர் பெருந்தலைச் சாத்தனார் குமணனை பரிசுக்காக அணுகிய வேளையில் தன்னிடம் கொடுக்க ஒன்றும் இல்லாததால், தன் தலையைக் கொய்து தன் தம்பியிடம் கொடுத்து புலவர் பரிசு வாங்கும் பொருட்டு குமணன் வாளை அவரிடம் கொடுத்தான். இதைப் புலவர் தம்பியிடம் கூறினார். தன் தவறுக்கு வருந்தி, குமணனை அழைத்து வந்து நாட்டை அண்ணனிடம் கொடுத்தான் இளங்குமணன்.

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே
துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின்
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே . . . . [05]

தாள் தாழ் படு மணி இரட்டும் பூ நுதல்
ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடு இல் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றனென் ஆகக் கொன்னே
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் . . . . [10]

நாடு இழந்ததனினும் நனி இன்னாது என
வாள் தந்தனனே தலை எனக்கு ஈயத்
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்
ஆடு மலி உவகையோடு வருவல்
ஓடாப் பூட்கை நின் கிழமையோன் கண்டே . . . . [15]

பொருளுரை:

நிலையில்லாத உலகத்தில் நிலைபெற எண்ணினவர்கள், தங்களுடைய புகழை நிறுவித் தாங்கள் இறந்தனர். அணுகுதற்கரிய சிறப்புடைய உயர்ந்த செல்வந்தர்கள் வறுமையால் வருபவர்களுக்கு கொடாமையால், பழைய வள்ளல்களின் வரிசையில் சேராதவர்களாக இருக்கின்றனர். கால்வரைத் தாழ்ந்து மாறி மாறி ஒலிக்கும் மணிகளையுடைய, நெற்றியில் புள்ளிகளையுடைய, அசையும் தன்மையுடைய யானைகளை பாடுபவர்களுக்கு குறைக்காது கொடுக்கும் கேடு இல்லாத நல்ல புகழுடைய வலிய குதிரைகளையுடைய மன்னனைப் பாடி நின்றேனாக, தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின் “பயன் இன்றி பெருமை மிக்க பரிசிலர் பரிசு பெறாமல் வாடிச் செல்லுதல், என் நாட்டை இழந்ததைவிட கொடுமையானது” என்று கூறி வாளை என்னிடம் கொடுத்தான், தன்னுடைய தலையை எனக்கு ஈய. வெற்றி அடைந்த உவகையால் வந்தேன், போரில் புறம் காட்டி ஓடாத கொள்கையுடைய உன் தமையனைக் கண்டு.

சொற்பொருள்:

மன்னா உலகத்து - நிலையில்லாத உலகத்தில், மன்னுதல் குறித்தோர் - நிலைபெற எண்ணினவர்கள், தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே - தங்களுடைய புகழை நிறுவித் தாங்கள் இறந்தனர் (நிறீஇ - அளபெடை, மாய்ந்தனரே - ஏகாரம் அசைநிலை), துன் அருஞ் சிறப்பின் - அணுகுதற்கரிய சிறப்புடைய, உயர்ந்த செல்வர் - உயர்ந்த செல்வந்தர்கள், இன்மையின் - இல்லாததால், இரப்போர்க்கு ஈஇயாமையின் - வறுமையால் வருபவர்களுக்கு கொடாமையால் (ஈஇயாமையின் - அளபெடை), தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே - பழைய வள்ளல்களின் வரிசையில் சேராதவர்களாக இருக்கின்றனர் (அறியலரே - ஏகாரம் அசைநிலை), தாள் தாழ் படு மணி இரட்டும் - கால்வரைத் தாழ்ந்து மாறி மாறி ஒலிக்கும் மணி, பூ நுதல் ஆடியல் யானை - நெற்றியில் புள்ளிகளையுடைய அசையும் தன்மையுடைய யானைகள், பாடுநர்க்கு அருகா - பாடுபவர்களுக்கு குறைக்காது கொடுக்கும், கேடு இல் நல்லிசை - கேடு இல்லாத நல்ல புகழ், வயமான் தோன்றலைப் பாடி நின்றனென் ஆக - வலிய குதிரைகளையுடைய மன்னனைப் பாடி நின்றேனாக, கொன்னே - பயன் இன்றி, பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் - பெருமை மிக்க பரிசிலர் பரிசு பெறாமல் வாடிச் செல்லுதல், என் நாடு இழந்ததனினும் நனி இன்னாது என - என் நாட்டை இழந்ததைவிட கொடுமையானது என்று, வாள் தந்தனனே - வாளை என்னிடம் கொடுத்தான், தலை எனக்கு ஈய - தன்னுடைய தலையை எனக்கு ஈய, தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின் - தன்னிடம் கொடுக்க தன்னைவிட சிறந்தது எதுவும் இல்லாததால், ஆடு மலி உவகையோடு வருவல் - வெற்றி அடைந்த உவகையால் வந்தேன், ஓடாப் பூட்கை - போரில் புறம் காட்டி ஓடாத கொள்கை, நின் கிழமையோன் கண்டே - உன் தமையனைக் கண்டு (கண்டே - ஏகாரம் அசைநிலை)