புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 075

அரச பாரம்!


அரச பாரம்!

பாடியவர் :

  சோழன் நலங்கிள்ளி

திணை :

  பொதுவியல்

துறை :

  பொருண்மொழிக் காஞ்சி

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால் தர வந்த பழ விறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடி புரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே, . . . . [05]

மண்டு அமர்ப் பரிக்கும் மதனுடை நோன் தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ் நீர்
அறு கய மருங்கின் சிறு கோல் வெண்கிடை
என்றூழ் வாடு வறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே, மையற்று . . . . [10]

விசும்புற ஓங்கிய வெண்குடை
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே.

பொருளுரை:

தன் குடியில் உள்ள மூத்தவர்களைக் கூற்றுவன் கொண்டு சென்றதால் (அவர்கள் இறந்ததால்), விதி கொடுக்கத் தன்னிடம் முறைப்படி வந்த, பழைய வெற்றிகளால் உண்டான தன் குடியின் அரச உரிமையை அடைந்து ‘இப்பெரும் சிறப்பை நான் பெற்றேன்’ என்று எண்ணி குடிமக்களிடம் மிகுதியாக வரி கேட்கும் ஆண்மை மிகுதியாக இல்லாத சிறியோனாக ஒருவன் இருந்தால், அது சிறப்பானது இல்லை. அந்த அரச உரிமை அவனுக்குப் பாரமுடையதாக இருக்கும்.

போரில் துணிந்து போரிடும் மன எழுச்சியையும் வலுவான முயற்சியையும் உடைய ஓர் உயர்ந்தவன், அரச உரிமையைப் பெறுவான் ஆயின், ஆட்சி செய்வது, குறைந்த நீரையுடைய வற்றிய குளத்திடத்து மிதக்கும் சிறிய தண்டாகிய வெளிய (எடை இல்லாத) நெட்டியினது கோடைக்காலத்தில் உலர்ந்த சுள்ளியைப் போல் மெல்லிதாக, பாரம் இல்லாமல் இருக்கும். குற்றம் இல்லாத, வானைத் தொடும் அளவிற்கு உயர்ந்த வெண்குடையையும் முரசினையும் உடைய அரசரது ஆட்சியைப் பொருந்திய செல்வம் அதுவே.

குறிப்பு:

விழுமம் - விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57). சிறு கோல் வெண்கிடை என்றூழ் வாடு வறல் போல. சிறு கோல் வெண்கிடை என்றூழ் வாடு வறல் போல (8-9) - ஒளவை துரைசாமி உரை, உ. வே. சாமிநாதையர் உரை - சிறிய தண்டாகிய வெளிய கிடேச்சியினது கோடைக்கண் உலர்ந்த சுள்ளியைப் போல. மையற்று விசும்புற ஓங்கிய வெண்குடை (10-11) - ஒளவை துரைசாமி உரை, உ. வே. சாமிநாதையர் உரை - குற்றமற்று விண்ணின்கண் பொருந்த உயர்ந்த வெண்குடை.

சொற்பொருள்:

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென - தன்னுடைய குடியில் உள்ள மூத்தவர்களைக் கூற்றுவன் கொண்டு சென்றதால் (அவர்கள் சாவை அடைந்ததால்), பால் தர - விதி கொடுக்க, வந்த - தம்மிடம் வந்த, பழ விறல் - பழைய வெற்றி, தாயம் எய்தினம் ஆயின் - அரச உரிமையை அடைந்தோம் ஆயின், எய்தினம் சிறப்பு என - இத் தலைமையை நாம் பெற்றோம் என்று, குடி புரவு இரக்கும் - குடிமக்களிடம் வேண்டி கேட்கும், கூரில் ஆண்மைச் சிறியோன் பெறின் - மிகுதியில்லாத ஆண்மையுடைய சிறியோன் பெற்றால், அது சிறந்தன்று - அது சிறந்ததன்று (சிறந்ததன்று, தகரம் செய்யுள் விகாரத்தாற் கெட்டுச் சிறந்தன்று என நின்றது), மன்னே - மன் ஆக்கத்தின்கண் வந்த இடைச்சொல், ஏ அசைநிலை, மண்டு அமர்ப் பரிக்கும் - அடுத்து போரிடும் போரைப் பொறுக்கும், மதனுடை நோன் தாள் - மன எழுச்சியை உடைய வலுவான முயற்சி, விழுமியோன் பெறுகுவன் ஆயின் - உயர்ந்தவன் பெறுவான் ஆயின், தாழ் நீர் அறு கய மருங்கின் - குறைந்த நீரையுடைய வற்றிய குளத்திடத்து, சிறு கோல் வெண்கிடை - சிறிய தண்டாகிய நெட்டி, சிறிய தண்டாகிய சிறிய தண்டாகிய கிடேச்சி (மிதக்கும் தன்மையுடையது), என்றூழ் - கோடைக்காலம், கதிரவன், வெயில், வாடு வறல் போல - உலர்ந்த சுள்ளியைப் போல, நன்றும் நொய்தால் (நொய்து + ஆல், ஆல் அசைநிலை) - மிகவும் வெளிய, மிகவும் மெல்லியது, பாரம் இல்லாதது, அம்ம - அசைநிலை, தானே - தான், ஏ அசைநிலைகள், மையற்று - குற்றம் இல்லாத, விசும்பு உற ஓங்கிய - வானைத் தொடும் அளவிற்கு உயர்ந்த, வெண்குடை - வெண்குடை, முரசு கெழு வேந்தர் - முரசினையுடைய அரசர், அரசு கெழு திருவே - அரசாட்சி உடைய செல்வம்