புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 008

கதிர்நிகர் ஆகாக் காவலன்!


கதிர்நிகர் ஆகாக் காவலன்!

பாடியவர் :

  கபிலர்.

பாடப்பட்டோன் :

  சேரமான் கடுங்கோ வாழியாதன் - சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பவனும் இவனே.

திணை :

  பாடாண்.

துறை :

  இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.


பாடல் பின்னணி:

கதிரவனுடன் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனை ஒப்பிட்டு, கதிரவன் சேரமானுக்கு இணை இல்லை என்று கூறுகின்றார் கபிலர்.

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப், பொதுச் சொல் பொறாஅது,
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்
கடந்து அடு தானைச் சேரலாதனை . . . . [05]

யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம்,
பொழுது என வரைதி, புறக்கொடுத்து இறத்தி,
மாறி வருதி, மலை மறைந்து ஒளித்தி,
அகல் இரு விசும்பினானும்
பகல் விளங்குதியால் பல் கதிர் விரித்தே? . . . . [10]

பொருளுரை:

விரைந்து செல்லும் கதிரவனே! உலகத்தைக் காக்கும் மன்னர்கள் தனக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்ற இன்பத்தை விரும்பி, இவ்வுலகம் யாவர்க்கும் பொது என்ற சொல் பொறுக்காமல், தன்னுடைய நாடு சிறியது என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, ஊக்கமுடைய உள்ளத்துடன் குறையாத ஈகையுடனும் பகைவரை வெல்லும் படையையுடைய சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு நீ எவ்வாறு ஒப்பு ஆகுவாய்?

நீ பகற்பொழுதை உனக்கென்று கூறுபடுத்துகின்றாய். பின் புறமுதுகிட்டு போகின்றாய். மாறி மாறி வருகின்றாய். மலையின் பின் மறைந்து ஒளிகின்றாய். அகன்ற பெரிய ஆகாயத்தில் பகல் பொழுதில் பல கதிர்களை விரித்து ஒளியுடன் விளங்குகின்றாய்.

குறிப்பு:

பொழுது என வரைதி (7) - ஒளவை துரைசாமி உரை - என்பதற்கு காலத்தை பல பொழுதுகளாக (சிறுபொழுது பெரும்பொழுதுகளாக) வகுத்தற்கு ஏதுவாகுவை என்று உரைப்பினும் அமையும் உரை கிடந்தவாறே கொள்ளுமிடத்து. பகற்பொழுது நினக்கென கூறுபடுக்கும் நீ அப்பகல் போதில்தான் பல் கதிர்களையும் பரப்பி விளங்குவை என்றதாகக் கொள்க.

சொற்பொருள்:

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக - உலகத்தைக் காக்கும் மன்னர்கள் தனக்குப் பணிந்து நடக்க, போகம் வேண்டி - இன்பத்தை விரும்பி, பொதுச் சொல் பொறாஅது - இவ்வுலகம் யாவர்க்கும் பொது என்ற சொல் பொறுக்காமல் (பொறாஅது - அளபெடை), இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப - தன்னுடைய நாடு சின்னது என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, ஒடுங்கா உள்ளத்து - ஊக்கமுடைய உள்ளத்துடன், ஓம்பா ஈகைக் கடந்து அடு தானைச் சேரலாதனை யாங்கனம் ஒத்தியோ - குறையாத ஈகையுடனும் பகைவரை வெல்லும் படையையுடைய சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு நீ எவ்வாறு ஒப்பு ஆகுவாய் (ஒத்தியோ - ஒத்தி - முன்னிலை வினைமுற்று, ஓகாரம் வினா), வீங்கு செலல் மண்டிலம் - விரைந்து செல்லும் கதிரவனே, பொழுது என வரைதி - பகற்பொழுதை உனக்கென்று கூறுபடுத்துகின்றாய் (வரைதி - முன்னிலை வினைமுற்று), புறக்கொடுத்து இறத்தி - புறமுதுகிட்டு போகின்றாய் (இறத்தி - முன்னிலை வினைமுற்று), மாறி வருதி - மாறி மாறி வருகின்றாய் (வருதி - முன்னிலை வினைமுற்று), மலை மறைந்து ஒளித்தி - மலையின் பின் மறைந்து ஒளிகின்றாய் (ஒளித்தி - முன்னிலை வினைமுற்று), அகல் இரு விசும்பினானும் பகல் விளங்குதியால் பல் கதிர் விரித்தே - அகன்ற பெரிய ஆகாயத்தில் பகல் பொழுதில் பல கதிர்களை விரித்து ஒளியுடன் விளங்குகின்றாய் (விளங்குதியால் - ஆல் அசைநிலை, விரித்தே - ஏகாரம் அசைநிலை)