புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 056

கடவுளரும் காவலனும்!


கடவுளரும் காவலனும்!

பாடியவர் :

  மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்; (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்).

பாடப்பட்டோன் :

  பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.

திணை :

  பாடாண்.

துறை :

  பூவை நிலை.

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி மணி மிடற்றோனும்,
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந்நாஞ்சில் பனைக்கொடியோனும்,
மண்ணுறு திருமணி புரையும் மேனி, . . . . [05]

விண் உயர் புள் கொடி விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும், என
ஞாலங் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை நால்வர் உள்ளும், . . . . [10]

கூற்று ஒத்தீயே மாற்று அருஞ் சீற்றம்,
வலி ஒத்தீயே வாலியோனைப்,
புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை,
முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின்,
ஆங்கு ஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும் . . . . [15]

அரியவும் உளவோ நினக்கே அதனால்,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா
யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து, . . . . [20]

ஆங்கு இனிது ஒழுகுமதி ஓங்கு வாள் மாற
அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும், குடதிசைத்
தண் கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! . . . . [25]

பொருளுரை:

காளை மாட்டினை வெற்றியாக உயர்த்திய அழல் போல் ஒளியுடைய சடையினையும் விலக்குதற்கு அரிய மழுவை உடைய நீலமணிபோலும் கழுத்தை உடைய சிவனும், கடலில் வளரும் புரியுடைய சங்கினை ஒத்த மேனியையுடைய கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக் கொடியையுமுடைய பலராமனும், கழுவிய அழகிய நீலமணிபோலும் மேனியையும் வான் அளவிற்கு ஓங்கிய கருடக்கொடியையுடைய வெற்றியை விரும்புவோனும் ஆகிய மாயோனும், நீலமணிபோலும் நிறத்தையுடைய மயிற்கொடியை உயர்த்திய, மாறாத வெற்றியையுடைய பிணிமுகம் என்ற ஊர்தியைக் கொண்ட முருகனும், என உலகத்தைக் காக்கும் முடிவுகாலத்தைச் செய்யும் வலிமையினையும் தோல்வியில்லாத நற்புகழினையுமுடைய இந்த நால்வர் உள்ளும், விலக்க முடியாத சினத்தால் கூற்றுவனை ஒத்தவை, வலிமையில் பலராமனை ஒத்தவை, புகழில் பகைவரைக் கொல்லும் மாயோனை ஒத்தவை, எண்ணியதை முடிப்பதில் முருகனை ஒத்தவை. அப்படி அப்படி அவரவரை ஒத்ததால் எங்கும் அரியவை உளதோ நுமக்கு? அதனால் பரிசில் வேண்டி வருவோர்க்கு பெரிதும் வழங்கி, யவனர் நல்ல குப்பியில் கொண்டு வந்த குளிர்ந்த நறுமணமான தேறலை பொன்னால் செய்த கலத்தில் ஏந்தி, நாள்தோறும் ஒளியுடைய வளையல்கள் அணிந்த பெண்கள் அதை உனக்கு ஊட்ட, மகிழ்ச்சி மிகுந்து இனிதாக இருப்பாயாக, உயர்ந்த வாளை உடைய மாறனே! அங்கே வானின் மிக்க இருளை அகற்றும் வெம்மையான கதிர்களையுடைய கதிரவன் போலவும், மேற்கில் தோன்றும் குளிர்ந்த கதிர்களையுடைய நிலவுபோலும், இவ்வுலகுடன் நீ நின்று நிலைபெறுவாயாக.

