புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 146

தேர் பூண்க மாவே!


தேர் பூண்க மாவே!

பாடியவர் :

  அரிசில் கிழார்.

பாடப்பட்டோன் :

  வையாவிக் கோப்பெரும் பேகன்.

திணை :

  பெருந்திணை.

துறை :

  குறுங்கலி, தாபத நிலை.


பாடல் பின்னணி:

சான்றோராகிய அரிசில் கிழார் பாடக் கேட்ட பேகன் பரிசில் அளிக்க முன்வந்தான். அதை அறிந்த அரிசில் கிழார் இவ்வாறு பாடுகின்றார்.

அன்னவாக நின் அருங்கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம் அடு போர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்புல
நன்னாடு பாட என்னை நயந்து
பரிசில் நல்குவையாயின், குரிசில், நீ . . . . [05]

நல்காமையின் நைவரச் சாஅய்,
அருந்துயர் உழக்கும், நின் திருந்திழை அரிவை
கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன
ஒலிமென் கூந்தல் கமழ் புகை கொளீஇத்
தண் கமழ் கோதை புனைய, . . . . [10]

வண் பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே.

பொருளுரை:

அத்தன்மையுடையவாக, உன்னால் தரப்பட்ட பெறுதற்கு அரிய அணிகலனையும் செல்வத்தையும் பெறும் விருப்பம் எமக்கு இல்லை, கொல்லும் போரினைப் புரியும் பேகனே! சிறிய யாழில் செவ்வழிப் பண்ணை இசைத்து, உன்னுடைய வலிய நாடான மலைநாட்டை நான் பாட, என்னை விரும்பி நீ பரிசில் தருவாயாயின், தலைவனே, நீ அருள் புரியாமையால், கண்டவர்கள் இரங்க மெலிந்து, அரிய துயரத்தால் வருந்தும் திருந்திய அணிகலன் அணிந்த உன்னுடைய இளைய மனைவி, தழைத்த மயிலின் தோகை காற்றில் குவிந்தாற்போல் உள்ள தன் அடர்ந்த மென்கூந்தலில் நறுமணம் கமழும் புகையை ஊட்டி, குளிர்ந்த மணங்கமழும் மாலையைச் சூடுமாறு, விரைந்து செல்லும் குதிரைகளை உன்னுடைய உயர்ந்த தேரில் பூட்டுவாயாக!

குறிப்பு:

வேண்டேம் - தன்மைப் பன்மை, சாஅய் - அளபெடை, கொளீஇ - அளபெடை, மாவே - ஏகாரம் அசைநிலை.

சொற்பொருள்:

அன்னவாக - அத்தன்மையுடையவாக, நின் அருங்கல வெறுக்கை - உன்னால் தரப்பட்ட பெறுதற்கு அரிய அணிகலனும் செல்வமும், அவை பெறல் வேண்டேம் - அவற்றைப் பெறுவதில் எமக்கு விருப்பம் இல்லை (வேண்டேம் - தன்மைப் பன்மை), அடு போர்ப் பேக - கொல்லும் போரினைப் புரியும் பேகனே, சீறியாழ் செவ்வழி பண்ணி - சிறிய யாழில் செவ்வழியாகப் பண்ணி இசைத்து, நின் வன்புல நன்னாடு பாட - உன்னுடைய வலிய நாடான மலைநாட்டைப் பாட, என்னை நயந்து பரிசில் நல்குவையாயின் - என்னை விரும்பி நீ பரிசில் தருவாயாயின், குரிசில் - தலைவனே, நீ நல்காமையின் - நீ அருள் புரியாமையால், நைவரச் சாஅய் - கண்டவர்கள் இரங்க மெலிந்து (சாஅய் - அளபெடை), அருந்துயர் உழக்கும் - அரிய துயரத்தால் வருந்தும், நின் திருந்திழை அரிவை - திருந்திய அணிகலன் அணிந்த உன்னுடைய இளைய மனைவி, கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன - தழைத்த மயிலின் தோகை காற்றில் குவிந்தாற்போல், ஒலிமென் கூந்தல் - அடர்ந்த மென்கூந்தல், கமழ் புகை கொளீஇ - மணம் கமழும் புகையை ஊட்டி (கொளீஇ - அளபெடை), தண் கமழ் கோதை புனைய - குளிர்ந்த மணங்கமழும் மாலையை அணிய, வண் பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே - விரைந்து செல்லும் குதிரைகளை உன்னுடைய உயர்ந்த தேரில் பூட்டுவாயாக (மாவே - ஏகாரம் அசைநிலை)