புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 143

யார்கொல் அளியள்!


யார்கொல் அளியள்!

பாடியவர் :

  கபிலர்.

பாடப்பட்டோன் :

  வையாவிக் கோப்பெரும் பேகன்.

திணை :

  பெருந்திணை.

துறை :

  குறுங்கலி; தாபதநிலையும் ஆம்.


பாடல் பின்னணி:

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பேகன் வேறு ஒரு பெண்ணிடம் உறவு கொண்டதால் தன் மனைவியைப் பிரிந்திருந்தான். அப்பொழுது கபிலர் அவனைக் கண்டு இவ்வாறு பாடினார்.

“மலைவான் கொள்க!” என உயர் பலி தூஉய்,
“மாரி ஆன்று மழை மேக்கு உயர்க” எனக்
கடவுள் பேணிய குறவர் மாக்கள்,
பெயல் கண் மாறிய உவகையர் சாரல்
புனத் தினை அயிலும் நாட! சினப் போர்க் . . . . [05]

கைவள் ஈகைக் கடு மான் பேக!
யார் கொல் அளியள் தானே, நெருநல்
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி
நளி இருஞ்சிலம்பின் சீறூர் ஆங்கண், . . . . [10]

வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
நின்னும் நின் மலையும் பாட, இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்,
முலையகம் நனைப்ப விம்மிக்,
குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே . . . . [15]

பொருளுரை:

தங்கள் மலையை மழை வந்து சூழ வேண்டும் என்று மிக்க பலியைத் தூவி, பின் மழை மிகுதியாகப் பெய்ததால் முகில்கள் மேலே போகவேண்டுமெனக் கடவுளைப் போற்றிய மலைக் குறவர்கள், மழையின் நிலைமை மாறியதால் உவகை அடைந்தவர்களாய், மலைச் சரிவில் புனத்தில் விளையும் தினையை உண்ணும் நாடனே!

சினத்தினால் செய்யும் போரையும், கொடைத் தன்மையும் உடைய, விரைந்து செல்லும் குதிரைகளையுடைய பேகனே! யார் அந்த அளியத்தக்கவள்? நேற்று, சுரத்தில் நடந்து வருந்திய என்னுடைய சுற்றத்திற்கு ஏற்பட்ட பசியினால், கோலால் அடிக்கப்பட்ட முரசைப்போல் ஒலிக்கும் அருவியையுடைய பெரிய உயர்ந்த மலையையுடைய சிற்றூரில், உன் வாயிலில் தோன்றி உன்னையும் உன் மலையையும் வாழ்த்தி நான் பாடினேன். அப்பொழுது வருந்தி வடித்த கண்ணீரை அவள் நிறுத்தவில்லை. தன்னுடைய முலைகள் நனைய விம்மி அழுது, குழல் ஒலிப்பதுபோல் மிகவும் அழுதாள்.

குறிப்பு:

ஒளவை துரைசாமி உரை - பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை அவனோடு கூட்டலுறுவார் அருளப்பண்ண வேண்டும் என இரந்துகொண்டு கூறினமையின் குறுங்கலி ஆயிற்று. நற்றிணை 113 - பெருங்களத்து இயவர் ஊதும் ஆம்பல் அம் குழலின் ஏங்கி கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே. நற்றிணை 165 - அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக் கடவுள் ஓங்கு வரை பேண்மார் வேட்டு எழுந்து கிளையொடு மகிழும் குன்ற நாடன்.

சொற்பொருள்:

மலைவான் கொள்க என - மலையை மழை வந்து சூழ வேண்டும் என்று, உயர் பலி தூஉய் - மிக்க பலியைத் தூவி (தூஉய் - அளபெடை), மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என - மழை மிகுதியாகப் பெய்ததால் முகில்கள் மேலே போகவேண்டுமென, கடவுள் பேணிய குறவர் மாக்கள் - கடவுளைப் போற்றிய மலைக் குறவர்கள் (குறவர் மாக்கள் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை), பெயல் கண் மாறிய உவகையர் - மழை மாறியதால் உவகை அடைந்தவர்கள், சாரல் புனத் தினை அயிலும் நாட - மலைச் சரிவில் புனத்தில் விளையும் தினையை உண்ணும் நாடனே, சினப் போர்க் கைவள் ஈகைக் கடு மான் பேக - சினத்தினால் செய்யும் போரையும் கொடைத் தன்மையும் உடைய விரைந்து செல்லும் குதிரைகளையுடைய பேகனே, யார் கொல் அளியள் தானே - யார் அந்த அளியத்தக்கவள், நெருநல் - நேற்று, சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தென - சுரத்தில் நடந்து வருந்திய என்னுடைய சுற்றத்திற்கு ஏற்பட்ட பசியினால் (சுரன் - சுரம் என்பதன் போலி), குணில் பாய் முரசின் - கோலால் அடிக்கப்பட்ட முரசைப்போல் முரசின் - இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது, இரங்கும் அருவி - ஒலிக்கும் அருவி, நளி இருஞ்சிலம்பின் சீறூர் - பெரிய உயர்ந்த மலையையுடைய சிற்றூர், ஆங்கண் - அங்கே, வாயில் தோன்றி வாழ்த்தி நின்று நின்னும் நின் மலையும் பாட - உன் வாயிலில் தோன்றி உன்னையும் உன் மலையையும் வாழ்த்தி நான் பாடினேன், இன்னாது இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் - அப்பொழுது வருந்தி வடித்த கண்ணீரை அவள் நிறுத்தவில்லை, முலையகம் நனைப்ப விம்மி - முலைகள் நனைய விம்மி அழுது, குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே - குழல் ஒலிப்பதுபோல் மிகவும் அழுதாள் (பெரிதே - ஏகாரம் அசைநிலை)