குறிப்பு:

பிணிமுக ஊர்தி (8) - ஒளவை துரைசாமி உரை - பிணிமுகம் யானை என்றும் சொல்லுப. மதி - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26). ஈயா - ஈந்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது. யவனர் - அயோனியா என்ற கிரேக்க நாட்டின் பகுதியிலிருந்து வருபவர்களை இச்சொல் குறித்தாலும் இது பின்னால் வந்த ரோமானியர், துருக்கர், எகிப்தியர் ஆகியோரையும் குறித்திருக்கலாம் எனச் சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சொற்பொருள்:

ஏற்று வலன் உயரிய - காளை மாட்டினை வெற்றியாக உயர்த்திய, எரி மருள் அவிர் சடை - அழல் போல் ஒளியுடைய சடை (மருள் - உவம உருபு), மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும் - விலக்குதற்கு அரிய மழுவை உடைய நீலமணியை ஒத்த கழுத்தை உடையவனும் (சிவனும்), கடல் வளர் புரி வளை புரையும் மேனி - கடலில் வளரும் புரியுடைய சங்கினை ஒத்த மேனியையுடைய, அடல் வெந்நாஞ்சில் பனைக்கொடியோனும் - கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக் கொடியையுமுடைய பலராமனும், மண்ணுறு திருமணி புரையும் மேனி - கழுவிய அழகிய நீலமணிபோலும் மேனியையும், விண் உயர் புள் கொடி விறல் வெய்யோனும் - வான் அளவிற்கு ஓங்கிய கருடக்கொடியையுடைய வெற்றியை விரும்புவோனும், மணி மயில் உயரிய - நீலமணிபோலும் நிறத்தையுடைய மயிற்கொடியை உயர்த்திய, மாறா வென்றி பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் - மாறாத வெற்றியையுடைய பிணிமுகம் என்ற ஊர்தியைக் கொண்ட முருகனும் (பிணிமுகம் - மயில், யானை), என - என, ஞாலம் காக்கும் கால முன்பின் - உலகத்தைக் காக்கும் முடிவுகாலத்தைச் செய்யும் வலிமையினையும், தோலா நல் இசை நால்வர் உள்ளும் - தோல்வியில்லாத நற்புகழினையுமுடைய நால்வர் உள்ளும், கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம் - விலக்க முடியாத சினத்தால் கூற்றுவனை ஒத்தவை (ஒத்தீயே - ஏகாரம் அசைநிலை), வலி ஒத்தீயே வாலியோனை - வலிமையில் பலராமனை ஒத்தவை (ஒத்தீயே - ஏகாரம் அசைநிலை), புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை - புகழில் பகைவரைக் கொல்லும் மாயோனை ஒத்தவை (ஒத்தீயே - ஏகாரம் அசைநிலை), முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின் - எண்ணியதை முடிப்பதில் முருகனை ஒத்தவை (ஒத்தீயே - ஏகாரம் அசைநிலை), ஆங்கு ஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும் அரியவும் உளவோ நினக்கே - அப்படி அப்படி அவரவரை ஒத்ததால் எங்கும் அரியவை உளதோ நுமக்கு, அதனால் இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா - பரிசில் வேண்டி வருவோர்க்கு பெரிதும் வழங்கி, யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல் பொன் செய் புனை கலத்து ஏந்தி - யவனர் நல்ல குப்பியில் கொண்டு வந்த குளிர்ந்த நறுமணமான தேறலை பொன்னால் செய்த கலத்தில் ஏந்தி, நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து ஆங்கு இனிது ஒழுகுமதி - நாள்தோறும் ஒளியுடைய வளையல்கள் அணிந்த பெண்கள் ஊட்ட மகிழ்ச்சி மிகுந்து இனிதாக இருப்பாயாக (மதி - முன்னிலையசை), ஓங்கு வாள் மாற - உயர்ந்த வாளை உடைய பாண்டியனே, அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும் வெங்கதிர்ச் செல்வன் போலவும் - அங்கே வானின் மிக்க இருளை அகற்றும் வெம்மையான கதிர்களையுடைய கதிரவன் போலவும், குடதிசைத் தண் கதிர் மதியம் போலவும் - மேற்கில் தோன்றும் குளிர்ந்த கதிர்களையுடைய நிலவுபோலும், நின்று நிலைஇயர் உலகமோடு உடனே - இவ்வுலகுடன் நீ நின்று நிலைபெறுவாயாக (நிலைஇயர் - அளபெடை, உடனே - ஏகாரம் அசைநிலை)