புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 158

உள்ளி வந்தெனன் யானே!


உள்ளி வந்தெனன் யானே!

பாடியவர் :

  பெருஞ்சித்திரனார்.

பாடப்பட்டோன் :

  குமணன்.

திணை :

  பாடாண்.

துறை :

  வாழ்த்தியல்; பரிசில் கடாநிலையுமாம்.

முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும், பிறங்கு மிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும், . . . . [05]

காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த
மாரி ஈகை மறப்போர் மலையனும்,
ஊராது ஏந்திய குதிரைக் கூர் வேல்
கூவிளங் கண்ணிக் கொடும் பூண் எழினியும்,
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளி முழை . . . . [10]

அருந்திறல் கடவுள் காக்கும் உயர் சிமைப்
பெருங்கல் நாடன் பேகனும், திருந்து மொழி
மோசி பாடிய ஆயும், ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவு நனி தீரத்
தள்ளாது ஈயும் தகை சால் வண்மைக் . . . . [15]

கொள்ளார் ஓட்டிய நள்ளியும், என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, அழி வரப்
பாடி வருநரும் பிறருங் கூடி,
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து, இவண்
உள்ளி வந்தனென் யானே, விசும்பு உறக் . . . . [20]

கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முள் புற முது கனி பெற்ற கடுவன்,
துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
அதிரா யாணர் முதிரத்துக் கிழவ, . . . . [25]

இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர்க் குமண,
இசை மேந் தோன்றிய வண்மையொடு
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே.

பொருளுரை:

முரசு குறுந்தடியால் அறையவும், வெள்ளைச் சங்கு முழங்கவும், வேந்தருடன் போரிட்ட தலைமை உடையவனும், உயர்ந்த மலையின் ஒலிக்கும் வெள்ளை அருவிகள் கற்களை உருட்டி ஓடும் பறம்பு நாட்டு மன்னவனுமான பாரியும், உயர்ந்த உச்சியை உடைய கொல்லி மலையை ஆண்ட வல்வில் ஓரியும், காரி என்னும் பெயரை உடைய குதிரையைச் செலுத்தி பெரிய போரினை வென்றவனும், மாரிபோலும் வண்மையையும், செலுத்தப்படாத உயர்ந்த குதிரை என்னும் மலையை உடையவனும், கூர்மையான வேலையும், கூவிள மலர்க்கண்ணியும், வளைந்த அணிகளையும் உடைய எழினி அதியமானும், மிக்க குளிர்ந்த மலையில் அடர்ந்த இருளைக் கொண்ட குகைகளைக் கொண்ட, அரிய வலிமையை உடைய கடவுள் காக்கும் உயர்ந்த சிகரங்களை உடைய பெரிய மலையின் மன்னனான பேகனும், திருந்திய சொற்களை உடைய உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் பாடிய ஆய் அண்டிரனும், ஆர்வத்துடன் தன்னை எண்ணி வருபவர்களின் வறுமை மிகவும் நீங்க, கொடுக்கும் பெரும் வண்மையும், பகைவர்களை விரட்டிய நள்ளியும், என்ற அந்த ஏழு பேர் இறந்த பின்னர், இரக்கம் வரப் பாடி வருபவர்களும் மற்றவர்களும் கூட, கேட்டு வருபவர்களின் துன்பத்தைத் தீர்ப்பேன் என்று நீ இருப்பதால், விரைந்து இங்கு வந்தேன் நான், உன்னை நினைத்து. வானத்தைத் தொடும் அளவு மூங்கில் வளர்ந்த மலையில் சுரபுன்னையுடன் உயர்ந்து, ஆசினிப் பலாவுடன் அழகு பெற்ற, பலா மரத்தின் பழத்தின் மேல் ஆசைப்பட்டு, முள்ளைப் புறத்தே உடைய முதிர்ந்த பலாப் பழத்தைப் பெற்ற ஆண் குரங்கு பஞ்சியைப் போன்ற தலையை உடைய பெண் குரங்கைக் கையால் குறி செய்து அழைக்கும், தளராத வளமையை உடைய முதிர மலையின் தலைவனே! இங்கு விளங்குகின்ற தலைமையை உடைய இயற்றப்பட்ட தேரினை உடைய குமணனே! புகழ் மேம்பட்ட வன்மையுடன், பகைவர்களிடத்து உயர்வதாக, நீ கையில் ஏந்திய வேல்!

குறிப்பு:

யாணர் - புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம், உரியியல் 83). நனி - உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3).

