புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 045

தோற்பது நும் குடியே!


தோற்பது நும் குடியே!

பாடியவர் :

  கோவூர் கிழார்.

பாடப்பட்டோன் :

  சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும்.

திணை :

  வஞ்சி.

துறை :

  துணை வஞ்சி.


பாடல் பின்னணி:

உறவினர்களான சோழன் நலங்கிள்ளிக்கும் சோழன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. நலங்கிள்ளி உறையூரை முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளி உள்ளே அடைபட்டு இருந்தான். சோழர் குலத்தில் தோன்றிய இருவரும் போரிடுவது ஏற்றதில்லை என்று கோவூர் கிழார் அவர்களிடம் எடுத்துரைக்கின்றார்.

பாண்டிய மன்னர்கள் வேப்ப மாலையை அணிந்தனர். சேர மன்னர்கள் பனை இலையினால் (மடலினால்) செய்த மாலையை அணிந்தனர். சோழ மன்னர்கள் ஆத்தி மலர் மாலையை அணிந்தனர்.

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்,
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்,
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே,
ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே, . . . . [05]

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே, அதனால்
குடிப்பொருள் அன்று நும் செய்தி, கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும் இவ் விகலே.

பொருளுரை:

பெரிய பனை மரத்தினது வெண்மை நிறம் கொண்ட குருத்து இலை மாலை அணிந்தவன் இல்லை (சேர மன்னனைப் போல்). கரிய கிளைகளையுடைய வேம்பின் மாலை அணிந்தவன் இல்லை (பாண்டிய மன்னனைப் போல்). உன்னுடைய மாலையும் ஆத்தி மலர்களால் நெருக்கமாகக் கட்டப்பட்டது. உன்னுடன் போரிடுபவன் மாலையும் ஆத்தி மலர்களால் நெருக்கமாகக் கட்டப்பட்டது. இப்பகையினால் உண்டாகும் போரில், ஒருவர் தோற்றாலும் உங்கள் சோழர் குலம் தோற்றதாக ஆகும். போரில், இருவரும் வெற்றி பெறுவது என்பது இயலாதது. உங்களது குலத்திற்குப் பொருந்தாதது உங்களுடைய இந்தச் செய்கை. அழகிய கொடியால் அலங்கரிக்கப்பட்ட தேர்களைக் கொண்ட உங்களைப் போன்ற பிற மன்னர்களுக்கு (சேர, பாண்டிய மன்னர்களுக்கு) உடல் பூரிக்கும்படி மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் உங்களது இந்தப் பகைமை.

குறிப்பு:

நின்ன (3) - ஒளவை துரைசாமி உரை - நின கண்ணியுமென்பது நின்ன கண்ணியுமென விகாரமாயிற்று.

சொற்பொருள்:

இரும் பனை - பெரிய பனை மரம், வெண்தோடு - வெள்ளை நிற இலை, மலைந்தோன் அல்லன் - அணிந்தவன் இல்லை, கருஞ்சினை - கரிய கிளைகளையுடைய, வேம்பின் - வேப்ப மரத்தின், தெரியலோன் அல்லன் - மாலை அணிந்தவன் இல்லை (தெரியல் - பூ மாலை), நின்ன கண்ணியும் - உன்னுடைய மாலையும், ஆர் மிடைந்தன்றே - ஆத்தி மலர்களால் நெருக்கமாகக் கட்டப்பட்டது (மிடைந்தன்றே - ஏகாரம் அசைநிலை), நின்னொடு பொருவோன் - உன்னுடன் போரிடுபவன், கண்ணியும் - மாலையும், ஆர் மிடைந்தன்றே - ஆத்தி மலர்களால் நெருக்கமாக கட்டப்பட்டது (மிடைந்தன்றே - ஏகாரம் அசைநிலை), ஒருவீர் தோற்பினும் - உங்களில் ஒருவர் தோற்றாலும், தோற்ப - தோற்பது, நும் குடியே - உங்கள் குலம் தான் (சோழர் குலம்), இருவீர் - இருவர், வேறல் - வெல்லுதல், இயற்கையும் அன்றே - இயற்கையும் இல்லை (ஏகாரம் அசைநிலை), அதனால் - அதனால், குடிப் பொருள் - குடிக்கு ஏற்றது, அன்று - இல்லை, நும் செய்தி - உங்கள் செய்கை, கொடித்தேர் - கொடியுடைய தேர்களைக் கொண்ட, நும்மோர் அன்ன - உங்களைப் போன்ற, வேந்தர்க்கு - பிற மன்னர்களுக்கு (சேரர், பாண்டியர்), மெய் - உடம்பு, மலி உவகை - மிகுந்த மகிழ்ச்சி, செய்யும் - செய்யும், இவ் - இந்த, இகலே - பகைமை (ஏகாரம் அசைநிலை)