புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 005

அருளும் அருமையும்!


அருளும் அருமையும்!

பாடியவர் :

  நரிவெரூஉத் தலையார்.

பாடப்பட்டோன் :

  சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல்.

திணை :

  பாடாண்.

துறை :

  வெவியறிவுறூஉ, பொருண் மொழிக் காஞ்சியும் ஆம்.


பாடல் பின்னணி:

தன்னைக் காண்போருக்கு நலம் விளைவிக்கும் தோற்றச் சிறப்பு மிக்க கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்டு உடல் நலம் பெற்ற நரிவெரூ உத்தலையார், அவனது தோற்றப் பொலிவை வியந்து, தனக்குச் செய்தது போலப் பிறர்க்கும் இன்பம் செய்யும் இயல்பு குன்றாதிருக்க, தீய எண்ணம் உள்ளவர்களோடு சேராமல் ஆளும் நாட்டினைக் குழந்தையைப் போல் பாதுகாக்குமாறு அறிவுறுத்தி இயற்றிய பாடல் இது.

எருமை அன்ன கருங்கல் இடைதோறும்
ஆனின் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்,
அருளும் அன்பும் நீக்கி நீங்கா . . . . [05]

நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி,
அளிதோ தானே அது பெறல் அருங்குரைத்தே.

பொருளுரை:

எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே!

நீ இவ்வாறு வளமும், சிறப்பும் பெற்றவனாக இருப்பதால் உனக்கு ஒன்று சொல்கிறேன். கேட்பாயாக! அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உனது நாட்டை, ஒரு குழந்தையை வளர்ப்பவர்கள் அக்குழந்தையைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக. அளிக்கத் தக்கது அக்காவல். அத்தகைய காக்கும் வாய்ப்பைப் பெறுவது அரியதாகும்.

குறிப்பு:

ஒளவை துரைசாமி உரை - அருளும் அன்பும் நீக்கி, நீங்கா நிரயங் கொள்பவரொடு ஒன்றாது என்றமையால் பொருண்மொழிக் காஞ்சி ஆயிற்று. மதி - மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26). அளிதோ தானே (8) - ஒளவை துரைசாமி உரை - அளிக்கத்தக்கது ஒன்று அதன் காவல், உ. வே. சாமிநாதையர் உரை - அளிக்கத்தக்கது ஒன்று அதன் காவல். அளிதோ தானே என்ற சொற்கள் வரும் பாடல்கள் (புறநானூறு 109-1, 111-1, 243-11) பிறவற்றில் இவ்விரு அறிஞர்களும் ‘இரங்கத்தக்கது அது’ என பொருள் கூறியுள்ளனர். குரை - ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைய என்ப (தொல்காப்பியம், இடையியல் 24).

சொற்பொருள்:

எருமை - எருமை மாடுகள், அன்ன - போல, கருங்கல் - கரிய கற்கள், இடைதோறும் - இடங்கள் எல்லாம், ஆனின் - மாடுகளைப் போல், பரக்கும் - பரவியிருக்கும், யானைய - யானைகள் உடைய, முன்பின் - வலிமையான, கானக - காடுகளை அகத்தே கொண்ட, நாடனை - நாட்டினை உடையனாய் (நாடனை - ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது), நீயோ - நீ தான் (ஓகாரம் அசைநிலை), பெரும - பெருமகனே, நீயோர் ஆகலின் - நீ இவ்வாறு இருப்பதால், நின் - உனக்கு, ஒன்று - ஒன்று மொழிவல் - சொல்கிறேன், அருளும் - நெஞ்சில் ஈரமும், அன்பும் - அன்பும், நீக்கி - விலக்கி, நீங்கா - நீங்காத, நிரயம் - நரகம், கொள்பவரொடு - இடமாகக் கொள்பவரோடு, ஒன்றாது - சேராமல், காவல் - காக்கும் நாட்டை, காவல் - ஆகுபெயர் காக்கப்படும் நாட்டிற்கு, குழவி - குழந்தை, கொள்பவரின் - வளர்ப்பவர்களைப் போல் (இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), ஓம்புமதி - பாதுகாப்பாயாக (மதி முன்னிலையசை), அளிதோ தானே - அளிக்கத் தக்கது அக்காவல் (அளிதோ - ஓகாரம் அசைநிலை, தானே - தான், ஏ அசைநிலைகள்), அது பெறல் - அத்தகைய காக்கும் வாய்ப்புப் பெறுவது, அருங்குரைத்தே - அரியது ஆகும் (அருங்குரைத்தே - குரை என்னும் இடைச்சொல் குறிப்பு வினைமுற்றாக ஆயிற்று, ஏகாரம் அசைநிலை)