சொற்பொருள்:

முரசு - முரசு, கடிப்பு இகுப்பவும் - குறுந்தடியால் அறையவும், வால் வளை துவைப்பவும் - வெள்ளைச் சங்கு முழங்கவும், அரசுடன் பொருத அண்ணல் - வேந்தருடன் போரிட்ட தலைமை உடையவன், நெடு வரை - உயர்ந்த மலை, கறங்கு வெள் அருவி - ஒலிக்கும் வெள்ளை அருவி, கல் அலைத்து ஒழுகும் - கற்களை உருட்டி ஓடும், பறம்பின் கோமான் பாரியும் - பறம்பு நாட்டு மன்னவனான பாரியும், பிறங்கு மிசை - உயர்ந்த உச்சி, விளங்கும் உச்சி, கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும் - கொல்லி மலையை ஆண்ட வல்வில் ஓரியும், காரி ஊர்ந்து - காரி என்னும் பெயரை உடைய குதிரையைச் செலுத்தி, பேர் அமர்க் கடந்த - பெரிய போரினை வென்ற, மாரி ஈகை மறப்போர் மலையனும் - மாரிபோலும் வண்மையும், ஊராது ஏந்திய குதிரை - செலுத்தப்படாத உயர்ந்த குதிரை என்னும் மலை (ஊர்ந்துச் செல்லாத நெடிய குதிரையாகிய குதிரை மலை, வெளிப்படை), கூர் வேல் - கூர்மையான வேல், கூவிளங் கண்ணி - கூவிள மலர்க்கண்ணி, கொடும் பூண் எழினியும் - வளைந்த அணிகளை உடைய எழினி அதியமானும், ஈர்ந்தண் சிலம்பின் - மிக்க குளிர்ந்த மலையில், இருள் தூங்கும் நளி முழை - அடர்ந்த இருளைக் கொண்ட குகைகள், அருந்திறல் கடவுள் காக்கும் - அரிய வலிமையை உடைய கடவுள் காக்கும், உயர் சிமைப் பெருங்கல் நாடன் பேகனும் - உயர்ந்த சிகரங்களை உடைய பெரிய மலையின் மன்னனான பேகனும், திருந்து மொழி மோசி பாடிய ஆயும் - திருந்திய சொற்களை உடைய உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் பாடிய ஆய் அண்டிரனும் (புறநானூறு 127-135), ஆர்வமுற்று உள்ளி வருநர் உலைவு நனி தீர - ஆர்வத்துடன் தன்னை எண்ணி வருபவர்களின் வறுமை மிகவும் நீங்க, தள்ளாது ஈயும் - தவிராது கொடுக்கும், தகை சால் வண்மை - பெரும் வண்மை, கொள்ளார் ஓட்டிய நள்ளியும் - பகைவர்களை விரட்டிய நள்ளியும், என ஆங்கு எழுவர் மாய்ந்த பின்றை - என்ற ஏழு பேர் இறந்த பின்னர், அழி வரப் பாடி வருநரும் - இரக்கம் வரப் பாடி வருபவர்களும், பிறருங்கூடி - மற்றவர்களும் கூடி, இரந்தோர் அற்றம் தீர்க்கு - கேட்டு வருபவர்களின் துன்பத்தைத் தீர்ப்பேன் என்று நீ இருப்பதால், என விரைந்து - என்று விரைந்து, இவண் - இங்கு, உள்ளி வந்தனென் - நினைத்து வந்தேன், யானே - நான், விசும்பு உறக் கழை வளர் சிலம்பின்- வானத்தைத் தொடும் அளவு மூங்கில் வளர்ந்த மலையில், வழையொடு நீடி - சுரபுன்னையுடன் உயர்ந்து, ஆசினிக் கவினிய - ஆசினிப் பலாவுடன் அழகு பெற்ற, பலவின் ஆர்வுற்று - பலாப் பழத்தின் மேல் ஆசைப்பட்டு, முள் புற முது கனி பெற்ற கடுவன் - முள்ளைப் புறத்தே உடைய முதிர்ந்த பலாப் பழத்தைப் பெற்ற ஆண் குரங்கு, துய்த்தலை மந்தியை - பஞ்சியைப் போன்ற தலையை உடைய பெண் குரங்கை, கையிடூஉப் பயிரும் - கையால் குறி செய்து அழைக்கும் (கையிடூஉ - அளபெடை), அதிரா யாணர் முதிரத்துக் கிழவ - தளராத வளமையை உடைய முதிர மலையின் தலைவனே, இவண் விளங்கு சிறப்பின் - இங்கு விளங்குகின்ற தலைமையை உடைய, இயல் தேர்க் குமண - இயற்றப்பட்ட தேரினை உடைய குமணனே, இசை மேந்தோன்றிய வண்மையொடு - புகழ் மேம்பட்ட வன்மையுடன், பகை மேம்படுக - பகைவர்களிடம் உயர்வதாக, நீ ஏந்திய வேலே - நீ கையில் ஏந்திய வேல் (வேலே - ஏகாரம் அசைநிலை)